நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருட ஆரம்பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில் மாகாணசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் என்பனவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதித் தேர்தல் முன்னிலை பெற்றுவிட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று முன்தினம் 18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டு விட்டது. 2019 09.18 ஆம் திகதியிட்ட 2141/ 25 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கிறது. 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளையாக இந்த விசேட அறிவித்தல் வெளியிடப் பட்டுள்ளது.
பதவியிலுள்ள ஜ-னாதிபதியின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 31 ஆம் உறுப்புரையின் (3) ஆம் பந்தியானது தேவைப் படுத்துகின்றதாலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முடிவுறுகின்றதாலும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப் பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதியை தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினமாக நிர்ணயிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்கான கட்டுப்பணம் நேற்று 19 ஆம் திகதி நண்பகல் முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் களம் எவ்வாறு அமையப் போகிறது என்பதில் மக்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். அரசியல் களத்தில் திடீர் மாற்றங்கள் நிகழலாம். அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகள் இடம்பெறலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தனது ஜனாதிபதி வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் இழுபறி நிலையில் இருக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இவ்விரு கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துவிட்டனர்.
ஐ.தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யப்படவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைப் பெயரிடுவதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பலவாரங்களாக நெருக்கடி நிலைமை தொடர்கிறது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக மூவரின் பெயர்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகிய மூவரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்குப் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ளும் மூவருக்கும் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயத்தில் பிரிந்து நிற்கின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு சாராரும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஒரு சாராரும், சபாநாயகர் கரு ஜயசூரியவை மற்றுமொரு சாராரும் ஆதரிக்கின்றனர். இந்நிலையிலே யாரை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வது என்று அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழம்பிப் போயிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். அதனாலேயே சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்படி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும் தீர்மானம் மேற்கொள்வதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாமதப்படுத்தி வருகிறார்.
‘என்னால் வெற்றி பெற முடியுமென்றால் அதற்கான சாத்தியம் இருக்குமென்றால் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை இதனை உறுதி செய்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகின்றது. ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலைமை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தானே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். தன்னையே கட்சி களமிறக்க வேண்டும் என பகிரங்கமாக பொதுக்கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் ஆதரவு அணியென பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அவர்கள் நாடு தழுவிய ரீதியில் மக்கள் பேரணிகளை நடத்தி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார்கள்.
தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிராத நிலையில் ஏற்கெனவே அவர்கள் பல பேரணிகளை நடத்தி விட்டார்கள். ‘சஜித் வருகிறார்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணிகளில் பெரும் திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்’ எதிர்கால ஜனாதிபதி சஜித்”, “சஜித்தே எமக்கு வேண்டும்” எனும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். பதுளை, மாத்தறை, குருநாகல் என்று பல இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. சஜித் பிரேமதாஸவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சஜித் பிரேமதாஸ அத்துடன் மௌனித்து விடவில்லை. நாட்டின் பல பிரதேசங்களில் தொடராக வீடமைப்புத் திட்டங்களைத் திறந்து வைத்து மக்களின் ஆதரவினைத் திரட்டி வந்தார். தொடர்ந்தும் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர் மங்கள சமரவீர தனது இல்லத்தில் சஜித் ஆதரவு அணியுடன் பல கட்டப் பேச்சுவார்தைகளை நடத்தி வருகிறார். ஆனால் இவற்றுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அசைந்து கொடுக்கவில்லை. அவர் ஜனாதிபதி வேட்பாளராக எவரையும் பெயரிடவில்லை. அமைதி காத்து வருகிறார்.
ஜனாதிபதி வேட்பாளரை உடன் பெயரிடுங்கள்
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாகப் பெயரிடுங்கள். தாமதிக்க வேண்டாம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை கடந்த வாரம் அனுப்பிவைத்தார்.
ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுவது தாமதிக்கப்படமுடியாது. அவ்வாறு தாமதப்படுத்தப்படுவது நாட்டுக்கும் கட்சிக்கும் பாதகத்தையே ஏற்படுத்தும். இது ஜனநாயக விரோத செயலாகும் என சஜித் பிரேமதாஸ ரணிலுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை மதித்து செயற்படும் நீங்கள் ஜனாதிபதி அபேட்சகரைத் தெரிவு செய்வதில் பிரச்சினைகள் இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற உறுப்பினர் குழுவையும் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளுங்கள் எனவும் வேண்டியுள்ளார்.
