ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிரதமராவதற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதற்கும் பெரும்பணியாற்றியவர். அவற்றுக்காக அவர் இப்போது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்றவாளியாக இவர் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் பிணையில் வெளிவந்த பிறகே இவ்வாறு மன்னிப்பு கோரியிருந்தார்.
நாம் சில தவறுகளைச் செய்திருப்பதால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆட்சியமைக்க எமது ஜாதிக ஹெல உறுமயவின் 9 பிக்கு எம்பிக்கள் பெரும்பான்மையை வழங்கி அரசமைக்க உதவி புரிந்திருந்தார்கள்.
அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தனது சிரேஷ்ட தலைவர்களின் விருப்பப்படி லக் ஷ்மன் கதிர்காமரையே பிரதமராக்கத் தீர்மானித்திருந்தது. அதைத்தடுத்து நாமும் எமது 9 தேரர்களும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மூலம் மகிந்த ராஜபக் ஷவைப் பிரதமராக்க வைத்தோம். அதற்காக இப்போது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என்றார்.
அதுபோல் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்த ராஜபக் ஷ வெற்றிபெற ஜே.வி.பியோடு சேர்ந்து நாமும் பாடுபட்டோம்.
எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சில தேரர்கள் ரணிலுக்கு ஆதரவளித்தபோதும் கூட ஒரு தேசிய சம்மேளனத்தை அமைத்து மகிந்தவை ஜனாதிபதியாக்க செயற்பட்டோம். தற்போது இவர் நாட்டைக் குடும்பச் சொத்தாக மாற்ற நாம் இழைத்த அரசியல் தவறுகளே காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கூறியபோது, அப்போது லக் ஷ்மன் கதிர்காமரே நாட்டின் அடுத்த பிரதமராக இருக்கத் தகுதியானவராக இருந்தபோதும் அவர் சிங்கள பெளத்தரல்லாததால் மகா சங்கத்தினரோடு சேர்ந்து மகிந்தவைப் பிரதமராக்குமாறு நானே சந்திரிக்காவிடம் கோரியிருந்தேன். அதன்படியே மகிந்த பிரதமரானார். இப்போது அவரைச் சூழவிருக்கும் எவரும் அப்போது அவரோடு இருக்கவில்லை.
ஒருபுறம் சமாதானம் பேசப்படுகையில் மறுபுறம் புலிகளுக்குக் கப்பம் வழங்கிய காலமும் இருந்தது. எங்கோ இருந்தோரே இப்போது சேர்ந்திருக்கின்றனர். புலிகளுக்குப் பணம் வழங்கியோரே இன்று வீரர்களாகி விட்டனர் எனவும் குறிப்பிட்டார். அரசியலில் சில தவறுகளைச் செய்ததாக மனம் நொந்த இவர் அவற்றை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
இவர் பிக்குகளை அரசியலுக்குள் கொண்டு வந்து எம்பிக்களாகியதன் விளைவுகள் என்னென்ன? 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது அரசியல் அபிலாஷைகளுக்காக மட்டுமே பிக்குகளைப் பயன்படுத்தினார். முடிவில் இரு பிக்குகளாலேயே அவர் கொல்லப்பட்டார். எனினும் 2004 ஆம் ஆண்டு பாட்டலி சம்பிக்க ரணவக்க பெளத்த மதசாசனத்தையும் பிக்குகளையும் முன்னிலைப்படுத்தியதால் நாட்டின் வெளிவிவகாரமும் உள்விவகாரமும் படுபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
* பாட்டலி சம்பிக்க ரணவக்கவால் உணர்வூட்டப்பட்ட பிக்குகளில் 9 பேர் எம்பிக்களாக இருக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பிக்கு அமைப்புகளும் உருவாகின. பொதுபலசேனா, ராவணாபலய, சிங்ஹலே பிவிதுரு, ஹெல உறுமய போன்ற சில அமைப்புக்கள் உருவாகின.
* நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதோடு வர்த்தகங்கள் முடக்கப்பட்டு சொத்துக்கள் அழிக்கப்பட்டு இஸ்லாம் கொச்சைப்படுத்தப்பட்டு வரலாறும் மறுக்கப்பட்டது. இறுதியாகவே பேருவளையும் அளுத்கமையும் தாக்கப்பட்டன.
இவர் 2002 ஆம் ஆண்டு ஒலுவில் பிரகடனத்தில் முஸ்லிம் அலகு கரையோர மாவட்டக்கோரிக்கைக்குப் பிறகுதான் தனது கட்சியை சங்கு அடையாளத்தில் 2004 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பிக்குகளை அபேட்சகர்களாக்கிக் களத்தில் இறக்கினார். இதில் 9 பிக்குகள் எம்பிக்களாகினர். இவர்கள் மகிந்தவைப் பிரதமராக்கியதோடு ஜே.வி.பி.யோடு சேர்ந்து ஜனாதிபதியுமாக்கினார்கள். இதில் மகாசங்கத்தினரின் ஒத்துழைப்பையும் பெற்றிருந்தார்கள்.
பிரதமராகுவதற்குரிய தகுதி லக் ஷ்மன் கதிர்காமருக்கு இருந்தும் கூட அவர் ஜனநாயக ரீதியில் தமிழ் ஆயுதப்போராளிகளுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்று வழங்கியிருந்தும் கூட பெளத்த சிங்களவரல்ல என்னும் ஒரே காரணத்துக்காக பிரதமர் பதவி வழங்கக்கூடாது என இவரது அமைப்பு முடிவு செய்திருக்கிறது. முடிவில் புலிகளின் தாக்குதலால் லக் ஷ்மன் கதிர்காமர் பலியானார்.
எனினும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இன வேறுபாடு செய்தது குறித்து வருந்தவும் மன்னிப்புகோரவும் 15 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக் ஷஜனாதிபதியாக ஆகுவதற்கு இவரது அமைப்பும் மகாசங்கத்தினரும் ஜே.வி.பி.யும் ஒத்துழைத்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, இவர் மகிந்தவுக்கு வழங்கிய ஒத்துழைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை 11 ஆண்டுகள் நீடித்திருந்தன.
பேரினவாத ரீதியில் இவர் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான அல்ஜிஹாத் அல்கைதா என்னும் சிங்கள நூலே சிங்கள மக்களிடம் துவேஷத்தை உருவாக்கியது. முஹம்மத் பின் காஸிம் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்து நாலந்தா என்னும் பெளத்த சர்வகலாசாலையை அழித்ததாகவும் ஆயிரக்கணக்கான பெளத்தர்களைக் கொன்றதாகவும் ஆயிரக்கணக்காக பெளத்தர்களை சிறைபிடித்ததாகவும் இவர் எழுதியிருந்தார்.
சிங்கள பெளத்தரே பூமி புத்திரர்கள் மற்றோர் விதேசிகள் முஸ்லிம்கள் பிழைக்க வந்தோர் இவர்களின் சனத்தொகை பல்கிப் பெருகி வருகிறது. எதிர்காலத்தில் இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்களே கூடுதலாக இருப்பார்கள். முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் அதிகம். முஸ்லிம்களிடமே பொருளாதாரம் அதிக அளவு தங்கியிருக்கிறது என்னும் கருத்துக்களை இவர் முன்வைத்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி அக்கரைப்பற்றைத் தாக்கியதால் வீடிழந்தோருக்கென சவூதிய
அரசு வசதியான 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தது. அவை தீகவாபி என்னும் பெளத்த புண்ணிய தலத்துக்கு அருகே இருப்பதாகக்கூறி முஸ்லிம்களுக்கு முழுமையாக வழங்கக்கூடாது என பாட்டலி சம்பிக்க ரணவக்க வழக்காடி வென்றதால் அவ்வீடுகள் இதுவரை யாருக்குமே வழங்கப்படாது பற்றைக்காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. கட்டிக்கொடுத்தவரின் விருப்பமல்ல, மதமேலாதிக்கமே இவரது நோக்கமாக இருந்திருக்கிறது.
