விஜயதாசவின் தனி நபர் பிரேரணை: மஹிந்தவின் நிலைப்பாடு என்ன?
21,22 ஆம் திருத்தும் குறித்து கேள்வி எழுப்புகின்றது ஜே.வி.பி
அரசியல் அமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்று ஜனாதிபதியை பலப்படுத்தும் விஜயதாச ராஜபக் ஷவின் தனிநபர் பிரேரணை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான விஜித ஹேரத் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொண்ட பாராளுமன்றத்தை இல்லாது செய்வதும் பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் மற்றும் உயர் நீதிமன்றத்தினதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஏனைய ஒவ்வொரு நீதிபதியும் நியமிக்கப்படும் காரணியில் அரசியல் அமைப்பு பேரவையின் அனுமதி இல்லாது ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படல் வேண்டும் என்ற காரணிகளை கருத்தில் கொண்டு விஜயதாச ராஜபக் ஷ கொண்டுவந்துள்ள தனிநபர் பிரேரணை முற்று முழுதாக ஜனநாயக விரோத பிரேரணையாகும். அரசியல் அமைப்பிற்கான இருபத்தோராவது மற்றும் இருபத்திரண்டாவது திருத்தங்களை விஜயதாச ராஜபக் ஷ கொண்டு வருவதானது அவரது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமேயாகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் ஆதரவை பெற்றுக்கொண்டு அவரின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் மூலமாகவேனும் உள்நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திருத்தத்தை அவர் கொண்டு வருகின்றார். மாறாக எந்தவித நோக்கமும் அவருக்கு இல்லை.
21 ஆம் திருத்தமானது சர்வ மக்களின் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் ஒன்று உருவாவதை தடுத்து இனவாத அராஜகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படக்கூடிய ஒன்றாகும்.
இதில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்.
அதேபோல் 22 ஆம் திருத்தமானது பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் மற்றும் உயர் நீதிமன்றத்தினதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஏனைய ஒவ்வொரு நீதிபதியும் நியமிக்கப்படும் காரணியில் அரசியல் அமைப்பு பேரவையின் அனுமதி இல்லாது ஜனாதிபதியினால் நேரடியாக தீர்மானம் எடுக்க வேண்டியதாக அமையும். ஆனால் 19 ஆம் திருத்தத்தில் அரசியல் அமைப்பு பேரவை பலமடைந்துள்ளது. இந்த 19 ஆம் திருத்தத்தை கொண்டுவந்ததும் விஜயதாச ராஜபக் ஷ தான். 20 ஆம் திருத்த சட்டத்தையும் அவரே ஆதரித்தார். அவ்வாறு இருந்தவர் இன்று முற்றுமுழுதாக மாறுபட்ட நிலைப்பாட்டில் மீண்டும் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒன்றினை கொண்டுவரும் வகையில் 21,22 ஆம் திருத்தங்களை கொண்டுவருகின்றார்.
இந்த பிரேரணையானது வெறுமனே விஜயதாச ராஜபக் ஷ கொண்டுவரும் தனிநபர் பிரேரணையா அல்லது அரசாங்கம் கொண்டுவரும் பிரேரணையா என்பதை முதலில் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல இந்த இரண்டு திருத்தங்களை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் ஏற்றுகொள்ள முடியுமா முடியாதா என்ற தனது நிலைப்பாட்டை முதலில் அவர் தெரிவிக்க வேண்டும். தவறான பிரேரணைகளை ஆதரித்து நாடு நாசமாகிய பின்னர் நாம் செய்தது தவறு, இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என தெரிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று இவ்வாறு கூறுவது பிரசித்தியான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இதையெல்லாம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.-Vidivelli