2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் அலி, நோர்வோயின் நோபல் குழாமினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். “அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்” நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் குறிப்பாக அயல்நாடான எரித்திரியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் மேற்கொண்ட தீர்க்கமான முடிவுக்காகவும் அபி அஹ்மத் அலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவிலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆபிரிக்க பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்துவதற்காக முன்னிற்கும் அனைத்து பங்குதாரர்களையும் அவர்களது பணிக்கான அங்கீகாரத்தையும் வழங்குவதாகவே இப்பரிசு வழங்கப்படுகிறது.
2018 ஏப்ரலில் பிரதமராகப் பதவியேற்ற போது, எரித்திரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தனக்குள்ள விருப்பத்தை தெளிவுபடுத்தினார் அபி. எரித்திரியாவின் ஜனாதிபதி Isaias Afwerky இன் பூரண ஒத்துழைப்போடு, 1998 – -2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, எரித்திரியாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த இராணுவ ரீதியிலான சிக்கலை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். இவ்வொப்பந்தமானது இரு பிரகடனங்களாக கடந்த ஜுலை மாதம் அஸ்மராவிலும் செப்டம்பர் மாதம் ஜித்தாவிலும் வைத்து இருநாட்டு தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்டது.
சமாதானம் என்பது ஒருதரப்பு நாட்டத்தால் நிகழ்வதன்று. எத்தியோப்பிய பிரதமர் அமைதிக்காக கைதூக்க அதை ஓங்கப் பிடித்தார் எரித்திரிய ஜனாதிபதி. இதன் மூலம் எத்தியோப்பியா மற்றும் எரித்திரியாவில் வாழும் சகல பொதுமக்களும் பயனடைவர் என்பது நோபல் குழாமின் உன்னத எதிர்பார்ப்பாகும்.
அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100 ஆவது நபர் அல்லது அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் அலி பெற்றுள்ளார். 223 தனிநபர்கள், 78 அமைப்புக்கள் உட்பட 301 பரிந்துரைகள் தாண்டி இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1895-ல் நோபல் பரிசை நிறுவியவரான ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று ஆஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
யார் இந்த அபி அஹ்மத்?
1976 ஓகஸ்ட் 15 எத்தியோப்பியாவில், கோப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் அபி பிறந்தார். இவரது தந்தை அஹ்மத் அலி, ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இஸ்லாமியர். அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த எத்தியோப்பிய மரபு கிறித்துவரான இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார். அபி அஹ்மத் அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகனும் இவரின் தந்தைக்கு இவர் 13 ஆவது மகனும் ஆவார். இவரது இளமைக்கால பெயர் அபியோத்து என்பதாகும்.
அபியின் கல்வி நிலை
அபி அஹமது தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் கற்றார். பின் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். எத்தியோப்பிய பாதுகாப்பு படையில் பணியாற்றிய நிலையில் தனது பட்டப்படிப்பை கணினிப் பொறியியல் துறையில் மேற்கொண்ட அபி, 2011 இல் கிறீன்விச் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தையும், 2013 இல் அஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 2017 இல் எடிஸ் அபாபா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு படையில் அபி
மார்க்ஸிய லெனினிய ஆட்சிக்கு எதிரான மோதல்களின் போது 1991 இன் ஆரம்ப பகுதியில் பாதுகாப்பு படையில் இணைந்தார் அபி. அங்கு பணியாற்றிய நிலையிலேயே தனது பட்டப்படிப்பையும் வாழ்க்கைத் துணையும் அடைந்து கொண்டார்.
1993 களில் எத்தியோப்பிய தேசிய பாதுகாப்பு படை இராணுவ வீரராக பயிற்சியை முடித்த அபி, உளவு மற்றும் தொடர்பாடல் துறைகளிலேயே அதிகம் பணியாற்றினார். ருவாண்டா இனச்சுத்திகரிப்பின் பின் 1995 இல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை (UNAMIR) அங்கத்தவராக ருவாண்டாவில் பணியாற்றினார். 1998- – 2000 காலப் பகுதியில் இடம்பெற்ற எத்தியோப்பிய -எரித்திரிய போரில் எரித்திரிய படைப் பிரிவுகளின் அமைவுகளை கண்டறியும் உளவுக்குழு ஒன்றை வழிநாடாத்தினார். பின்னர் பாதுகாப்பு படை உத்தியோகத்தராக தனது சொந்த ஊரான பேசாசாவிற்கு திரும்பினார்.
