தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய சேனநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தன்னிடம் புத்திஜீவிகளும் சிவில் சமூக அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளுக்கமைய தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக முன்வந்திருப்பதையும் இலங்கைக்கு மாற்று சக்தியொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே என்றும் கூறினார்.
கடந்த ஆகஸ்ட்டில் இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அவர் இராணுவத்தில் இருந்துகொண்டு சிறந்த சேவையை நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கியதாகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் நாட்டை பாழ்படுத்தி விட்டது. மாற்றத்தை கொண்டு வருவதற்கு தகுதியான சக்தியொன்று தேவை. எனது அணியில் அரசியல்வாதி எவரும் இல்லை. கல்விமான்களும் நிபுணர்களுமே இருக்கிறார்கள். பாதுகாப்பு படைகளையும் பொலிசாரையும் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அந்த நிலைமையில் மாற்றம் வேண்டும். ஒரு நாடாக உறுதியான பொருளாதாரத்தையும் நல்லிணக்கத்தையும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. அது விரைவில் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் சேனநாயக்க மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் காமின் நந்த குணவர்தன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமையாளர் டாக்டர் அனுரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், நிபுணர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
vidivelli