எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கைப் பிரகடன உரையை அடுத்து அன்றைய தினமே பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதில் இவ்வருடம் ஜனவரி 07 ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் கூட்டத்தின் பின்னர் பிற்பகல் 1 மணிக்கு கூடும் பாராளுமன்ற அமர்வு மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
மேலும், புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரினால் அறிவிக்கப்படுதல் உள்ளிட்ட சபாநாயகரின் அறிவிப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.
நாளை ஜனாதிபதியினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் பற்றி கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அலுவலகத்தினால் விளக்கமளிக் கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட பதவிகள் தொடர்பிலும் அறிவிக்கப்படவுள்ளன.-Vidivelli