பள்ளிவாசல்கள், விகாரைகள், கோயில்கள், மற்றும் ஆலயங்களில் தேர்தல் சட்டவிதிகள் மீறப்படுகின்றதா? என்பதைக் கண்காணிக்க கஃபே அமைப்பின் இணைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சாய்ந்தமருது பள்ளிவாசலில் தேர்தல் சட்டவிதிகள் மீறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; பள்ளிவாசல்களில் ஜும்ஆ பிரசங்கத்தின்போதும் ஏனைய நிகழ்வுகளின் போதும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து தெரிவிப்பது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகும். இவ்வாறான நிகழ்வுகளை கஃபே அமைப்பின் அவ்வப் பிரதேச இணைப்பாளர்கள் கண்காணிப்புச்செய்து ஆதாரங்களைச் சமர்ப்பிப்பார்கள். எமது கண்காணிப்பாளர்கள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்ய முடியாதுள்ளதால் பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை எமது அமைப்புக்கு முறையிடலாம்.
கிழக்கில் சாய்ந்தமருது பள்ளிவாசலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகிறோம். இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்