Q ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு அக்கட்சி, பன்சலகளை மறந்து செயற்பட்டமையே காரணமென்பது பெரும்பாலானோரின் கருத்தாகவுள்ளது. ஐ.தே. கட்சியின் உயர்மட்டத்தினரும் இக்கருத்துடன் உடன்படுவதாகவே தெரிகிறது. இதில் உண்மை உண்டா?
நான் ஒரு பெளத்தர் அல்லாவிட்டாலும் அதே கருத்துடன் நீண்டகாலம் உடன்பாடுடையவன் என்ற வகையில், 2005 ஆம் ஆண்டு எங்கள் மீது புலி முத்திரை குத்தப்பட்ட போதும் கூட நான் தேசிய சிந்தனை குறித்தே பேசிவந்தேன்.
டீ.எஸ்.சேனநாயக்கவின் காலத்திலிருந்தே இக்கட்சி தேசியத்திற்காகப் பணியாற்றிய ஒரு கட்சியாகும். இந்நாட்டின் பிரதான இனத்தைக் காட்டிக்கொடுக்கும் கட்சியாக செயற்பட்டதேயில்லை. இப்போது இக்குற்றச்சாட்டு எம்மீது தொடுக்கப்படுகின்றபோதிலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளவதற்கில்லை.
நாம் பன்சலைகளை மறந்தமைக்கோ அல்லது சிங்கள பெளத்தர்களைப் புறக்கணித்தமைக்கோ எத்தகைய ஆதாரங்களும் இல்லை.
நாம் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போது சர்வதேச மட்டத்தில் எமது நாட்டின் நற்பெயர் மிகவும் மோசமான நிலைக்கே தள்ளப்பட்டிருந்தது. சிங்கள இனம் குறித்த பல்வேறு தப்பபிப்பிராயங்களும் வெளிநாடுகளில் பரப்பப்பட்டிருந்தன. அத்தகைய அவப்பெயர்களையெல்லாம் நாம் மாற்றியமைத்தோம். மஹிந்த ராஜபக் ஷவுக்குக் கூட தன்மானத்துடன் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதற்கும் நாமே வழியமைத்துக்கொடுத்தோம். 2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கம் பெளத்த மதத்திற்கு எத்தகைய சேவைகளும் செய்யவில்லையா என்று தான் நாம் கேட்கிறோம்? நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் எனது தொகுதியிலுள்ள பன்சலைகளுக்கு கடந்த அரசாங்கத்தில் 20 ஆண்டுகள் வழங்கிய சேவைகளை விடவும் மேலதிகமான பணிகள் எமது குறுகிய காலத்தில் நிறைவேற்றிக்கொடுத்துள்ளேன்.
இன்றைய அரசு, ஊடகங்களை நன்கு பயன்படுத்தி மக்கள் தலைகளில் பொய்களைப் புகுத்தியுள்ளது. அதன் விளைவே இவ்வாறான சந்தேகங்கள் எழுப்பக்காரணமாகும். மேற்படி தரப்பினர், தேர்தல் ஒன்று நெருங்கும்போது இனவாதம், மதவாதங்களைத் தூண்டி குளிர்காய முயல்கின்றனர். அவர்களால் விதைக்கப்படும் இனவாதம், மதவாதங்கள் யாவும் முளைத்து வளரவே செய்கின்றன. நாம் பெளத்த மதத்திற்கு என்ன செய்தோமோ இல்லையோ என்று சிந்திப்பதை விட எமது எதிர்த்தரப்பினரால் விதைக்கப்பட்ட இன, மதவாத விதையால் விளையும் நீண்டகாலப் பாதிப்புக்கள் குறித்து சிந்திக்கவேண்டும். சஹ்ரானின் குண்டுத் தாக்குதல்களை அப்படியே ஐ.தே.கட்சியின் மீதே போட்டு விட்டார்கள். உண்மையிலேயே சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்து வளர்த்தவர்கள் கோத்தாபய ராஜபக் ஷாக்கள்தான். ஐக்கிய தேசியக் கட்சி ஓரினத்திற்கு மாத்திரம் உரிய கட்சியல்ல. நாம் கொள்கை ரீதியாக சகல இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். டீ.எஸ்.சேனநாயக்க காலத்திலிருந்து சிங்கள –பெளத்த மக்களை முன்னிலைப்படுத்தி ஏனைய இனங்களுக்கும் அதே சமத்துவ உரிமை வழங்குவதே எமது கட்சியின் குறிக்கோளாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சமத்துவமுள்ள நாடு ஒன்றே எங்களுக்கு வேண்டும்.
