சுற்றுச் சூழலை பாதுகாக்க முன்னுரிமை வழங்குங்கள்
லண்டனில் வசிக்கும் 6 வயது அப்துல்லாஹ் பிரதமர் மஹிந்தவுக்கு கடிதம்
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்தும் இலங்கையின் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்குமுன்னுரிமை வழங்குமாறும் கோரி பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவனான அப்துல்லாஹ் அபூபைத் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்து, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றை இட்டுள்ளார்.
”6 வயதான அப்துல்லாஹ் அபூபைத் எனக்கு அனுப்பிய கடிதம் இன்று காலை எனக்கு கிடைத்தது. அதற்காக நன்றி கூறுகிறேன். அந்த கடிதம் என்னை ஊக்கப்படுத்தியது. மேலும் மூத்த தலைமுறையினராய் இளைய தலைமுறையினருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நினைவூட்டியது. ஒரு நாள் நான் அவரை சந்திப்பேன். வாழ்த்துக்கள்” என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆறு வயதான அப்துல்லாஹ் அபூபைத் கடந்த 26 ஆம் திகதி பிரதமருக்கு ஆங்கிலத்தில் அனுப்பியுள்ள கடிதத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு:
”நான் அப்துல்லாஹ். ஆறு வயது சிறுவன். நான் லண்டனில் வசிக்கின்ற லண்டன் வாழ் இலங்கையராவேன். ஆச்சரியமிக்க இலங்கையை நான் 100% நேசிக்கிறேன்.
எனது தாய் உங்களது வெற்றியைப் பற்றிக் கூறினார். உங்கள் வெற்றிக்கு நான் வாழ்த்துக் கூறுகிறேன்.
நான் உங்களிடம் மிக முக்கிய விடயம் ஒன்றைப்பற்றி பேச வேண்டும். தயவு செய்து சுற்றுச் சூழலுக்கு முன்னுரிமை வழங்குவீர்களா? எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது.
இலங்கையின் கடற்கரைகளையும் கடலையும் பாதுகாக்க ஒரு திட்டத்தை வகுக்க முடியுமா? இதன் மூலம் ஆமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அவை ஒவ்வொரு வருடமும் இலங்கையின் கடற்கரைகளுக்கு வருகை தரும். என்னைப் போல. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அன்புடன் அப்துல்லாஹ் அபூபைத் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் சிறுவனின் கடிதத் திற்கு பலரும் டுவிட்டரில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.-Vidivelli
- ஷிப்னா சிராஜ்