தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாது திரும்பி அனுப்பப்பட்ட சம்பவம் அண்மையில் பொலிஸாரை விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தது.
சிங்கள நாளிதழின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவர் முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்குச்சென்றார். ஆனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்றுக் கொள்ள வில்லை. இதனையடுத்து தான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவரால் நுகேகொட பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் துன்பங்கள் விளைவிக்கப்பட்டால், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அது தொடர்பில் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்வதற்கு இருக்கும் இடமே பொலிஸ் நிலையமாகும். சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கவே பொலிஸ் நிலையங்கள். இந்நிலையங்கள் மக்களுக்கு சுயாதீனமாகச் சேவையாற்ற வேண்டும்.
பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்ளக் கூடாது. சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படவேண்டும். ஆனால் முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நடந்து கொண்டவிதம் இவற்றிலிருந்தும் முற்றும் மாறுபட்டதாகும்.
பெண் ஊடகவியலாளரின் முறைப்பாடு பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரின் மரண அச்சுறுத்தலாகும். இந்த முறைப்பாடு மிகவும் பாரதூரமான முறைப்பாடாகும். பொலிஸார் இந்த முறைப்பாட்டினை ஏற்று விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தை அமுல்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் இங்கு நடந்துள்ளது, முறைப்பாடு ஏற்கப்படாது நிராகரிக்கப்பட்டமையாகும்.
அது மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பெண் அவமானத்துக்கும் அசெளகரியங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏன் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார். அவர் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவருக்குப் பயந்துதான் முறைப்பாட்டினை ஏற்க மறுத்தாரா? என்பது தெரியவில்லை. பொலிஸார் பொது மக்களின் பாதுகாவலர்கள். சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள். குற்றச் செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டியவர்கள். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டவர்களே. பாதுகாப்புக்கான கடமையிலிருந்தும் தவறி விடுகின்றபோது மக்கள் பொலிஸ்துறை மீது நம்பிக்கையை இழப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெண் ஊடகவியலாளர் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான முறைப்பாடு முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்படாமை குறித்து நுகேகொட பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுப்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி நவகமுவவுக்கு எதிராகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையான அறிக்கையொன்று சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட பொலிஸ் பரிசோதகர் நுகேகொட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இதற்கு மேலதிகமாக அரச புலனாய்வுப் பிரிவு இரகசிய பொலிஸ் விசாரணைப் பிரிவு என்பன மூலமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முல்லேரியா நிலையத்தில் மாத்திரமல்ல, நாட்டின் பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் பல்வேறு வகையான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். முறைப்பாடு செய்யச் செல்பவர்கள் மீது அகெளரவமாக பொலிஸார் நடந்து கொள்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று முல்லேரியா பொலிஸ் நிலைய சம்பவம் மாத்திரமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொலிஸ் நிலையங்களில் பொறுப்பான பதவிக்கு வருபவர்கள் உரிய தகுதிகளைப் பெற்றுள்ளவர்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. நாட்டின் எந்தப் பிரஜைக்கும் அநீதி இழைக்கப்படுமாயின் விரைந்து செயற்படுங்கள் என்றே நாம் அவர்களுக்குக் கூற விரும்புகிறோம்.-Vidivelli