பெளத்த மத சாசனத்தை பாதுகாத்தவரை அரசியல் பழிவாங்குவது கண்டிக்கத்தக்கது
ஹெல உறுமய உபதலைவர் எடிகல விமலதர்ம தேரர்
ஜனநாயகம், பொதுச் சட்டம் ஆகியவற்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பின்பற்றினால் தான் ஆச்சரியம் கொள்ள வேண்டும். சர்வாதிகாரமாக பிரயோகிக்கப்படும் அரச அதிகாரத்திற்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம். தனி பௌத்த சிங்கள மக்களினால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இன்று பௌத்த மத சாசனத்தை பாதுகாத்தவரை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தியுள்ளமை பொது கோட்பாடுகளுக்கு முரணானது என ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் உபதலைவர் எடிகல விமலதர்ம தேரர் தெரிவித்தார்.
எதுல்கோட்டையில் உள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் தவறான அரசியல் கலாசாரத்தினை மாற்றியமைப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் இன்று பாரதூரமான அளவிற்கு அரசியல் பழிவாங்கல்கள் இடம் பெறுகின்றன.
ஜனநாயகம், பொது சட்டங்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மதிப்பளித்து செயற்பட்டால் தான் ஆச்சரியம் கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்துள்ளமை 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற முறையற்ற சர்வாதிகார ஆட்சியின் ஆரம்பமாகவே கருத முடியும்.
ஜனநாயக ரீதியில் கிடைக்கப் பெற்ற மக்களாணை 2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. அதன் காரணமாகவே நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மனம்போன போக்கில் அரச தலைவரால் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. ஜனநாயக ஆட்சி சர்வாதிகாரமான முறைக்கு கொண்டு செல்லப்படும் போது நாட்டு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை முற்றிலும் சட்டவிரோதமானது. 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற வீதி விபத்திற்கு முறையான விசாரணைகளுக்கும், கிடைக்கப் பெற்ற சாட்சியங்களுக்கும் அமைய நீதிமன்றம் வழக்கினை நிறைவு செய்தது. தற்போது ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் எவ்விதமான அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல் வழக்கினை மீளெடுத்து கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளமையினை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.
இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதித்துறையின் ஊடாகவும், மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாகவும் நீதியினை பெற்றுக் கொள்வோம். தனி பௌத்த மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பௌத்த மத கோட்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும். மனம்போன போக்கில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க முடியாது என்றார்.-Vidivelli