பெளத்த மத இனவாத துறவிகள் முஸ்லிம் சமூகம் சார்பான எனது குரலை நசுக்குவதற்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படும் அவர்கள் இறுதியில் தோல்வியையே எதிர்கொள்வார்கள். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. சி.ஐ.டி. என்னை விசாரணைக்கு அழைத்தால் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவேன் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாக ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
“ஞாயிறு குண்டுத்தாக்குதல்” தொடர்பாக சி.ஐ.டி.யினர் நேற்று பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். சுமார் 3 மணித்தியாலங்கள் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பில் வினவியபோதே விடிவெள்ளிக்கு அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்; ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக என் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அபாண்டமாக பொய் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. ஒரு சிறு குழுவே இத்தாக்குதலுக்குப் பொறுப்பானது. இத்தாக்குதலை நாம் நூறு வீதம் எதிர்த்தோம். சம்பந்தப்பட்டவர்களைக் காட்டியும் கொடுத்தோம். நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள்.
ஆனந்தசாகரதேரர் போன்றவர்கள் என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார்ககள். அவர்கள் நினைத்தவாறெல்லாம் சிறையில் அடைக்கமுடியாது. நான் பயங்கரவாத சம்பவங்களுடன் துளியளவும் சம்பந்தப்படாதவன். இனவாத பெளத்த துறவிகளின் இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமை நாட்டுக்கு ஆபத்தானதாகும்.
அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னைப்பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். அவருக்கு நான் சவால்விடுகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படி நான் கோருகிறேன்.
குற்றமற்றவன் என்ற வகையில் எந்தவகையான விசாரணைகளுக்கும் நான் தயாராக இருக்கிறேன். சி.ஐ.டி. க்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருக்கிறேன்.
“உயிர்த்த ஞாயிறு” தாக்குதல்களைக் காரணம் காட்டி எமது குரலை நசுக்க முயல்கிறார்கள். நிரபராதி என்ற வகையில் எங்கள் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்