சமாதானத்துக்குப் போகாதவாறு பாதுகாப்புத்துறையை யுத்தத்துக்குத் தூண்டி உள்நாட்டு சர்வதேசப் பிடிகளில் மகிந்த ராஜபக் ஷ சிக்கிய நேரம் பார்த்து மகிந்த ராஜபக் ஷ தீர்க்கமான தேர்தல் களத்தில் இறங்கியிருக்கையில் பாட்டலி சம்பிக்க ரணவக்க புதியதொரு ஒப்பந்தத்துக்கு அவரை அழைத்திருந்தார். இத்தனை காலமும் உடனிருந்து ஒத்துழைத்து விட்டு சிக்கல் நேரம் பார்த்து எதிலுமே சம்பந்தப்படாத புதிய ஆளைப்போல் ஒப்பந்தத்துக்கு அழைத்தால் எப்படி? தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப எல்லாவற்றிலும் பயன்படுத்தி விட்டு ஒன்றிலுமே சம்பந்தப்படாத அந்நியனைப்போல் வந்தால் எப்படி இதிலும் என்ன நிகழ்ச்சி நிரல் இருக்குமோ என்னும் அச்சம் ஏற்படாதா எனினும் ரணில் மகிந்தவைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் நோக்கில் அதில் ஒப்பமிட்டுவிட்டார். அதன் பிறகு மைத்திரி ரணில் ஆட்சியில் முஸ்லிம்கள் பல மடங்கு அழிவுகளைச் சந்தித்தனர்.
ரணில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. சமாளிக்கும் நிலையிலேயே இருந்தார். வடக்கு கிழக்கு தமிழர் விடயத்திலும் நழுவல் போக்கையே கையாண்டார். எனினும் கூட சிறுபான்மைகள் அவரை நம்பிக்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்குக்கு யுத்த முனைப்பைத் தூண்டிய பாட்டலி சம்பிக்க ரணவக்க அழிவுக்குள்ளான தமிழர் மீது இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை.
முஸ்லிம்கள் பரவலாகத் தாக்கப்படுகையிலும் கூட பேசாதிருந்து விட்டார். இவரிடம் அந்த அளவுக்கு மத, இன, மொழி மேலாதிக்கம் இருப்பதே அதற்குக் காரணமாகும். இம்முறை நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு என்ன-? வினை விதைத்தவன் வினையறுப்பான்.
திணை விதைத்தவன் திணையறுப்பான் என்பதுபோல் இவர் விதைத்ததையே மகிந்த அறுவடை செய்திருக்கிறார். சிறுபான்மைகளோடு இணங்கி வாழும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்ற நிலையிலேயே சஜித் தோல்வியுற்றியிருக்கிறார். இனியேனும் பாட்டலி சம்பிக்க ரணவக்க பேரினவாதத்திலிருந்து மீள வேண்டும். அண்மையில் ரணில் சிங்கள வாக்குகளில் கவனம் தேவை என்றார். இதன் மூலம் பெளத்த சிங்கள வாக்குகளை அதிகமாகப்பெறும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறதா என்பதே கேள்வியாகும். பாட்டலி சம்பிக்க ரணவக்க மூலம் ஐ.தே.கவின் தேசியப் பட்டியலில் எம்.பியான அதுரலியே ரதன தேரர் நிகழ்த்திய முஸ்லிம் விரோத செயற்பாடுகளை ரணிலால் தடுக்க முடியாதிருந்தது. முடிவில் அந்த பிக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்தார். கலகொட அத்தே ஞானசார தேரரின் முஸ்லிம் எதிர்ப்பு அட்டூழியங்களின்போது ஐ.தே.க எம்பியான விஜேதாச ராஜபக் ஷதான் நீதியமைச்சராக இருந்தார். எனினும் அவர் அப்போது செயலற்றிருந்ததை ரணில் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் அண்மையில் சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வாய்ப்பான 5 வீத வெட்டுப்புள்ளியைத் தேர்தல் முறையிலிருந்து நீக்கி 12.5 வீத வெட்டுப்புள்ளியைக் கொண்டு வர தனிநபர் பிரேரணைக்கு விஜேதாச ராஜபக் ஷ
முன்னறிவிப்பு செய்தபோதும் ரணில் ஆட்சேபிக்கவில்லை. நிகழ்ந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக் ஷவும் கூட மகிந்த ராஜபக் ஷ அணியில் சேர்ந்து கொண்டார். ஐ.தே.க எம்பியான தயாகமகேயையாவது ரணில் பேரினவாதத்தைவிட்டும் கழற்றி விட்டிருந்தாரா? அவரையும் அவரது போக்கில் விட்டிருந்தார்.
