‘பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர், நளீமியா கலாபீடம் அடிப்படை வாதிகளை உருவாக்குகிறது. அதனை மூடிவிட வேண்டும்’ என்றெல்லாம் ஊடக மாநாடுகளில் கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறான கருத்துகள் மூலம் பெரும்பான்மை சமூகத்தை முஸ்லிம்கள் மீது குரோதம் கொள்ளச் செய்து மீண்டும் இனமுறுகல்களைத் தோற்றுவிக்கிறார்’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரிவித்தார்.
அண்மையில் ஞானசாரதேரர் நளீமியா கலாபீடம் தொடர்பில் வெளியிட்ட பொய்யான கருத்துகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ஞானசாரதேரர் முஸ்லிம் சமூகத்தின் மீதான சுயவெறுப்பின் காரணமாகவே இவ்வாறு நளீமியா பட்டதாரிகளை தவறாகக் கூறிவருகிறார். ஞானசாரதேரர் போன்ற இனவாத கருத்துக்களைக் கொண்ட சிலர் நளீமியா கலாபீடத்தை இனவாதப் பார்வையில் நோக்கினாலும் பெரும்பாலான பெரும்பான்மைச் சமூகத்தினர் நளீமியா கலாபீடம் தொடர்பில் நல்லெண்ணத்தையே கொண்டுள்ளார்கள்.
நளீமியாவில் படித்து பட்டம் பெற்றவர்கள் இன்று இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேசத்திலும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். தூதுவர்களாக, பொறியியலாளர்களாக, டாக்டர்களாக, சட்டத்தரணிகளாக பணியாற்றுகிறார்கள்.
அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியின் அடிப்படையில் போட்டிப் பரீட்சைகளில் உயர்தரத்தில் சித்தியடைந்தே இந்தப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இலங்கை அரச உயர்பதவிகளில் இருக்கும் நளீமிகள் ஒரு இனத்துக்கோ, ஒரு சமயத்துக்கோ சேவையாற்றவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றுகிறார்கள். இவர்களை துவேச மனப்பான்மையுடன் நோக்குவதும், கருத்துகள் வெளியிடுவதும் தவறாகும்.
மார்க்க கல்வியையும், அரசின் பல்கலைக்கழக கல்வியையும் உயர் பண்பாடுகளையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கிய ஜாமிஆ நளீமியாவின் கல்வித் திட்டம் இந்நாட்டிற்கு தேவையான நற்பிரஜைகளையே உருவாக்குவதேயன்றி இனவாதிகளையல்ல. அடிப்படைவாதிகளையல்ல என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
நளீமியா பட்டதாரிகள் நேர்மையாகவும் ஊழல்களற்றவர்களாகவுமே செயற்பட்டு வருகிறார்கள். இவர்கள் மீது தவறான பிரசாரங்களை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும். நளீமியாவை மூட வேண்டும் எனக் கோஷமிடுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஞானசார தேரர் நளீமியா கலாபீட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நளீமியாவின் பரந்துபட்ட சேவையை அறிந்து கொள்ள வேண்டும்.
நளீமியா பீடத்தைப் பற்றி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் விதைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்