பிணைமுறி மோசடிகளை மூடிமறைக்கும் ஜனாதிபதி, பிரதமரும் மோசடிக்காரர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரங்களை மறந்து ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டு ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுமே இன்று மோசடிக்காரர்களாகியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. ஆனால் தற்போது அவர்களே அதிலிருந்து பின்வாங்குகின்றனர். இதன் மூலம் ஜனாதிபதியும் பிரதமரும் மோசடிக்காரர்களாகியுள்ளனர். தற்போது வங்கிகளில் பண மோசடிகள் இடம்பெறுவதில்லை. மாறாக மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை மூலம் பணம் கொள்ளையிடப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றியிலேயே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மஹிந்தவுக்கும் கோத்தாபயவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாரும் கேள்வியெழுப்புவதில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அக்கிராசன உரையன்று பாராளுமன்ற சம்பிரதாயப்படி சபாநாயகரும் பிரதமரும் இணைந்தே அவரை வரவேற்றிருக்க வேண்டும். அதுவே வழமையாகப் பின்பற்றப்படும் முறைமையாகும். ஆனால் இம்முறை அவ்வாறு பிரதமரால் ஜனாதிபதி வரவேற்கப்படவில்லை. இதுகுறித்து யாரும் கேள்வியெழுப்பவும் இல்லை.
தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் வேட்பாளர் என்ற தீர்மானத்திற்கமைய பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஒருமித்து முன்னெடுக்கும். இதில் பிளவுகளுக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக ரீதியான கட்சி என்பதாலேயே முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
புதிய அரசாங்கம் ஆட்சிக்குவந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ளன. எமது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு தேர்தல் காலத்தில் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் பல புதிய அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ளன. வீடமைப்பு திட்டங்கள், வைத்தியசாலை கட்டட நிர்மாணப்பணிகள், கம்பெரலிய வேலைத்திட்டம், இலவச மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் என்பன கைவிடப்பட்டுள்ளன. இதனால் பெருமளவான மக்களுக்கு கிடைக்கவிருந்த பயன்கள் கிடைக்காமல் போயுள்ளன.
எமது அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. பல மில்லியன் நிதி உதவியையும் வழங்கியுள்ளது. ஆனால் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அந்நாட்டுக்கு சென்றிருந்த போதிலும் கடனுதவியே வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் வெளிப்படுகின்றது.-Vidivelli