நத்தாரை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டும்
பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் தேவாலயங்களுக்கும் விஷேட பாதுகாப்பை வழங்குமாறு தான் அரசாங்கத்திடமும் பாதுகாப்புத் துறையினரிடமும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், பாதுகாப்பு தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தகவல்களும் அண்மைக் காலமாக கிடைக்கப் பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே அதற்கேற்ற பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றோம். எமது கோரிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பை வழங்குவதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேவாலயங்களிலும் திருத்தலங்களிலும் பாதுகாப்பை எதிர்பார்க்கின்றோம். விஷேடமாக நத்தார் தினத்தன்று நள்ளிரவு பூஜைகள் நடைபெறும் தேவாலயங்களிலும் திருத்தலங்களிலும் இந்த பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
ஏதேனுமொரு வகையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற ஐயப்பாட்டிலேயே நத்தார் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு துறையிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம் என்றார்.-Vidivelli