இறக்காமம் முஸ்லிம் பகுதி பெரும்பான்மைச் சமூகம் அறவே அற்ற பிரதேசம் எனினும் அங்குள்ள மாயக்கல்லிமலையில் சில பிக்குகள் வலுக்கட்டாயமாக சிலையை வைத்தார்கள். தயாகமகேவின் முழு ஆதரவினால் அந்த சிலை இன்னும் அப்படியே இருக்கிறது. ரணிலால் எதுவும் செய்ய முடியாமற்போனது. அதை அங்கிருந்து அகற்றினால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன் எனவும் தயாகமகே மிரட்டினார்.
தீகவாபிக்கு 500 ஏக்கரே சொந்தம் என அஷ்ரப் அமைச்சராக இருக்கையில் அளவிட்டு நிர்ணயித்து வர்த்தமானியில் இடம்பெறச் செய்திருந்தும் கூட தயாகமகே அதை மறுத்து பாரிய அளவுப் பிரதேசம் எனக்கூறியதோடு அங்கு 12000 சிலைகள் வைக்கப்பட வேண்டும் யாரும் முன்வந்தால் செலவழிப்பேன் எனவும் சூளுரைத்தார்.
இதையும் ரணில் கண்டு கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து பிரித்தெடுத்து மூன்று சிங்களத் தொகுதிகளை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளுக்குள் தான் முன்பு அஷ்ரப் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்களுக்கெனக் கேட்டிருந்தார். சிங்களவருக்கு 18 மாவட்டங்களும் தமிழர்க்கு 7 மாவட்டங்களும் இருக்கையில் முஸ்லிம்களுக்கு முன்பே அமையவேண்டியிருந்த கரையோர மாவட்டம் வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க இருக்கையில் சிறுபான்மைகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
இலங்கையில் 25 மாவட்டங்களும் 9 மாகாணங்களும் இருக்கின்றன.
சிங்கள மாவட்டங்கள் 18 தமிழ் மாவட்டங்கள் 7 எனினும் முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டமும் இல்லை. ஒரு சிறிய நிலப்பகுதியும் இல்லை.
அந்த வகையில் முஸ்லிம்களும் பாரம்பரிய தேசிய இனம் என்னும் வகையில் நில ரீதியான அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கும் நியாயமான பங்கீடு இருக்க வேண்டும். இவைகளே அஷ்ரப் முன்வைத்த கோரிக்கைகளாகும்.
மைத்திரி அரசில் ரணில் பிரதமராக இருந்தபோது தான் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்டத்தில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகுதிகளிலிருந்து சில பகுதிகளை இணைத்து மூன்று சிங்கள தொகுதிகளை அமைக்க முற்பட்டார்கள். பேராசிரியர் ஹிஸ்புல்லாஹ்வின் கண்டுபிடிப்பால் தான் அம்முயற்சி கைகூடவில்லை.
இறக்காமத்திலுள்ள மாயக்கல்லி என்னும் குன்றில் சில பிக்குகள் அடாத்தாக வைத்த சிலை இன்றும் கூட அப்படியே இருக்கிறது.
