அரச சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சை பரீட்சை நிலையத்தினுள் முஸ்லிம் பெண்களுக்கு அசௌகரியங்கள்
அதிகாரிகளுக்கு முறைப்பாடு
கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையொன்றின்போது பரீட்சை எழுதிய முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அணிந்துள்ள ஹிஜாப் காதுகளை மூடியதாக இருக்கக்கூடாது அனைவரும் ஹிஜாபை சரிசெய்து காதுகள் தெரியும்படி சரி செய்துகொள்ளவேண்டுமென பரீட்சை நடைபெறும்போது உத்தரவிடப்பட்டதால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கொழும்பு பாதுகாப்பு சேவைக்கல்லூரியில் நடைபெற்ற முகாமைத்துவ உதவியாளர் தரம்– III க்கு ஆட்சேர்ப்பதற்காக நடைபெற்ற போட்டிப்பரீட்சையின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது;
இப்போட்டிப் பரீட்சை மொழி அறிவு, பொது அறிவு என இரண்டு கட்ட வினாத்தாள்களை உள்ளடக்கி நடத்தப்பட்டது. பொது அறிவு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு சில நிமிடங்களில் மண்டப அறை –1 இன் பரீட்சைப் பொறுப்பதிகாரி ஹிஜாப் அணிந்துள்ள அனைத்துப் பரீட்சார்த்திகளும் காதுகள் தெரியும்படியாக ஹிஜாபை சரிசெய்ய வேண்டும் எனப் பணித்துள்ளார். வினாத்தாள் வழங்கப்பட்டு எவ்வித முன்னறிவித்தலுமின்றி பரீட்சை மேலதிகாரி இவ்வாறு செயற்பட்டதால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அசௌகரியங்களுக்குள்ளாகினர். சிலர் அவ்வாறு சரி செய்துகொண்டனர்.
ஹிஜாபை சரி செய்யாத பரீட்சார்த்திகளின் பரீட்சைச் சுட்டிலக்கங்களைக் குறித்துக் கொண்ட பரீட்சை நிலைய அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.
இவ்வாறு உத்தரவிடுவதற்கான காரணங்களை பரீட்சார்த்திகள் வினவியபோதும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி பரீட்சை விதியை நடைமுறைப்படுத்துவதாகவே பதில் தெரிவித்தார்.
இவ்வாறு ஹிஜாபை சரி செய்து காதுகள் தெரியும்படி செய்யும்படி சட்டத்தில் உள்ளதா? என பரீட்சார்த்திகள் வினவியபோது அவர்களின் பரீட்சை இலக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டு அவர்களது பரீட்சை முடிவுகள் இரத்துச்செய்யப்படும் என பரீட்சை மேலதிகாரி அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்