எத்தியோப்பிய பாதுகாப்பு படையில் தன்னோடு பணியாற்றிய சினாஸ் தயாசேவை கரம் பிடித்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மேலும் ஒரு வளர்ப்பு மகனையும் இவர்கள் கொண்டுள்ளனர்.
அரசியலில் அபி
2010 இல் பாதுகாப்பு பிரிவில் இருந்து நீங்கிய அபி தனது அரசியல் பயணத்தை ஒரோமோ ஜனநாயக கட்சியில் தொடர்ந்தார். 2010 தேசிய தேர்தலில் களமிறங்கிய அபி மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு தேர்வானார். தனது பாராளுமன்ற காலத்திற்கு முன்னும் பின்னும் அநேக மதக்கலவரங்களை எதிர்நோக்கிய அபி “அமைதிக்கான மார்க்கப் பேரவை”யைத் தோற்றுவித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ நல்லிணக்கத்துக்காக உழைத்தார்.
படிப்படியாக அரசியலில் வளர்ச்சி அடைந்த அபி, 2015 இல் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரானார். ஓராண்டில் பணியிலிருந்து விலகி ஒரோமிய ஆட்சிப்பிரிவின் துணைத்தலைவரானார். ஒரோமிய கிராமிய அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அலுவலகத் தலைவராக இருந்த அபி ஒரோமிய பொருளாதார புரட்சிக்கு வித்திட்டார்.
EPRDF தவிசாளராகவும் பிரதமராகவும் இருந்த Hailemariam Desalegn தனது பதவி விலகலை அறிவித்த போது EPRDF தவிசாளர் இருக்கை வெற்றிடமானது. எத்தியோப்பியாவின் முன்னணி அரசியல்வாதிகளாக இப்பதவிக்கு லெம்மா மெகேஸா மற்றும் அபி அஹமது ஆகியோர் முன்மொழியப்பட்டாலும் லெம்மா தேசிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிராமையால் நேரடியாக அபி அஹமது தவிசாளர் பதவிக்கு தேர்வானார். EPRDF தவிசாளரான அபி 2018 ஏப்ரல் 2 ஆம் திகதி எத்தியோப்பிய பிரதமராக வெற்றியீட்டினார்.
பிரதமராக அபி
மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வந்த எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 43 ஆவது வயதில் பதவியேற்ற அபி, அந்நாட்டில் தாராளவாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். மிகவும் முக்கியமாக, எத்தியோப்பியாவின் அண்டை நாடான எரித்திரியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அந்நாட்டுடனான இரண்டு தசாப்த கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்தார்.
அதே சமயத்தில், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இன ரீதியிலான பதற்றம் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். பல மொழிகளையும் இனங்களையும் கொண்ட எத்தியோப்பியாவில் இன்னும் பல இனமுறுகல்கள் தொடரும் நிலையில் அமைதிக்கான விருது வழங்குவதில் அவசரம் காட்டப்பட்டதாக பல விமர்சனங்களும் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அபி அஹ்மத் அலி முன்னெடுக்கும் அமைதிக்கான பாரிய முயற்சியானது தற்போது அதற்கான அங்கீகாரத்தையும் ஊக்குவிப்புகளையும் எதிர்பார்த்து நிற்கிறது. இதனால் இம்முறை வழங்கப்படும் இந்த அமைதிக்கான நோபல் பரிசானது பிரதமரை ஊக்குவிக்கும் ஒன்றாக அமைவதோடு அவரது மீள்குடியேற்ற திட்டங்களுக்கும் பங்களிக்கும் என்பது நோர்வேயின் நோபல் தெரிவுக்குழுவின் எதிர்பார்ப்பாக உள்ளது என நோபல் குழாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் சஞ்சிகையின் 2018 இன் மிகவும் பிரபலமான 100 பேர் பட்டியலிலும், Foreign Policy சஞ்சிகையின் 2019 தலைசிறந்த பூகோள சிந்தனையாளர்கள் 100 பேர் பட்டியலிலும் இடம்பிடித்த அபி, சவூதியின் அப்துல் அஸீஸ் விருது, அமீரகத்தின் செய்யது பதக்கம், ஹெஸியன் சமாதான விருது உள்ளிட்ட பல கௌரவங்களதும், விருதுகளதும் சொந்தக்காரர் ஆவார்.- Vidivelli
- ஓட்டமாவடி எம்.ஐ.முஹம்மத் ஸப்ஷாத்
மொறட்டுவ பல்கலைக்கழகம்