பாபரி மஸ்ஜித் வழக்கு இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபை
16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென என கடந்த சனிக்கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பள்ளிவாசலொன்றைக் கட்டுவதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ ஐந்து ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பொருத்தமான காணியொறினை ஸுன்னி வக்ப் சபைக்கு வழங்க வேண்டும் எனவும் இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஐந்து நீதிபதிகள் கையொப்பமிட்டுள்ள இத்தீர்ப்பு தொடர்பில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தரப்பு அதிருப்தியினை வெளியிட்டுள்ளது. நாம் உச்ச நீதிமன்றத்தின் கட்டளையினை மதிக்கின்றோம் ஆனால் தீர்ப்பு எமக்கு திருப்தியளிக்கவில்லை என தலைநகர் புதுடில்லியில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சபை சார்பான சட்டத்தரணி ஸபர்யாப் ஜீலானி தெரிவித்தார்.
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபை, சிரேஷ்ட சட்டத்தரணி ராஜீவ் தாவானுடன் கலந்துரையாடிய பின்னர் மீளாய்வு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் 2.77 ஏக்கர் காணியில் முதலாவது முகலாய பேரரசரான பாபரின் ஆட்சியின் கீழ் 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பெரிய பள்ளிவாசல் 1992 ஆம் ஆண்டு தீவிர இந்துக் குழுவொன்றினால் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்தில் தமது கடவுளர்களில் ஒருவரான இராமர் பிறந்ததாக இந்துக்கள் உரிமை கோருகின்றனர்.
தீர்ப்பினையடுத்து எந்த ஒரு சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வடக்கு உத்தர பிரதேஷ் மாநிலத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னதாக கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எந்தத் தரப்பிற்கும் வெற்றியோ தோல்வியோ கிடைக்கலாம் எனவே அமைதியைப் பேணுமாறு தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு நம்பிக்கை நிதியமொன்றை ஏற்படுத்த வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்
பாபரி மஸ்ஜிதின் உட்புறம் மற்றும் வெளிப்புற வளாகம் ஆகியன குறித்த நம்பிக்கை நிதியத்திற்கு கையளிக்கப்பட வேண்டும் எனவும் கோகாய் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வலதுசாரி இந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் என அழைக்கப்படும் உலக இந்து பேரவை இத் தீர்ப்பினை வரவேற்றுள்ளது.
உண்மை வெற்றி பெற்றுள்ளது. நாம் தீர்ப்பு தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பேச்சாளர் ஷராட் ஷர்மா தெரிவித்தார்.பெரும்பாலான இந்துக்களின் வாதங்கள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாம் இனி அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட ஆரம்பிப்போம் எனவும் ஷராட் ஷர்மா தெரிவித்தார்.-Vidivelli
- எம்.ஐ.அப்துல் நஸார்