போதிய சட்டங்கள் இன்மையே சுயாதீன தேர்தலை நடத்த சவால்
வன்முறைகளை கட்டுப்படுத்துவது சிரமம் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வலுவான சட்டங்கள் இல்லாமையும், நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள தாமதமுமே சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களை நடத்துவதில் காணப்படுகின்ற முதன்மையான சவாலாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற துசிதா சமரசேகரவை நினைவு கூருமுகமாக நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டு ‘சுயாதீன – நீதியான தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான புதிய போக்குகள்’ என்ற தலைப்பில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
தேர்தல் ஒன்றில் நபரொருவர் சுயமாக சிந்தித்து, தனது விருப்பத்தின்படி வாக்களிப்பது என்பது ஒருவர் பொதுமேடை ஒன்றில் பகிரங்கமாக தனது கருத்துக்களை வெளியிடுவதற்கு ஒப்பானதாகும். தேர்தலில் வாக்களிப்பது ஒருவருக்கு கருத்து வெளியிடுவதற்குக் காணப்படும் உரிமையையும், சுதந்திரத்தையுமே வெளிப்படுத்துகின்றது.
தேர்தல்கள் என்று நோக்கும்போது தேர்தலும், வன்முறையும் ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதவையாகும். ஏனெனில், நாமாக ஒரு விடயத்தை விரும்பி, அதனை அடைவதற்கு முற்படுகின்றபோது அங்கு வன்முறைகள் தலைதூக்குகின்றன. அதேபோன்று அதிகாரத்தை அடைந்து கொள்வதற்கு நடைபெறுகின்ற தேர்தல் என்ற போட்டியிலும் வன்முறைகளின் தலையீடு தவிர்க்கப்பட முடியாததாகும்.
எம்முடைய நாட்டைப் பொறுத்தவரை சுயாதீனமானதும், நீதியானதுமான தேர்தல்களை நடத்துவதில் காணப்படுகின்ற முதன்மையான சவால், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான வலுவான சட்டங்கள் இன்மையும், இருக்கின்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள காலதாமதமும் ஆகும். எனவே இனிவரும் தேர்தல்களில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகளாக செயற்படுவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றோம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இல்லாவிட்டாலும், அதனைத் தொடர்ந்துவரும் தேர்தல்களில் குறித்த யோசனையை அமுல்படுத்த முடியுமென எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று தேர்தலில் தமக்கு சார்பாக வாக்களிப்பதற்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட சட்டமுரணான விடயங்கள் நடைபெறும்போது, அவற்றுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென்று பொதுமக்கள் கருதுகின்றார்கள். ஆனால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடைபெறத்தக்க இத்தகைய சம்பவங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதென்பது சாத்தியமற்ற அல்லது கடினமான விடயமாகும்.
எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் மக்கள் உரிய அதிகாரிகளிடத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் எவ்வித பயனுமில்லை என்று கருதி சிலர் அதனைச் செய்வதில்லை. ஆனால் இதுகுறித்து இன்னும் பலர் போதிய விழிப்புணர்வற்ற நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களை அறிவூட்ட வேண்டிய தேவையிருக்கிறது.
அடுத்ததாக தேர்தல்களின் போது பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தக்கூடிய சொத்துக்கள் தொடர்பான வரையறை எதுவும் நடைமுறையில் இல்லை. குறைந்தபட்சம் பிரசார செலவுகள் குறித்த அறிக்கையை கையளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகூட இல்லை. இது தேர்தல்களின் சமத்துவமானதும், நியாயமானதுமான தன்மை பேணப்படுவதில் தடையை ஏற்படுத்துகின்றது.
எனினும், இதற்கான தீர்வொன்றைக்காணும் நோக்கில் 2016 ஆம் ஆண்டிலிருந்து நாம் முன்னெடுத்துவந்த நடவடிக்கைகளை அடுத்து தேர்தல் பிரசார செலவுகளை வரையறைக்கு உட்படுத்துவது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது அது சட்டமா அதிபர் வசமிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இவ்விடயத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் சுயாதீனமானதும், நீதியானதுமான தேர்தலுக்கு பாரிய சவாலாக நவீன தொழில்நுட்பமும், சமூக வலைத்தளங்களும் அமைந்துள்ளன. சமூகவலைத்தளங்களின் ஊடாகப் பரப்பப்படுகின்ற பொய்யான தகவல்களும், வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.
தற்போதும் தேர்தல் நடைபெற்ற பின்னர் வாக்குகள் உரிய அதிகாரிகளால் கைகளாலேயே எண்ணப்படும். அவை உரிய குறிப்பேடுகளில் பதியப்படும். அதன் பின்னரான சாதாரண கணக்கீட்டுப் பணிகள் மாத்திரமே தொழில்நுட்பத்தை உபயோகித்து மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாயின் தேர்தல் வாக்கு கணிப்புகளின் மோசடிகள் இடம்பெறும் என்று சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாகவே எம்மால் இப்போதுவரை இலத்திரனியல் வாக்குப்பதிவிற்கு மாற்றமடைய முடியாத நிலையேற்பட்டிருக்கிறது.
மேலும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவிவரும் வெறுப்புணர்வுப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும் கேள்வியாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கென முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை இலங்கையிலுள்ள பேஸ்புக் நிறுவனத்திடமும் கையளித்திருந்தேன். எனினும் ‘தேர்தல்கள் ஆணையாளர் சமூகவலைத்தளங்களிலும் கைவைத்து விட்டார்’ என்று மறுநாள் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
எனவே, தேர்தல் காலங்களில் ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளும் மிகவும் முக்கிய அவதானத்திற்கு உரியவையாகும். செய்தியில் அனைத்து விபரங்களும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும் கூட, அச்செய்தியின் தலைப்பே அனைவரினதும் கூடிய கவனத்தைப்பெறும். அது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். எனவே இதுவிடயத்தில் ஊடகங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
vidivelli