கொழும்பு, கொம்பனித்தெரு, வேக்கந்தை தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் மக்களது பிரச்சினைகளையும் குறைகளையும் கேட்டறிவதற்கு, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ரேணுக பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்றிருந்தார்.
இதன்போது, தங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக மாளிகாவத்தை அல்லது தெமட்டகொடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீடுகளிலேயே இடங்கள் ஒதுக்கித் தரப்படல் வேண்டுமென்றும், குறித்த வீடுகள், 650 சதுர அடி பரப்பளவு கொண்டவைகளாக இருக்கவேண்டும் என்றும், பைஸர் முஸ்தபாவிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, ஒரு வீட்டுக்கு ஒரு வீடு என்ற அடி ப்படையில் இல்லாதவாறு வழங்கப்பட வேண்டும்.
தற்பொழுது வேக்கந்தையிலுள்ள தொடர் மாடிகளில் ஒரு வீட்டில் மூன்று அல்லது இரண்டு குடும்பங்களாவது வாழ்ந்து வருகின்றன.
இங்குள்ளவர்களின் பிள்ளைகளும் திருமணம் முடித்து இங்கேயே வசிக்கின்றனர். எனவே, இவர்களுக்கும் தனித்தனியான வீடுகள் கையளிக்கப்படல் வேண்டும் என்றும் இதன்போது மக்கள் வேண்டிக்கொண்டனர்.
குறித்த வீடுகள் உடைந்து மனித வாழ்விற்குத் தகுதியற்றவையென, கட்டிட ஆராய்ச்சி நிலையம் கடந்த 3 வருடத்திற்கு முன்பாகவே அறிவித்துள்ளது. இதனால், இக்கட்டிடம் இடிந்து வீழ்ந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாக நேரிடும். ஆகவே, இயற்கை அனர்த்தமொன்று ஏற்படுவதற்கு முன்னர், அரசாங்கம் தங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, இதுவிடயம் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் கலந்தாலோசிப்பதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே பதவிவகிப்பதால், அவர் இதற்கு சிறந்த தீர்க்கமான முடிவை எடுப்பார் என்றும் அம்மக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
வேக்கந்தை தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் 50 வருடங்களுக்கும் மேலாகப் பழைமைவாய்ந்தமையால், இந்த தொடர்மாடிகள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இங்கு 5 மாடிகள் வரை நிர்மாணிக்கப்பட்டு மொத்தம் 114 வீடுகள் உள்ளன.
இத்திட்டம், 1974 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சட்டவிரோதமாகக் குடியேறி பலகையிலான தற்காலிக வீடுகளை நிர்மாணித்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த அரசாங்கம் சட்டவிரோதமாக வாழ்ந்த 50 குடும்பங்களுக்கு மட்டும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மீள்குடியேற்றத் தொடர்மாடித் திட்டமான மட்டக்குளி, ஹேனமுல்லையில் வீடுகளை வழங்கியுள்ளன.
ஏனையவர்களில் எவரும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
வேக்கந்தை தொடர்மாடிக்கான காணியை, நகர அபிவருத்தி அதிகார சபை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், இங்குள்ள 114 வீடுகளையும் அகற்றி, மீள் தொடர்மாடிகளை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர, இங்கு வாழும் 114 வீடுகளில் 650 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியும் உள்ளன.
இந்நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- மினுவாங்கொடை நிருபர்