ஈரான் – அமெரிக்க மோதல் எவ்விதத்திலும் இலங்கைக்கு அச்சுறுத்தலாகாது. அவ்வாறு அழுத்தங்கள் ஏற்படுவதற்கான காரணியும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகச்சிறிய நாடு என்பதால் சர்வதேச பிரச்சினைகளில் தலையிடாது சுமுகமாக செயற்படுவதே சிறந்த வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக பாதிப்பிற்குள்ளான, உயிரிழந்த மிருகங்கள் மற்றும் நபர்களுக்காகப் பிரார்த்திக்கும் மதவழிபாட்டு நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், பயிற்சிப் பாடசாலைகள் போன்றவற்றை உள்ளடக்கி செவ்வாய்க்கிழமை களனி ரஜமஹாவிகாரையில் அதிஷ்டான போதி பூஜை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
கேள்வி: அமெரிக்க – ஈரான் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இதனால் அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுமா?
பதில்: இல்லை. அவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படாது. அவ்வாறு ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளும் இல்லை.
கேள்வி: சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகளவான இலங்கை மக்கள் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா ?
பதில்: சில நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. எனினும் உரிய நேரத்தில் அவை தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிரச்சினைகள் ஏற்படுமென்று நாம் எண்ணவில்லை. எமது நாடு மிகச் சிறியது. எனவே நாம் எந்தப் பிரச்சினைகளிலும் தலையிடாது சுமுகமாக செயற்பட வேண்டும்.
கேள்வி: ஈரான் – –அமெரிக்க மோதலால் இலங்கைக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா?
பதில் : ஈரான் –- அமெரிக்க மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ ஏற்படுத்தாது என்றார்.-Vidivelli