பதவிக்கு வந்துள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்கள் நலன் கருதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றமை மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நாட்டை ஆட்சி செய்த வேறு எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத செயற்பாடுகளில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
இந்த வகையில் அரச மற்றும் அரச சபைகள், நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள சிற்றூழியர் நியமனங்கள் குறைந்த வருமானம்பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கே வழங்கப்படவுள்ளன. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் எட்டாம் தரம் வரையிலான கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களுக்கே இந்நியமனம் வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக ஒரு இலட்சம் பேருக்கு இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் உத்தரவுக்கமைவாக இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. திணைக்களங்கள் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சிற்றூழியர்கள், தொழிலாளர்கள், காரியாலய உதவியாளர்கள் இந்த அடிப்படையிலே நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கென பல்துறை அபிவிருத்திச் செயலணி ஒன்று நிறுவப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் செயலணிக்கு இணைத்துக் கொள்ளப்படும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் எட்டாம் தரம்வரை பயின்ற இளைஞர் யுவதிகளுக்கு குறுகியகால பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும். பல்வேறு காரணங்களினால் கல்வியை இடை நடுவில் கைவிட்டுள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் இதனால் சுபீட்சமடையும்.
இதுவரை காலம் இந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவது அரச தரப்பு அரசியல்வாதிகளின் வரப்பிரசாதமாகவே இருந்தது. அரசாங்கமொன்று பதவிக்கு வந்ததும் அரசியல்வாதிகள் முதலில் தமது ஆதரவாளர்களுக்கே சிற்றூழியர் நியமனங்களை வழங்கினார்கள்.
இந்தப் பதவிகளை பட்டதாரிகள் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் கூட பெற்று வந்தனர். அரசாங்க தொழில் என்பதால் உயர்கல்வி கற்றவர்கள் இந்த தொழிலில் அமர்ந்தனர். என்றாலும் அவர்கள் மனக்குறையுடனேயே இத்தொழில்களில் தொடர்ந்தனர். இதனால் மக்களுக்குச் சிறந்த சேவையும் கிட்டவில்லை.
இதேவேளை, உயர்கல்வி கற்றவர்கள் இவ்வாறான தொழில்களில் அமர்ந்ததால் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் எட்டாம் தரம் வரை பயின்றவர்கள் தொழில் வாய்ப்பின்றி பல்வேறு துன்பங்களுக்கும் உள்ளாகினர். இந்நிலையில மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் 10 ஆம் தரம் மற்றும் 8 ஆம் தரம் வரை பயின்றவர்களை மாத்திரம், அதுவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சிற்றூழியர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மேலும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டும். ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை முதற்கட்டமாக வழங்குவதற்கென நிறுவப்படவுள்ள செயலணி அரசியல் செயலணியாக மாற்றம் பெற்றுவிடக்கூடாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கல்வியைத் தொடராது எட்டாம் தரத்திலும் 10 ஆம் தரத்திலும் நிறுத்திக் கொண்டவர்களுக்கு சிறந்தவோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது பயனுள்ளதே.
இந்தச் செயலணி நாட்டில் மாற்றுக்கருத்துக் கொண்ட அரசியல் குழுக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. அரசியல் கட்சி மற்றும் இன, மத பேதமின்றி அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும்.
இதேவேளை இன்னும் 3 மாத காலத்துக்குள் பொதுத் தேர்தலொன்று நடைபெறவுள்ளது. இந்தச் செயலணி அரசியல் சுயநலநோக்கோடு உருவாக்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படலாம் என்பதை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு சிற்றூழியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைக்கப்படவுள்ள செயலணி அரசியல் பின்னணியைக் கொண்டதல்ல என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறான ஒரு செயலணி நிறுவப்பட்டு சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட விருப்பது தொடர்பில் அரச தரப்பு அரசியல்வாதிகள் அதிருப்தியடையலாம் என்றாலும் ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும். இத்திட்டம் அரசியல் கலப்பற்று செயற்படுத்தப்பட வேண்டும்.-Vidivelli