சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒருபகுதியாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பிணை கோரி நேற்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஒரு மணி நேரத்துக்குள் மீளப் பெறப்பட்டதுள்ளது.
சந்தேக நபர் ரூமி மொஹமடின் சட்டத்தரணிகளே நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இந்த இடையீட்டு மனுவை தாக்கல் செய்தபின்னர் அகற்றிக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்தப் பிணைக் கோரிய இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதனை அவதானித்துள்ள பிரதான நீதிவான், இன்று (நேற்று) பிடியாணையை மீளப்பெறல் தொடர்பிலான இடையீட்டு மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும், பிணை தொடர்பிலான விண்ணப்பத்தை குறித்த விவகாரத்தின் விசாரணைத் தினத்தில் முன்வைக்குமாறு சட்டத்தரணிகளுக்குத் தெரிவித்துள்ளதையடுத்தே இந்த இடையீட்டுமனு மீளப் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள முதலிரண்டு சந்தேக நபர்களுக்கும், அச்சந்திப்பில் கலந்துகொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபாவை ரூமி மொஹமட் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதுதொடர்பில் அவர் கடந்த 2019.12.31 ஆம் திகதி சி.ஐ.டி.யில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் ரூமி மொஹமட் அதேதினம் மாலை மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்