Q இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி விளங்கியது. அந்த வாக்கு வங்கி இப்போது 25 இலட்சத்தால் அள்ளுண்டு போயுள்ளதாகத் தெரிகிறது. மத்திய தர வகுப்பு மக்களே பெரும்பாலும் ஐ.தே.க.விலிருந்து மூழ்கிப்போயுள்ளனரே?
ஐ.தே.கட்சியின் வாக்கு வங்கி அவ்வாறு தாழ்ந்து போகவில்லை யென்றே நான் கூறுகிறேன். இப்போது எங்களுக்கு 30–35 வீதத்திற்கிடைப்பட்ட வாக்கு வங்கியொன்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஐ.தே.க வுக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.
Q வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகளை ஐ.தே.கட்சியின் வாக்கு வங்கிக் கூட்டுக்குள் சேர்க்க முடியாதல்லவா?
அது சரி, நாம் வடக்கு, கிழக்கு வாக்குகளை 20 இலட்சம் எனக் கொள்வோம். அந்த வகையில் 35 இலட்சம் தென்பகுதி மக்களது வாக்குகளாகும். இவை தனியாக ஐ.தே.கட்சிக்குரிய வாக்குகளேயாகும். ஐ.தே.க. தனியாக ஆட்சியமைத்துள்ளது. ஆனால் இப்போது அது முடியாதுள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது சிறியதொரு தளர்வு ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. கட்சி என்ற வகையில் கீழ் மட்டத்திலிருந்து எமது உறுப்பினர்களைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. அண்மைக்காலத்திலிருந்து நாம் எமதூர் பிரதிநிதிகள் குறித்து கவனம் செலுத்தத் தவறியுள்ளோம். அவர்களை ஒன்று திரட்டி செயற்படவும் வழி செய்யவில்லை. தாமரைக் கட்சியில் சமுர்த்தி அதிகாரிகள், கிராம அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகள் போன்றோரை தம் கைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்கி கட்சியை வளர்க்கும் நிலையில் எங்களால் எமது பிரதேச அமைப்பாளர்களைக்கூட கை தூக்கிவிட முடியாது போனமை துரதிர்ஷ்டமேயாகும்.
Q ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலமாக தலைமைத்துவச் சிக்கல் நிலவி வருகின்றது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகக் கூடும் சகல பேச்சுவார்த்தைகளின் போதும் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போகிறது. இத்தகைய கட்சியொன்றால் எப்படி தலைதூக்க முடிகிறது? இவ்வாறு தொடர்ந்தால் கட்சியால் முன்னுக்கு வரமுடியுமா?
முடியவே முடியாதென தெளிவாகக் கூறலாம். ஐ.தே.கவுக்கு இதனை விடவும் பாரிய பிரச்சினைகள் நிரம்பிய வரலாறும் இருந்துள்ளது. ஜே.ஆர். – டட்லி பிரச்சினை, பிரேமதாச – ஜே.ஆர்.பிரச்சினை இதே போன்றே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கட்சிக்குள்ளே பூகம்பங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில் கட்சி ஈடுகொடுத்தே வந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் போல எமது கட்சிக்குள் நடக்கவில்லை. அக்கட்சி உடைந்து போய் வேறு கட்சி தோற்றம் பெற்றுள்ளது. பெயரும் வேறு சின்னமும் வேறாக மாற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிலையானதொரு கொள்கையுமில்லை. எமது கட்சிக்குள் அத்தகைய எதுவும் இல்லை. ஐ.தே.க. என்பது ஒரு கலாசாரமாகும். கட்சிக்குள் ஒரு கட்டுக்கோப்பு காணப்படுகிறது. அதனால் பிரச்சினையின் போது சிலர் பிரிந்து சென்ற போதிலும் கட்சி அழிந்து விடவில்லை. தற்போது உருவாகியுள்ள பிரச்சினை நீண்ட காலமாக இழுபறியாகவே உள்ளது. இது நல்லதல்ல.
எவ்வாறான போதிலும் இதனை எங்களால் தீர்த்துக்கொள்ள முடியும். இந்த நம்பிக்கை எனக்குண்டு. 25 வருடங்களாக தனிநபர் ஒருவரே தொடர்ந்தேர்ச்சையாக தலைமைத்துவம் வகிப்பதென்பது ஒரு நீண்ட கால எல்லையாகும். ரணில் விக்கிரமசிங்க மிகவும் கஷ்டமான காலகட்டங்களில் எல்லாம் சவால்களுக்கு முகம் கொடுத்து இன்று வரையும் கட்சியைப் பேணிப் பாதுகாத்து இந்த நிலையில் வைத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.
