பேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி
தமிழக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மார்க்க ரீதியான பிரச்சினைகள், இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகள், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த பார்வை, பூகோள ரீதியாக காணப்படுகின்ற நெருக்கடிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும் தமிழக மாநில தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகைதீன் ‘விடிவெள்ளிக்கு’ அளித்த விசேட செவ்வியில் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
நேர்காணல் : ஆர்.ராம்
அண்மைக்காலமாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் மார்க்கம் சம்பந்தமாக முகங்கொடும் பிரதான பிரச்சினைகள் எவை?
பதில்:- முதலாவதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் விடயங்களை பார்ப்போமானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் உள்ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படும் மார்க்க கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றாகவே உள்ளனர்.
இருப்பினும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழகத்தில் முஸ்லிம்களுக்கென முஸ்லிம் லீக் கட்சி மாத்திரமே காணப்பட்டது. ஆனால் அந்த மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் அதனை மையப்படுத்தி தமிழகத்தில் மாத்திரம் 58 முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக வெளியில் பல அமைப்புக்கள் உருவாக்கப்படுவதானது தவிர்க்கமுடியாது என்பதோடு அவை மார்க்க அக்கறையுடன் செயற்பட்டால் சமூத்தின் பாதுகாப்புக்குத்தானே வலுச்சேர்க்கும்?
பதில்:- அந்த அமைப்புக்கள் மார்க்க ரீதியாக ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத், அகீதா தொடர்பில் சீர்திருத்தங்களை செய்யும் நோக்கில் புதிய கருத்துக்களை புகுத்துவதற்கு முயலும்போது