முஸ்லிம் பிரதேசத்தில் வைக்கப்பட்ட அந்த சிலையை அகற்ற தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளால் முடியாது போயிற்று. ஹக்கீம் எம்பியாக இருக்கும் கண்டி மாவட்டத்தில் தான் திகனை இருக்கிறது.
அங்கு பேரினக்குண்டர்கள் கொடூரமாகத் தாக்கிய போதும் கூட ஹக்கீமால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ரணிலின் கையில் தான் பாதுகாப்புக்குப் பொறுப்பான சட்ட ஒழுங்கு அமைச்சு இருந்தது. பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகுதிகளிலிருந்து பிரித்தெடுத்து 3 சிங்களத் தொகுதிகளை உருவாக்க முயன்றதுக்கான காரணம் அஷ்ரப் கோரிய கரையோர மாவட்டக் கோரிக்கையை அழிக்கவேயாகும். காரணம் அம்மூன்று தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாகவே அஷ்ரபின் கரையோர மாவட்டக் கோரிக்கை அமைந்திருந்தது.
ஐ.தே.க.விலிருந்து அண்மையில் விலகிய விஜேதாச ராஜபக் ஷ எம்.பி.சுயாதீன எம்பியான பின் 12.5 வெட்டுப்புள்ளியை மீண்டும் தேர்தல் முறையில் கொண்டு வந்து 5% வெட்டுப்புள்ளியை அகற்றுமாறு கோரியிருந்தார். அவர் இதைப் பாராளுமன்றத்திலும் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மைகளுக்கும் பிரதிநிதித்துவ விடயத்தில் அஷ்ரப் பெற்றுத் தந்த வாய்ப்புக்கு ஆப்பு வைக்கும் முயற்சியாகும். தொகுதி நிர்ணயத்தின் மூலமும் 21 முஸ்லிம் எம்பிக்களில் 8 பேரைக் குறைத்து 13 பேராக்கவும் பிரயத்தனம் செய்யப்பட்டிருந்தது.
அஷ்ரபின் அரசியல் மதியூகத்தால் முஸ்லிம் சமூகம் பிரதிநிதித்துவங்களோடு சுயமாகக் குரலெழுப்ப முடிந்தது. இதன் மூலம் அவர் இருமுறை ஆட்சிகளை மாற்றிக் காட்டினார். அது காலவரை பேரினவாதத்துக்கு இணங்கி சலுகையையும் தயவையும் நாடி அலங்கார பதவிகளை மட்டும் அலங்கரித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் அஷ்ரபால் விழித்துக் கொண்டதைக் கண்ட சிங்களப் பேரினவாதிகள் புதுப்புது வியூகங்களைக் கையாண்டார்கள்.
* தனித்துவ முஸ்லிம் கட்சி 4 பிரிவுகளாக ஆக்கப்பட்டது.
* ஒற்றைத் தனித்துவத் தலைமைக்குப் பதிலாக பல தனித்துவத் தலைமைகள் உருவாக்கப்பட்டன.
* பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்களாகத் தனித்துவத் தலைமைகள் ஆக்கப்பட்டன.
* அடிப்படைக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தாமல் அமைச்சுப் பதவிகளுக்கும் அபிவிருத்திகளுக்குமாக முன் சென்றதால் தலைமை பதவியில் நிரந்தர இருப்பை நாடி நின்றது.
* தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கைகளையும் அங்கத்தவர்களையும் மாற்றிக் கொண்டு ஜனநாயக அடிப்படைக்கும் புறம்பாக செயற்படும் நிலையும் ஏற்பட்டிருந்தது.
பேரினவாதத்தை உருவாக்கி வளர்த்து சிறுபான்மைகளுக்கு ஊறு செய்தார். மகிந்தவிடம் ஏமாந்ததற்கே மன்னிப்பு கோருகிறார் பாட்டலி சம்பிக்க ரணவக.-Vidivelli
ஏ.ஜே.எம்.நிழாம்