ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடி இறுதியறிக்கை குறித்து ஆராயவுள்ளது. தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த மூவர்கொண்ட குழுவின் அறிக்கையையும் தெரிவுக்குழு பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முடித்துள்ள நிலையில் இன்று தெரிவுக்குழு கூடி அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளது. தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதுவரை காலமாக தாம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு இறுதி அறிக்கையை தயாரிக்கவும் அந்த அறிக்கையை அடுத்த மாதம் (ஒக்டோபர் ) முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி உறுதிப்படுத்தினார்.
அத்துடன் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணைகளை முன்னெடுத்த தெரிவுக்குழு பல காரணிகளை பதிவு செய்துள்ளதுடன், இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி நியமித்த மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளையும் தெரிவுக்குழு முன்வைக்க தயாரித்துள்ள பரிந்துரைகளையும் உள்ளடக்கிய முழுமையாக அறிக்கையாக தமது அறிக்கை உருவாக்கப்படும் என கூறினார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந்த அமர்வுகளின் போது அறிக்கை சமர்பிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகின்றது. எனினும், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீடித்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் தெரிவிகுழுவுக்கான கால எல்லை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
vidivelli