இஸ்லாமாபாத்திலுள்ள விசேட நீதிமன்றமொன்று பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷர்ரபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பெஷாவார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகார் அஹமட் செத் தலைமையிலான மூன்று அங்கத்தவர்கள் கொண்ட விசேட நீதிமன்றமே தேசத்துரோக வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
முஷர்ரபினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மற்றும் 2007 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை இடைநிறுத்தியமை ஆகியவற்றின் காரணமாக தேசத்துரோகக் குற்றச்சாட்டு 2014 மார்ச் மாதம் அவர் மீது சுமத்தப்பட்டது.
நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் கட்சி 2003ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷர்ரப் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது. பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷர்ரப் ஆவார்
இரு தடவைகள் பிரதமராக இருந்த பெனாஸிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தினால் 2017 ஆகஸ்ட் மாதம் நாட்டைவிட்டு தப்பியோடியவராக முஷர்ரப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான முறைப்பாடுகள், பதிவேடுகள், விவாதங்கள் மற்றும் உண்மைகளை கடந்த மூன்று மாதங்களாக ஆராய்ந்த பின்னர், பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் 6ஆவது உறுப்புரைக்கமைவாக உயர்ந்தளவு தேசத்துரோகத்தைப் புரிந்த குற்றவாளியாக முஷர்ரப் காணப்பட்டுள்ளாரென நேற்று குறித்த நீதிமன்றம் வழங்கிய குறுகிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இது பெரும்பான்மைத் தீர்ப்பாகும். மூன்று நீதிபதிகளுள் இருவர் முஷர்ரபுக்கு எதிராகவே தீர்மானங்களை எடுத்திருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக முஷர்ரப் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் அவர் பாகிஸ்தானுக்கு நாடுதிரும்பி நீதிமன்றத்துக்கு நேரடியாக வரவேண்டும்.
நாட்டின் அரசியலமைப்பை மீறியதற்காக இராணுவத் தளபதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை. பாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் ஒரு தொலைதூர முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் இவ்வாறு செயற்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முடிவு பாகிஸ்தானில் நீதித்துறைக்குள்ள சுதந்திரத்தையும் காட்டுகிறதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத் தளபதியாகவிருந்த பர்வேஸ் முஷர்ரப் 1999 இல் இராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். ஜூன் 2001 இல் பாகிஸ்தான் அதிபராக தன்னைப் பிரகடனம் செய்துகொண்டார். 2008 இல் தேர்தல் தோல்விக்குப்பின் நாட்டைவிட்டு அவர் வெளியேறினார்.-Vidivelli
- எம்.ஐ.அப்துல் நஸார்