இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் நேற்று மாலை 3 மணியளவில் தேர்தல் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இத் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ 6,924,255 (52.25%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் பெரு வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையே பெற்றுக் கொண்டார். இதற்கமைய 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 மேலதிகவாக்குகளால் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றியீட்டினார்.இதேவேளை, இத் தேர்தலில் போட்டியிட்ட மற்றுமொரு வேட்பாளரான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க,
418,553 (3.16%) வாக்குகளையே பெற்றுக் கொண்டார்.
அத்துடன் ஏனைய 32 வேட்பாளர்களும் இணைந்து 345,452 (2.61%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
16 மாவட்டங்களில் கோத்தா வெற்றி
இப் பெறுபேறுகளுக்கமைய மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களை வெற்றி கொண்டு கோத்தாபய ராஜபக்ச சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை குருநாகல் புத்தளம் அநுராதபுரம் பொலன்னறுவை பதுளை மொனராகலை இரத்தினபுரி காலி ஆகிய மாவட்டங்களிலேயே கோத்தாபய வெற்றி பெற்றுள்ளார்.
6 மாவட்டங்களில் சஜித் வெற்றி
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வடக்கு கிழக்கு உட்பட 6 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம், வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகியவற்றிலேயே சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
போதிய வாக்குகளைப் பெறாத அநுர இதேவேளை இத் தேர்தலில் மூன்றாவது சக்தியாக களம் இறங்கிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாயநாய சுமார் 8 இலட்சம் வரையான வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 418,553 வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
மகேஷ் சேனநாயக்க 4 ஆவது இடத்தில்
இத் தேர்தலில் போட்டியிட்ட மற்றுமொரு பிரபல வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு 38 ஆயிரம் வாக்குகள்
இத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 38 ஆயிரத்து 814 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அங்கு அவர் 13228 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பருந்துக்கு 34 ஆயிரம் வாக்குகள்
இத் தேர்தலில் பருந்து சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச திசாநாயக்க எதிர்பாராதவிதமாக 34537 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரது பறவைச் சின்னத்தை அன்னம் என நினைத்து மக்கள் வாக்களித்திருக்கலாம் என்றும் இவரது பெயரில் திசாநாயக்க என்றிருப்பதால் அநுரகுமார திசாநாயக்க என நினைத்து மேலும் பலர் வாக்களித்திருக்கலாம் என்றும் அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவருக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
அமைதியான தேர்தல்
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முன்னெப்போதுமில்லாதவாறு மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் பாரிய வன்முறைகளின்றியும் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல்கள் திணைக்களமும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரிந்து வாக்களித்த பெரும் பான்மை சிறுபான்மை மக்கள்
இத் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒரு கட்சிக்கும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரு கட்சிக்கும் என இரு துருவங்களாக பிரிந்து வாக்களித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இதற்கமைய பெரும்பான்மை சிங்கள மக்கள் பெருவாரியாக கோத்தாபய ராஜபக்சவை ஆதரித்துள்ளனர். மறுபுறம் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளமை.-Vidivelli