புலனாய்வு பிரிவின் எச்சரிக்கைகளுக்கு அமையவே அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவிப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. புலனாய்வுப் பிரிவினூடாகக் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே ஜனாதிபதி அனைத்து நிர்வாகப் பிரதேசங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை பெரிய குறைபாடல்ல. தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரை ஈடுபடுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்குத் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மாத்திரமே கலந்துகொள்வார்கள்.
பாதுகாப்பு சபை கூட்டத்தின் இரகசியத் தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்பமாட்டாது. அதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே முறையாக மேற்கொள்ளப்படும். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை கொண்டு ஜனாதிபதி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.
பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாத விடயத்தை எதிர்த் தரப்பினர் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தும். முன்னறிவித்தல் விடுக்கப்பட்ட ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை தவிர்க்க முடியவில்லை.தேசிய பாதுகாப்பு விடயங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே பாரிய விளைவுகள் ஏற்பட்டன இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது. நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டே ஜனாதிபதி பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றார். பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்த முடியாது என்றார்.-Vidivelli