எல்லோருக்கும் இயலுமான காலம் ஒன்றுள்ளது. ரணில் ஆற்றலுள்ளவராக இருக்கலாம். ஆனால் அரசியலில் அத்தகைய ஆற்றல்கள் பேணப்படுவது சாத்தியமற்றுப் போயுள்ளது. மனிதர்கள் மத்தியில் மிகவும் நல்லவராக விளங்குவது அரசியலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்றால் கட்சியின் வழிநடத்தலுக்கும் அது மிகவும் முக்கியமாகிறது.
அதனால் தலைவர் ஒருவருக்கு மக்களது வரவேற்பும் மக்களுடனான நெருக்கமும் அவசியமானதாகும். இந்த நிலையிலே கட்சியின் பெரும்பான்மையானோர் கட்சியில் மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றனர். இதற்காக கட்சிக்குள் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை வைத்தே கட்சிக்குள் பிளவேற்படும் என்று சிலர் கருதுகின்றனர்.
கட்சி பிளவுபட வேண்டும் என்று நினைப்போருமுள்ளனர். கட்சியில் மாற்றம் ஒன்று வேண்டும் என்பதே எமது முதலாவது விருப்பமாக உள்ளது. முகங்கள் மாத்திரம் மாற்றப்பட்டால் போதாது. காலத்திற்கேற்ற வகையில் கொள்கைகளிலும் மாற்றங்கள் அவசியமாகின்றன. அதற்குரிய காலம் கனிந்துள்ளது. காலத்திற்குக் காலம் மாற்றம் நிகழ்ந்தே வந்துள்ளது. ஜே.ஆரின் காலத்தில் பாரியதொரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மாற்றப்படவேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் நாம் இப்போதுள்ள நிலை சரியா? அல்லது புதியதொரு முறை குறித்து சிந்திக்க வேண்டாமா? புதிய கொள்கையொன்றை வழிநடத்த வேண்டாமா? இவை குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்படுகின்றன. சகல துறைகளிலும் மாற்றங்களும் புதுப்பித்தல்களும் வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியுள்ளது. இப்போது புதிய குழுவொன்று இதனை முன்னெடுக்க வேண்டும்.
Q ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் ஐ.தே.க. சிக்கலில் உள்ளது. எனவே சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமைப் பதவி கிடைக்காது போனால் எதிர்நோக்கும் தேர்தலில் உங்கள் கட்சி எப்படி முகம் கொடுக்கப் போகிறது? போட்டியிட்டு வெற்றி பெறுவது எப்படிப் போனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக வரமுடியுமா?
இந்த அரசாங்கம் போகிற போக்கில் மூன்றில் இரண்டு பெறுவதென்பது வெறும் கனவுதான். இந்த அரசு மக்களின் மூளையைச் சலவை செய்து கொண்டே பதவிக்கு வந்தது. அப்போதிருந்த எங்களது அரசால் நாட்டை வழி நடாத்த இயலாது, நாம் பதவிக்கு வந்தால் நாட்டை சீராக நடாத்திக் காட்டுவோம், எம்மிடம் முதலீட்டும் திட்டம் இருக்கிறது என்றெல்லாம் ஆசைகாட்டியே அவர்கள் ஆட்சியமைத்தனர். இப்படி வந்தவர்கள் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் திண்டாடுகின்றனர். சீனாவிடமிருந்து கடன் கோருகின்றனர். ஆனால் இன்று சீனாவும் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்தியாவின் பின்னாலும் போகிறார்கள். முதன்முதலாக முன்னெடுத்த கருத்திட்டத்தையும் கைவிட்டுள்ளார்கள். மரக்கறி விலைகளைக் கூட கட்டுப்படுத்தத் தெரியாத இவர்களால் எப்படி மூன்றில் இரண்டைப் பெற முடிகிறது? ஆனால் எமது கட்சி இப்போது போகிற போக்கில் நகர்ந்தால் அவர்கள் இலகுவில் மூன்றில் இரண்டு இலக்கை அடைவது உறுதி. இதனால் நாம் எம்மை சீர்திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கமைய சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைத்து பாரிய மாற்றம் ஒன்றை நிகழ்த்த முன்வந்துள்ளோம். ஐ.தே.க.வும் இக்கூட்டணிக்கு பூரண அதிகாரத்தை வழங்கியுள்ளது. சஜித் தலைமையிலான இக்கூட்டணியே பாராளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளது.
