நாடெங்கும் போலி உம்ரா முகவர்கள் இயங்கிவருவதாகவும் அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பொதுமக்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டியுள்ளது. போலி உம்ரா முகவர்களுக்கு பணம் செலுத்தி பிரச்சினைகளுக்குள்ளாகுபவர்கள் தொடர்பில் திணைக்களம் பொறுப்புக் கூறமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கும் அரச ஹஜ் குழுவும் இது தொடர்பில் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
உம்ரா பயணம் மேற்கொள்பவர்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள முகவர் நிலையங்கள் ஊடாக மாத்திரமே பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். இடைத்தரகர்களாகச் செயற்படும் போலிமுகவர்கள், மக்களிடமிருந்து பணத்தை அறிவிட்டு கமிஷன் பெற்றுக் கொள்வதுடன், பயண ஏற்பாடுகளில் தாமதங்களை ஏற்படுத்துகிறார்கள்.
சிலர் ஏமாற்றப்பட்டும் வருகிறார்கள். இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வருகின்றன. அதனால் போலி உம்ரா முகவர்களால் ஏமாற்றப்படும் பயணிகள் தொடர்பில் திணைக்களம் பொறுப்புக்கூறமாட்டாது.
விமான நிலைய உபயோகம்
இதேவேளை, உம்ரா பயணிகள் விமான நிலையத்தின் கழிவறைகளை உரிய முறையில் உபயோகிக்குமாறும் வுளூ செய்வதற்காக தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியிலேயே வுளூ செய்யுமாறும் அரச ஹஜ் குழு வேண்டியுள்ளது.
விமான நிலைய கழிவறைகளில் வுளூ செய்வதால் ஏனைய பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அதனால் பயணிகள் வுளூ செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தனியான இடத்தையே அதற்காகப் பயன்படுத்தும்படி அரச ஹஜ் குழு வேண்டியுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்