சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வேண்டும்
சபையில் இம்ரான் எம்.பி. வலியுறுத்து
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
திருகோணமலை மாவடத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் சுதந்திரமாக சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு 2011ஆம் ஆண்டு முதல் அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதில் ஏழு கிலோமீற்றருக்கு அப்பால் சென்றே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிண்ணியா, மூதூர், ஜமாலியா பிரதேசங்களில் சிறிய படகுகளைக்கொண்டே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏழு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று மீன்பிடிப்பதிலுள்ள சிரமத்தை அமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அத்துடன் இந்த ஏழு கிலோமீற்றர் கட்டுப்பாடு திருகோணமலை உட்பட சில மாவட்டங்களிலேயே நடைமுறையில் உள்ளது. ஆகவே, ஏன் திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு மட்டும் இந்தப் பாகுபாடு. இந்த ஏழு கிலோமீற்றர் எல்லை கணிக்கப்படுவதிலும் பிரச்சினையுள்ளது. படகுகள் புறப்படும் நேரம் கரையிலிருந்து கணிக்கப்படாமல் அவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு அண்மையிலுள்ள கரையிலிருந்தே கணிக்கப்படுகிறது. இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகள் பேணப்பட வேண்டும்.
ஆகவே, சிறிய படகுகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஏழு கிலோமீற்றர் என்ற எல்லையை குறைக்க வேண்டும். அல்லது இந்தப் பிரதேசங்களில் இறங்குதுறை அமைத்து அவர்களுக்கு மானிய விலையில் பலநாள் படகுகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அத்துடன் சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதிலும் முறையான ஒழுங்குமுறை இல்லை. சில வருடங்கள் எட்டு மாதங்களுக்கும், சில வருடங்கள் பத்து மாதங்களுக்குமென வழங்கப்படுகிறது. ஆகவே இதுவும் ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் வழங்க வேண்டும்.
கடும் மழை, வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது மீனவர்கள் மாதக்கணக்கில் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே இக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணங்களைப் போல் மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் வந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் எமது நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வது போன்றே வெளியூர் மீனவர்கள் எமது திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் எமது மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.
இதனால் மீனவர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு குறிப்பாக குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் அவர்களின் படகுகள் எரியூட்டப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே வெளியூர் மீனவர்கள் எமது மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்ப மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.-Vidivelli