சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவுக்குவெளியில் கொரோனா வைரஸினால் இரண்டாவது மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
ஹொங்கொங்கைச் சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவராவார். இவர் சீனாவின் வூஹான் நகரிலிருந்து ஹொங்கொங் திரும்பியவராவார். ஹொங்கொங் ஹாம்போகார்டன் பகுதியைச் சேர்ந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். ஏற்கனவே சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இதுவரை இவ்வைரஸ் காரணமாக 425 பேர் பலியாகியுள்ளதுடன் 20471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் 33 மாகாணங்களில் இவ்வைரஸ் பரவியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் சீனாவைத் தவிர 24 நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், கொரோனா வைரஸுக்குட்பட்டுள்ள நோயாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் சீனா இராணுவத்தை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஷங்காய் மற்றும் சென்சேன் பங்குச் சந்தையில் 10 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. அத்தோடு சீனாவுக்கு அவசரமாக முகக்கவசங்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள் தேவைப்படுவதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்