நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களில் கடந்தகாலத்தில் சுமார் 200 க்குட்பட்ட முஸ்லிம்களே தீவிரவாதிகளென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா முழு முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகள் போன்று கருதுவதும், முஸ்லிம்கள் புலனாய்வுப் பிரிவின் உயர்பதவியில் இருக்கக்கூடாது என்பதும் கண்டிக்கத்தக்கதாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதியமைச்சரும், அக்கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவின் முக்கிய பதவியில் முஸ்லிம் ஒருவரை நியமித்துள்ளமைக்கு பாராளுமன்றத்தில் தனது உரையின்போது சரத் பொன்சேகா எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் வினவியபோதே அவர் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் கவலைக்குரியதாகும். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது 90 வீதமான முஸ்லிம்கள் அவரை ஆதரித்து வாக்களித்தார்கள். அவர் இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான அவரது நகர்வுகளில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தமிழ் மொழி மூலமான உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பொலிஸாரும், உளவுப் பிரிவு அதிகாரிகளும் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
யுத்தத்தை முடிப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பக்கபலமாக இருந்துள்ளன என்பதை சரத் பொன்சேகா போன்றவர்கள் மறந்துவிடக்கூடாது.
200 முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமைக்கு முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பானதல்ல. இவ்வாறான நிலையில் நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் செயற்பட்ட முஸ்லிம்களை, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களை குற்றம் சுமத்துவதும் அவர்கள் பாதுகாப்பு பிரிவில் உயர்பதவியில் இருக்கக்கூடாது எனத் தெரிவிப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.
யுத்த காலத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் புலிகளுக்கு ஆதரவாக இருந்த வரலாறு உள்ளது. அவர்கள் பலரைக் காட்டிக்கொடுத்த சம்பவங்களும் உள்ளன. அச்சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த மக்களும் அவர்களைச் சந்தேகித்ததில்லை. முதற்தடவையாக சரத் பொன்சேகாவே இவ்வாறு இனவாத கருத்துகளைக் கூறி ஒரு சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்