ஈரானின் உயர்மட்ட ஜெனரல் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக ஈரானின் வெளிநாட்டமைச்சர் ஜவாட் ஸாரிப் அமெரிக்காவினுள் நுழைவதற்கு ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக பொரின் பொலிசி சஞ்சிகை கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
விடயத்தோடு தொடர்புடைய இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட இத்தகவலில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் ஸாரிப் விசாவுக்கான கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விவகாரங்களைக் கையாள்வதற்கு வெளிநாட்டு அதிகாரிகள் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற 1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறுவதாக இச்செயற்பாடு அமைந்துள்ளதாக அமெரிக்க செய்திப் பிரசுர நிலையம் தெரிவித்துள்ளது.
பக்தாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மூலம் ஈரானிய படைத்தளபதி சுலைமானி மற்றும் ஈராக்கின் பரா இராணுவத் தலைவர் அபூ மஹ்தி அல்-முஹாந்திஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூர்மையடைந்துள்ள அமெரிக்க–ஈரான் பதற்றநிலை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பினால் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் வியாழக்கிழமை கூட்டம் தெஹ்ரானின் உயர்மட்ட இராஜதந்திரிக்கு சர்வதேச சமூகத்துடன் நேரடியாக உரையாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்திருந்தது எனவும் பிரசுர நிலையம் தெரிவித்துள்ளது.-Vidivelli