இம்மாதம் ஆரம்பத்தில் இக்கூட்டணி உருவாகிவிடும். அதன் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தையும் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
Q ஐ.தே.க.வின் தலைவராக ரணில் தொடர்ந்து இருப்பார். சஜித் பிரதமர் வேட்பாளராகவும் கூட்டணியின் தலைவராகவும் பணியாற்றுவார். இத்தீர்மானத்தின் மூலம் புதிய மாற்றமெதுவும் இல்லையே?
ரணில் விக்கிரமசிங்க குறுகியகால எல்லை வரை கட்சியின் தலைமைத்துவத்திலிருப்பார். அத்துடன் அவர், கட்சிக்குள்ள அதிகாரங்களை புதிய கூட்டணியிடமும் வழங்குவார். அதன் மூலம் கொள்கை தயாரித்தல், வேட்பாளர் பெயர் பட்டியல் வழங்குவது, தேசிய பட்டியல் தயாரித்தல், பொதுச் செயலாளர் நியமித்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் புதிய கூட்டணியையே வந்தடையும்.
Q இந்த அடிப்படையிலான புதிய கூட்டணி, புதிய பெயரிலும் புதிய சின்னம் ஒன்றிலுமா தோற்றம் பெறப்போகிறது?
ஆம், புதுப்பெயரில் தான் கூட்டணி உதயமாகிறது. ஆனால் சின்னம் குறித்து இரு கருத்துக்கள் நிலவுகின்றன. புதியதொரு சின்னம் அவசியம் என்று ஒரு குழு கருத்து முன்வைக்கிறது. மற்றொரு குழுவோ யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்கிறது. யானைச் சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்குவதற்கு கட்சியால் முடியும். அவ்வாறு இல்லையென்றால் புதிய பெயரில், புதிய சின்னத்தில் கூட்டணி தோற்றம் பெறும். கடந்த தேர்தலில் நாம் தோல்வியுறவில்லை. தோற்கடிக்கப்பட்டோம். அதனால் தான் கட்சியின் சகல அதிகாரங்களும் புதிய கூட்டணியை வந்தடைய வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். ஒழுக்காற்று நடவடிக்கைகள் கூட கூட்டணியிடம் வரவேண்டும். எமது யோசனைகளை சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.
எவரும் பழி வாங்கப்படமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தன்னிடம் பிரிவினைவாதக் குழுவெதுவுமில்லையென்றும் தெரிவித்துள்ளார். தமக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காது போகும் என்று சிறு கூட்டம் ஒன்று நினைப்பதாலேயே தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத்தில் தற்போது பிரதிநிதித்துவம் வகிப்போர் அனைவரும் எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவர் என்று சஜித் மற்றும் நாமும் தீர்மானம் எடுத்துள்ளோம். அதனால் கட்சியின் அனைவரும் ஒன்று பட்டு நடக்கும் கலந்துரையாடல்கள் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு முன்நகரலாம்.
Q சஜித் பிரேமதாச தலைமைத்துவத்துக்குப் பொருத்தமற்றவர் என்றும் அவரிடம் கட்சித் தலைமை ஒப்படைக்கப்படுமானால், கட்சி நாசமாகி விடும் என்றும் ஒரு புறத்திலிருந்து யோசனை முன்வைக்கப்படுகிறதே?
எப்படி அவ்வாறு கூற முடியும்? கடந்த தேர்தல் முடிந்த கையோடு, கடன் ஏற்பட்டுள்ளது. புலிகளைச் சந்திக்கப்போகிறார். அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறார் என்றெல்லாம் கதைகள் பரப்பப்பட்டன. இவையாவும் சேறு பூசும் கதைகள் என்றே நாம் கூறுகிறோம். தலைமைத்துவத்திற்குரிய இலட்சணம் அவரிடமுள்ளது. தலைமையை வழங்காது அவருக்கு அதற்குரிய ஆற்றல் இல்லை என்று எப்படிக் கூறுமுடியும்? பதவி ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அதனை மதிப்பீடு செய்ய முடியும்.
