ஜனாதிபதியின் கொள்கைத்திட்டத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியமாகும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு பொதுத்தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிடுவோமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவை வழங்கி வெற்றிபெறச்செய்தோம். தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதனால் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து தேர்தலுக்கு செல்லவே தீர்மானித்து வருகின்றது.
மேலும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிடவே கட்சி கலந்துரையாடி வருகின்றது. ஏனெனில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மிகவும் சவால்மிக்கதாகும். சக்திமிக்க பாராளுமன்ற அணியொன்றை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே எமக்கு அரசாங்கத்தின் கொள்கையை முன்னுக்கு கொண்டுசெல்லலாம்.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை உரையை நாட்டுக்கு வெளிப்படுத்தினார். அதில் அதிகமானவை நாட்டின் எதிர்காலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவையாகும். அதனால் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் அத்தியாவசியமாகும். அதனால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரணமாக ஆதரவளித்ததுபோல், தற்போது எதிர்வரும் 5வருடங்களுக்குள் அவரது கொள்கைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் ஆரதளிக்கத் தயாராக இருக்கின்றோம்.
எனவே, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை தெரிவுசெய்து அனுப்பினால் ஜனாதிபதியின் கொள்கை திட்டத்தை முன்னுக்குகொண்டு செல்லலாம் என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும். பாராளுமன்றத்துக்கு குண்டுவைக்கவேண்டும் என்றெல்லாம் கடந்த காலங்களில் அதிகமானவர்கள் கதைத்துவந்தனர். தற்போது மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகின்றது. மக்கள் சரியான தீர்மானம் எடுத்தால் பாராளுமன்றத்துக்கு குண்டுவைக்க வேண்டிய தேவை இருக்காது.
அத்துடன் பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிடும்போது சின்னம் தொடர்பாக இன்னும் இறுதித்தீர்மானத்துக்கு வரவில்லை. என்றாலும் பொதுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்