- ஏ.எல்.எம்.சத்தார்
இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பேரினவாதிகளால் 1915ஆம் ஆண்டிலிருந்து நாசகார வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்தன. கடந்த இரு தசாப்தங்களாக இத்தகைய வெறுப்புணர்வு நடவடிக்கைகள் உக்கிரமடைந்தன.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மட்டம் தட்டுவதே இனவாதிகளின் குறியாக இருந்தது. இதற்காக சிறுசிறு நொண்டிக்காரணங்களை முன்வைத்து வர்த்தக நிலையங்களைத் தாக்கி கொள்ளையடித்தும், தீக்கிரையாக்கியும் நாச வேலைகளைச் செய்து வந்தனர். மஹிந்த ஆட்சிக்காலத்தில் இனவாதிகள் ஊட்டி வளர்க்கப்பட்டு சிறுபான்மைக்கெதிரான நடவடிக்கைகள் வளர்ச்சி கண்டன.
2015 இல் மைத்திரி–ரணில் ஆட்சியில் ஆரம்பத்தில் இனவன்முறைகள் சற்று ஓய்வு கண்டன. நாளடைவில், பள்ளிவாசல் தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைத்தல் என்பன ஆங்காங்கே அவ்வப்போது தொடர்ந்தன. நாசகாரிகளது கைவரிசையும் ஓங்கவே செய்தன.
காலி கிந்தோட்டையில் ஆரம்பித்து அம்பாறையில் ஊடுருவி கண்டி திகனயில் மேலும் விஸ்வரூபம் எடுத்தன. இந்த அடாவடித்தனங்கள் முஸ்லிம்—சர்வதேச நாடுகளில் எல்லாம் வைரலாகியதன் விளைவாக வன்முறை சூத்திரதாரிகள் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களுக்குள்ளேயும் மஹிந்த தரப்பினரும் இனவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுமே அடங்கியிருந்தனர். அதனால் வன்முறைகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இது இவ்வாறிருக்கையில் அண்மைக்காலங்களாக ஒருசில பகுதிகளில் அவ்வப்போது முஸ்லிம் வர்த்தகக் கடைகள் இனம் தெரியாதவாறு தீப்பிடித்தெரிந்து நாசத்திற்குள்ளாகும் சம்பங்கள் இடம்பெற்று வருகின்றன. மின்சாரக் கசிவு–ஒழுக்கினால் நிகழ்ந்த விளைவுகள் என்று இந்த சம்பவங்களுக்கு சாக்குப்போக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல கடைகள் அழிந்-து குற்றுயிராகிப் போயுள்ளன. மின்சாரக் கசிவு முஸ்லிம் கடைகளை மாத்திரம் பார்த்துத்தானா ஏற்படுகின்றன என்ற சந்தேகம் பலராலும் தெரிவிக்கப்படுவதைக் காணவும் முடிகிறது.
இந்நிலையிலேயே கடந்த 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பாணந்துறை நகரில் நான்கு முஸ்லிம் கடைகள் பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளன.
பாணந்துறை நகரின் பிரதான வீதியில் தொடர்வரிசையில் அமைந்துள்ள நான்கு கடைகள்தான் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன அல்லது தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதே கடைவரிசையில் சுமார் 50 மீட்டரில் நகர ஜும் ஆப் பள்ளியும் அமையப் பெற்றுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இனவாதிகளால் பெற்றோல் குண்டெறியப்பட்டு இப்பள்ளியும் தாக்கி சேதமாக்கப்பட்டிருந்தது.
அன்றைய கட்டதில் குருநாகல், கொழும்பு, தெஹிவளை உள்ளிட்ட இடங்களிலும் இதே பாணியிலான தாக்குதல் நடத்தி பள்ளிகள், கடைகள் சேதமாக்கப்பட்ட நிலையில் கண்காணிப்புக் கமெராவின் உதவியில் ஒரு சில நாசகார சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குருநாகல் பள்ளித் தாக்குதல், தெஹிவளை ஹார்கோர்ட் பாமஸி தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடந்தையானவர்கள் என்று கைது செய்யப்பட்டோருக்கு என்ன நடந்துள்ளது என்பது கூட மூடி மறைக்கப்பட்டே வந்துள்ளது.
