அமெரிக்க – ஈரான் பதற்ற நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன

0 755

ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டின் தாக்கம் மத்­தி­ய­கி­ழக்கு நாடு­க­ளிலும் தற்­போது செல்­வாக்கு செலுத்­தி­யுள்­ளது. இதன் கார­ணமாக எரி­பொ­ருளின் விலை அதி­க­ரிக்கக் கூடும். பல நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலே அர­சாங்கம் இன்று எரி­பொ­ருளின் விலையைக் குறைந்த விலைக்கு வழங்­கு­கின்­றது. எனினும், அடுத்­து­வரும் சில தினங்­களில் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­க­லா­மென அமைச்­ச­ரவை பேச்­சாளர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அண்­மைக்­கா­ல­மாக ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இதன் தாக்கம் மத்­தி­ய ­கி­ழக்கு நாடு­க­ளிலும் செல்­வாக்கு செலுத்தும். இந்­நி­லை­மை­யினால் எரி­பொருள் பற்­றாக்­குறை மற்றும் எரி­பொருள் விலை­யேற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம். இந்­நி­லை­மையை முகா­மைத்­துவம் செய்யத் தற்­போது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம்.

20 நாட்­­க­ளுக்குப் போது­மா­ன­ள­வி­லான எரி­பொருள் மாத்­தி­ரமே தற்­போது களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் உள்­ளது. நாட்டு மக்­களின் பாவ­னைக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. இந்­நி­லை­மையை அர­சாங்கம் முறை­யாகக் கையாளும். தற்­போது எரி­பொருள் குறைந்த விலை­யிலே வழங்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு அர­சாங்கம் பாரிய நிதியை தற்­போது செல­வி­டு­கின்­றது.

உலக சந்­தையில் எரி­பொ­ருளின் விலை அதி­க­ரிக்­கும்­போது நாம் மாத்­திரம் குறைந்த விலைக்கு எரி­பொ­ருளை விநி­யோ­கிக்க முடி­யாது. சர்­வ­தேச சந்­தையின் விலை நிர்­ண­யத்­திற்கு அமை­யவே எரி­பொ­ருளின் உள்ளூர் விலையைத் தீர்­மா­னிக்­க­மு­டியும். இவ்­வி­ட­யத்தில் ஒரு­போதும் அர­சியல் விட­யங்கள் செல்­வாக்கு செலுத்­த­மு­டி­யாது.

ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் தற்­போது பேச்­சு­வார்த்­தை­யி­னூ­டாக சுமுக நிலைக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. எவ்வாறிருப்பி னும் இரு நாடுகளும் சமாதானமாகவும், நட்புறவுடனும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங்கம் என்ற ரீதியில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.