நாட்டை சர்வாதிகார முறைமைக்கு இட்டுச்செல்லும் நிலையை தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை எமது போராட்டம் தொடருமென முன்னாள் நீதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துக்கோரல தெரிவித்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 8 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல, பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, ஜக்கிய தேசியக் கட்டசியின் மகளிர் அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டிருந்தன. இதன் போதே தலதா அத்துக்கோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசியல் நெருக்கடியின் காரணமாக நாட்டின் சாதாரண நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரம் உருவாக வழிகோலும் வகையிலான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நாட்டின் சட்ட ஒழுங்கிற்கும், அரசியல் யாப்பிற்கும் விரோதமான செயற்பாடுகளின் காரணமாகவே இத்தகைய நிலை உருவாகியுள்ளது. அதனால் நாட்டின் ஜனநாயகம் அதல பாதாளத்தினுள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவற்றை கருத்திற்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஜக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அமைப்பினரான அனைவரும் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டுள்ளதாகவும் அதன் மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நீதிக்குப் புறம்பான செயல்கள் தகர்க்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரையில் தொடர்ச்சியாகத் தமது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-Vidivelli