இவர்களது விடயத்தில் எமது பாதுகாப்பு நீதித்துறை விடும் நழுவல் போக்கே இனவாதிகள் தொடர்ந்தும் தம் அடாவடிச் செயல்களை முன்னெடுத்துத் தொடர வழிவகுத்துக்கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியிலேதான் இன்று பாணந்துறையில் நான்கு கடைகளும் பற்றி எரிந்திருப்பது இத்தகையோரின் செயல் என்றே பெரும்பாலும் ஊகம் தெரிவிக்கப்படுகிறது.
எரிந்து முற்றாகவே அழிவுக்குள்ளாகியுள்ள கடைகளின் சேத நஷ்டம் பலகோடி ரூபா என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மின்ஒழுக்கு என்று பொதுவாகக் கூறப்பட்ட போதிலும் குறிப்பிட்ட கடைகள் மூடும்போது வழமைபோன்று மின் இணைப்பை செயலிழக்கச் செய்துவிட்டே சென்றுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவம் நிகழ ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்னரே அயல் ஊர் மன்றங்களைச் சேர்ந்த தீயணைப்புப் பிரிவினர் ஸ்தலத்திற்கு வந்துள்ளனர். இதற்குள் கடைகள் எரிந்து தீர்ந்துள்ளன. அத்துடன் தீயும் வேகமாகப் பற்றியதுடன் நான்கு கடைகளும் குறுகிய நேரத்திற்குள் பற்றி எரிந்துள்ளமையினாலும் விரைந்து எரியும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகம் தெரிவிப்படுகின்றது.
மேலும் பற்றி எரிந்துள்ள விதத்திலும் மின்னொழுக்காக இருக்கமாட்டாது என்றே பலரும் ஊகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்றதுடன் அமைச்சர் பைஸர் முஸ்தபா பாணந்துறையில் கடைகள் பற்றியெரிந்த இடத்திற்கு நேரடியாக வந்து நிலைமைகளைக் கண்டறிந்தார். சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுடன் விபரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறியுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸாருக்கு பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இவரது இக்கோரிக்கை மூலமும் இச்சம்பவம் மின் ஒழுக்கினால் விளைந்ததல்ல என்பதையே வெளிப்படுத்துவதாகவுள்ளது.
அத்துடன் இது விடயமாக மக்கள் அவசரப்பட்டு நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் எனவும் முஸ்லிம் சமூகத்தை அவர் கேட்டுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நாசத்தின் விளைவாக நான்கு கடை உரிமையாளர்களும் பல கோடி ரூபாவை இழந்துள்ளமை ஒரு புறமிருக்க, வருட இறுதியில் நத்தார் பண்டிகையைத் தொடர்ந்து கிறிஸ்தவப் புதுவருடம் பின்னர் தமிழர் சிங்களப் புத்தாண்டு என்று வர்த்தகம் களைகட்டும் இச்சந்தர்ப்பம் பார்த்து வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளமையும் மற்றொரு பாரிய இழப்பாகும்.
அத்துடன் அன்றாட உழைப்பிலும் மண்விழுந்து குடும்ப பொருளாதாரத்திலும் பாரிய அடி விழுந்துள்ளதாகவே கூறலாம்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் பாணத்துறை நோலிமிட் நிறுவனம் எரிந்து பலத்த சேதத்திற்குள்ளானது. அது பற்றியும் இதுவரை முறையான காரணிகள் கண்டறியப்படவில்லை. குறித்த நிலையம் நான்கு வருடங்களின் பின்னர் புனரமைக்கப்பட்டு மீண்டும் எழுந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படிப் போனாலும் இச்சம்பவம் குறித்து சரியான காரணியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது நாசகார நடவடிக்கையாயின் இத்தகைய செயற்பாடுகள் இதர பகுதிகளிலும் இடம்பெறாது முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-Vidivelli