பர்வேஷ் முஷாரப் மீதான மரண தண்டனை தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஷ் முஷாரபிற்கு தேசத்துரோக வழக்கு ஒன்றில் இஸ்லாமாபாத் விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள விவகாரம் சர்வதேச அரங்கில் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது. இத் தீர்ப்பானது அண்மைக் காலங்களில் அந்த நாட்டின் நீதித்துறையினால் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி ஒன்றின் மூலமாக 1999 ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப் 2007 ஆம் ஆண்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக பாகிஸ்தானின் அரசியலமைப்பின் 6 வது சரத்தின் ஏற்பாடுகளின் கீழ் தேசத்துரோகக் குற்றவாளியாகக் கருதப்பட்டார். தனது அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் மூண்டதையடுத்து நாடளாவிய ரீதியில் தனது எதிரிகளை களையெடுத்ததுடன் முக்கியமான அரசியல் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்தார்.
அவர் மீது தேசத்துரோக குற்றஞ்சுமத்தி நவாஸ் ஷெரீப் அரசாங்கம் 2013 ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது. இதன் பின்னணியிலேயே அரசியலமைப்பை மீறியதிலும் தலைகீழாகப் புரட்டியதிலும் முஷாரப் குற்றவாளி என்று கூறியிருப்பதுடன் 1973 தேசத்துரோக (தண்டனை) சட்டத்தின் கீழ் அதியுயர்ந்த தண்டனையையும் விதித்திருக்கிறது.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷாரப் ஆவார். இந்த தீர்ப்புக்கு எதிராக முஷாரஃப் மேல் முறையீடு செய்யலாம் என்ற போதிலும் அதற்காக அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி நீதிமன்றத்துக்கு நேரடியாக வர வேண்டும் என்பதும் அவசியமாகும். எனினும் அவர் இனிமேல் நாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்க முடியாது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலுமைப்படுத்தும் ஒரு தொலைதூர முயற்சியாக இது அமையும் என்றும் எதிர்காலத்தில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் இவ்வாறு செயல்படுவதை தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் நீதித்துறைக்கு உள்ள சுதந்திரத்தையும் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் பர்வேஸ் முஷாரப் எந்த தவறும் செய்யவில்லை என பாகிஸ்தான் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ‘‘முஷாரபுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகுந்த வலியையும், வேதனையையும் தருகிறது. 40 ஆண்டுகாலம் நாட்டுக்காக உழைத்த அவர் துரோகியாக இருக்க முடியாது. பாகிஸ்தான் அரசமைப்பின்படி உரிய நீதி வழங்கப்படும் என நம்புகிறோம்‘‘ என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் ஒருபுறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஜெனீவா சென்றிருந்த அவர் தனது பயணத்தை சுருக்கிக் கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான பாகிஸ்தானின் அரசியல் ஒருபோதும் சுமுகமானதாக இருந்ததில்லை. தொடர்ச்சியாக பல்வேறு சவால்களை அந்நாட்டுத் தலைவர்கள் சந்தித்தே வந்துள்ளனர். படுகொலைகள், இராணுவ சதிப்புரட்சிகள், கைதுகள், தண்டனைகள் என அந்நாட்டு அரசியல் எப்போதும் கொந்தளிப்பாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் தலைவர் ஒருவர் அதியுச்ச தண்டனையாக மரண தண்டனையைப் பெற்றிருக்கிறார். அத் தண்டனை நிறைவேற்றப்படுமாயின் நிச்சயம் அதுவும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகவே அமையும்.-Vidivelli