அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இல்லாமலிருப்பது பெரும் குறையாகவே இருக்கின்றது. அதனால் எதிர்வரும் தேர்தலில்பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய முஸ்லிம் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் 2015 பொதுத்தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் வந்தவர்களுக்கே அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கத் தீர்மானித்ததனாலே காதர் மஸ்தான் எம்.பிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லையென ராஜாங்க அமைச்சரும் அரசாங்க ஊடக பேச்சாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமையை போக்க எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் அமைச்சரவையில் இல்லாமை பெரும் குறையாகவே இருக்கின்றது.பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. அரசாங்கத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள். இருந்தபோதும் அரசாங்கம் ஆட்சிக்குவந்து இரண்டு மாதங்களை நெருங்கியிருக்கின்ற நிலையில் முஸ்லிம் மக்களுக்கோ முஸ்லிம் வியாபாரிகளுக்கோ எந்தப் பிரச்சினையுமின்றி, அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த பைஸர் முஸ்தபாவுக்கு அமைச்சுப்பவி வழங்கும்போது அவர் அடுத்துவரும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். அதேபோன்று 2015 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கே அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனால் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கடந்த தேர்தலிலே பாராளுமன்றத்துக்கு தெரிவானதால் அவருக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்க முடியாதநிலை ஏற்பட்டது. அதனால் அவரை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமித்திருக்கின்றோம்.
மேலும், 2010 மற்றும் அதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் எம்முடன் அதிகமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அதனால் தற்போது அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத குறையை உணர்ந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப முஸ்லிம் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்