எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படும்போது வழமையாக இடம்பெறும் ஜனாதிபதியை வரவேற்கும் சம்பிரதாயபூர்வமான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறாமை சிறப்பம்சமாகும். இந்த ஏற்பாடுகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தவிர்த்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன (அக்கிராசன) உரையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு என்னுடன் ஒன்றிணையுங்கள் என்று அனைத்து இன அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார். பெரும்பான்மை மக்களின் ஆணையை, எதிர்பார்ப்பை மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அரசியல் அமைப்பில் திருத்தம் அவசியம், தேர்தல் முறையில் மாற்றம் முக்கியம், ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும், பெளத்த மதம் முதன்மை ஸ்தானத்துடன் போஷிக்கப்படும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை என்பவற்றையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளதுடன் இவற்றுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.
அத்தோடு கடந்தகால இனவாத அரசியல் நோக்கங்களை மக்கள் தோற்கடித்துள்ளனர். இதற்குப் பின்னராவது குறுகிய அரசியல் நோக்கங்களைக்கொண்ட அரசியல் கலாசாரத்தைக் கைவிட்டு மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்த தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உரையில் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி சிறுபான்மைக் கட்சிகள் இனவாத அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் இந்த அரசிலைக் கைவிட்டுவிட வேண்டும் எனவும் கோரியிருப்பது முஸ்லிம், தமிழ் தரப்பு அரசியல் தலைவர்கள் மத்தியில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இனவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை என்றும் மதிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெரும்பான்மை மக்களில் அநேகர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே நோக்குகின்றனர். முஸ்லிம்களுக்கென்று இந்நாட்டில் தனியான சட்டங்கள் தேவையில்லை. தனியான வங்கி முறை தேவையற்றது. மத்ரஸாக்கள் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவரப்பட வேண்டும் என்றெல்லாம் பெரும்பான்மை இனத்தவர் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள். ஜனாதிபதியின் உரையுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை என்றும் மதிக்கவேண்டுமென்றால் இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்கப்படுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
‘‘இனம் சார்ந்த கொள்கையுடன் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் இந்நாட்டில் பிரிவினையைத் தோற்றுவிக்கின்றன என்ற நிலைப்பாட்டினை ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இனம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகள் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற நாள்முதல் தற்போது வரையில் பெரும்பான்மை ஆதரவு என்ற மன நிலையிலேயே இருக்கிறார். தமது இனம் சார்ந்து செயற்படும் சிறுபான்மை தேசிய இனங்கள் இனவாத தரப்புகள் என்றால் பெரும்பான்மை இனம் சார்ந்து செயற்படும் கட்சிகளை எவ்வாறு அழைப்பது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
‘ஜனாதிபதி முஸ்லிம்களைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். இனவாத அரசியலைக் கைவிடுமாறு அவர் சிறுபான்மைத் தரப்பினரை இலக்கு வைத்து உரையாற்றியுள்ளார். ஜனாதிபதி வாக்களிப்பினை மையப்படுத்திய மனநிலையில் செயற்படுவதானது இனங்களுக்கு இடையில் மேலும் இடைவெளிகளையே ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் எம்.பி. கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மையினத் தவருடன் ஒன்றிணைந்து வாழ்பவர்கள். எனவே ஜனாதிபதி நாட்டு மக்களை இன ரீதியில் பிளவுபடுத்தி நோக்காது அனைவரும் இந்நாட்டு மக்களே என்பதில் உறுதிகொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களை அரசியலில் புறந்தள்ள முயற்சிப்பது நாட்டுக்கு பாதிப்பாகவே அமையும்.-Vidivelli