4/21 தொடர் தற்கொலை தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணிலிடம் விசாரணை நடந்துக
சட்ட மா அதிபர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை ,முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் விசாரணை ,பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் வாக்குமூலம் பெற தீர்மானம் ,பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியலும் நீடிப்பு
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்துவாக்கு மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு சட்ட மா அதிபர் விசாரணை யாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மேற்படி விடயத்தை அறிவித்தார்.
இந் நிலையில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ‘‘முன்னாள் அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் 2 முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் 4 பிரதி பொலிஸ்மா அதிபர்களிடமும் விசாரணைக்குழுவினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல முன்னாள் அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சில முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.‘‘ என கூறினார்.
இந் நிலையிலேயே இந்த விவகாரத்தின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்ப்ட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் பலியாகவும் பாரிய சொத்து சேதம் ஏற்படவும் உதவி ஒத்தாசை புரியும் வகையில் செயற்பட்டுள்ளதாக கூறி தண்டனை சட்டக் கோவையின் 250, 296, 298, 326,327,328, 329 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்