புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்துள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் நியமனம் பெற்று 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்த வக்பு சபை பதவி விலகியுள்ளது.
இதுவரை காலம் வக்பு சபையின் தலைவராகப்பதவி வகித்து வந்த சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் தனது இராஜினாமா கடிதத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கிடம் கையளித்துள்ளதாகவும், ஏனைய உறுப்பினர் களையும் இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வக்பு சபைக்கான நியமன விதிகளின்படி அதன் நியமனங்கள் பொறுப்பான அமைச்சரினாலேயே வழங்கப்படவேண்டும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் நாங்கள் பதவி விலகாவிட்டாலும் பதவி இழக்கப்பட்டுள்ளோம். முஸ்லிம் சமய விவகாரம் தற்போது கலாசார அமைச்சின் கீழேயே உள்ளது. அதற்குப் பொறுப்பான அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வக்பு சபைக்கு புதிய நியமனங்களை பிரதமரே வழங்க வேண்டும்.
எனது தலைமையிலான வக்பு சபை 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு 2018 இல் பதவிக்காலம் நிறைவுற்றதும் மீண்டும் நியமனம் வழங்கப்பட்டது. வக்பு சபையில் தலைவருடன் மொத்தம் 7 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
வக்பு சபை தனது கடமைகளைப் பொறுப்புடன் முன்னெடுத்துள்ளது. பள்ளிவாசல் பதிவுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பான சில வழக்குகளே விசாரணையின் கீழ் இருக்கின்றன.
எமது பதவிக்காலத்தில் நாம் பள்ளிவாசல் பதிவுகளுக்கான வழிமுறைகள், (Guide Lines), பள்ளிவாசல் நிர்வாகிகள் நியமனங்களுக்கான வழிமுறைகள், முஸ்லிம் கலாசார நிதியம் (M.C.F) எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பன தொடர்பான வழிமுறைகளைத் தயாரித்து முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம். அவ்வழிமுறைகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மத்ரஸாக் கல்வித் திட்டம், நிர்வாகம் தொடர்பான முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். பள்ளிவாசல்களில் இயக்க ரீதியான முரண்பாடுகளுக்குத் தடை விதித்துள்ளோம் என்றார்.
மேலும், அவர் எமது பதவிக்காலத்தில் வக்பு சபைக்கும் பொறுப்பாக இருந்த அமைச்சர் எவ்வித அரசியல் தலையீடுகளையும் மேற்கொள்ள வில்லை.
அதனால் எம்மால் சுதந்திரமாக இயங்க முடிந்தது. எமது கடமைகளை சுதந்திரமாக முன்னெடுக்க ஒத்துழைத்த அமைச்சர் ஹலீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், வக்பு சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
வக்பு சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக் கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டன. அந்நடவடிக்கைகளை புதிதாக பதவிக்கு வரும் வக்பு சபை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்