யாப்பு சதி மோசடியின் 52 நாள் ஆட்சியின் போது சஜித்தின் தலைமைத்துவப் பண்பு பளிச்சிடவே செய்தது. அதன்போது பிரதமர் பதவியை ஏற்கும்படி ஜனாதிபதி சுமார் 55 தடவைகள் சஜித்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். சுயநலம் உள்ள ஒருவரென்றால் அப்போதே அதனை ஏற்றிருப்பார்.
அச்சந்தர்ப்பத்திலும் அவர் கட்சியின் நிலைப்பாடு, தலைமைத்துவத்தின் மீதுள்ள பற்று என்பனவற்றுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். அப்போது பல சந்தர்ப்பங்களிலும் அவர் வெளிப்படுத்திய சுபாவங்களே அவர் தலைமைத்துவத்திற்கு அருகதையுடையவர் என்பதை உணர்த்தியதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்குக் கிடைத்த ஒரு மாதகால அவகாசம் போதாது. அத்தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். அவற்றுள் சுமார் 14 இலட்சம் வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடையது. மக்கள் விடுதலை முன்னணி 4 இலட்சம் வாக்குகளைப் பெற்றது.
கோத்தா அணியால் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட தாலேயே கோத்தா வெற்றி பெற்றார். இந்நிலையில் சஜித் பெற்ற வாக்குகளை எண்ணிப்பாருங்கள். தலைமைத்துவ ஆற்றல் இல்லையென்றால் இவ்வளவு தொகை வாக்குகளை அவரால் பெற்றிருக்க முடியுமா? இப்போது இந்த அரசு பெற்ற வாக்கு வங்கியையும் இழந்து வருகிறது. இந்த வாக்குகளையும் சஜித்தால் இப்போது பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.
Q இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவால் வெற்றிபெற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அரசாங்கம் தேர்தலை கிட்டடியில் வைக்காது ஒரு வருடமளவில் காலம் தாழ்த்துமாக இருந்தால் காலம் கடக்கக் கடக்க எமக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வரும். தான் அனுபவமற்ற அரசியல்வாதியென்பதை கோத்தாபய இப்போது நிரூபித்து வருகிறார். எனவே, புதிய கூட்டணி, புதிய கொள்கை, புதுமுகம் என்பவற்றுடன் நாம் களம் இறங்கினால் வெற்றி நிச்சயமாக வந்தடையவே செய்யும். பெப்ரவரி மத்திய பகுதியில் எமது தேர்தல் பிரசாரப் பணியை ஆரம்பிக்கலாம் என்றெண்ணுகிறேன். ஜனாதிபதித் தேர்தலிலும் இழுபறி ஏற்பட்டு இறுதிக் காலகட்டத்திலேயே பிரசாரப்பணியை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று இத்தேர்தலில் நடக்கக்கூடாது என்ற கவலையே உள்ளது. விரைவாக எமது கட்சிப் பிரச்சினைகளும் முடிய வேண்டும்.
அப்போது பெப்ரவரி, மார்ச் மாதத்திற்குள்ளாவது எமது தேர்தல் போராட்டத்தை முன்னெடுக்கலாம். எமது குரல்கள் மக்களிடம் அவசரமாக சென்றடையக் கூடிய முறையொன்று கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் நடந்து கொள்கின்ற முறைகளுக்கு மத்தியில் எமது பிரசார நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது குறித்து புதிதாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அரசின் போக்கு குறித்து, உண்மைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். இந்த வகையில் சஜித்திடம் இப்போது சிறந்த குழுவொன்றுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கின் அரசியல் தலைவர் ஒருவருக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகூடிய பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தமையை ஈண்டு குறிப்பிடலாம்.
Q ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருவது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து, ஜனாதிபதிக்கிருந்த முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்கென்றே தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சஜித் பிரேமதாச தரப்பின் கருத்தென்ன?
நாட்டைச் சீராக்கவும் நாட்டு மக்கள் நலன் கருதியும் கோத்தாபய ராஜபக் ஷ யாப்புத் திருத்தம் கொண்டு வருவாராயின் அதற்கு நாம் நூறுவீதமான ஆதரவைத் தெரிவிப்போம். அதற்காக எப்போதும் தயாராகவே உள்ளோம்.
பதிலாக தனதோ தனது குடும்பத்தின் நலனுக்காகவோ கொண்டு வரும் எந்த யாப்புத் திருத்தத்துக்கும் நாம் உடன்படப் போவதில்லை.-Vidivelli
- நேர்காணல்: கே.சஞ்ஜீவ
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி– அனித்தா
02.02.2020