பங்காளிக் கட்சிகள் இணக்கம்
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு அவருக்கு ஆதரவான தரப்பினர் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தி வந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும்பட்சத்தில் வேட்பாளர் தெரிவு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாஸவிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்பு அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வந்ததன் பின்பே அமைச்சர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாலித ரங்கே பண்டார, கபீர் ஹாசிம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது வரையில் உள்ள நிலைப்பாடுகள் குறித்து பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது தரப்பு அமைச்சர்கள் கருத்துகளை முன்வைத்தனர். பங்காளிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் அடுத்த கட்டமாக எம்மால் தேர்தல் நகர்வுகளை முன்னெடுக்க முடியும். எனவே அதற்கான உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என சஜித் பிரேமதாஸ வேண்டிக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான தற்கால அடக்குமுறைகள் குறித்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர்.
அத்தோடு மலையக மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள், சம்பள விவகாரங்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரே களமிறக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் கூறிய பங்காளிக் கட்சிகள், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ களமிறங்கினால் அவருக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.
சபாநாயகரும் களத்தில்-?
கட்சியின் பிரதித்தலைவர் கட்சி யாப்பினையும் மீறி தானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்து களத்தில் குதித்துள்ளமை ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினைகளையும் பிளவுகளையும் உருவாக்கியுள்ள நிலையில் சபாநாயகர் கருஜயசூரியவும்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவைக் களமிறக்குவதை விட சபாநாயகர் கருஜயசூரியவை களமிறக்குவதையே எதிர்பார்த்தார். அதுவும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு நழுவிப்போகும் நிலையேற்பட்டாலே சபாநாயகரைக் களமிறக்க ரணில் எதிர்பார்த்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நிபந்தனைகளின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்குத் தான் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டு செயற்படுபவர்களுடனும் 19 ஆவது திருத்தத்தை உறுதிப்படுத்துபவர்களுடனும் இணைந்தே என்னால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியும். அத்தோடு இதற்கு ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களின் ஆசிர்வாதம் கிடைக்கவேண்டும் என சபாநாயகர் கருஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது;
பல முக்கிய காரணங்களை முன்வைத்து இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்குமாறு கடந்த சில வாரங்களாக மகநாயக்க தேரர்கள் மற்றும் வேறு மதத் தலைவர்கள் பல்வேறுபட்ட சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்திஜீவிகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் என்னை வந்து சந்தித்தார்கள்.
மேலும் சிலர் தனிப்பட்ட ரீதியில் என்னைச் சந்தித்ததுடன் தொலைபேசியூடாகவும் தொடர்பு கொண்டு என்னை ஜனாதிபதி தேர்தலில் களமிங்குமாறு வேண்டிக் கொண்டார்கள். ஊடக மாநாடுகளை நடத்தியும் வேண்டிக்கொண்டார்கள். இவர்கள் அனைவரும் என்னிடம் முன்வைத்த பொதுவான விடயம் என்னவெனில் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்த்து ஒழுக்கமுள்ள ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நம்பிக்கையான தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவை என்பதாகும். அதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குங்கள் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
ஜனாதிபதி வேட்பாளராக முன்வருமாறு தெரிவித்து கிடைக்கப் பெற்றிருக்கும் எந்தக் கோரிக்கையானாலும் 1995 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ந்திருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் சக்திகளுடன் இணைந்தும் அதே போன்று 17 ஆம் திருத்தம் ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் 19 ஆவது திருத்தம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயக மறுசீரமைப்புக்காக தொடர்ந்து செயற்படுபவர்களுடன் இணைந்துமே செயற்படுவேன் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் கோரிக்கை
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கருஜயசூரியவையே நியமிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்த பௌத்த தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமற் செய்யும் யோசனையை முன்வைத்து சபாநாயகரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்படியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். மாத்தளை தம்ம குசல அனுநாயக்க தேரர் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும்படியும் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும்படியும் தினமும் கோரிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவை வந்தடைகின்றன.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவையோ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையோ கலந்துரையாடாது கட்சியின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளாது தான் நினைத்தவாறு தானே ஜனாதிபதி வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தி பிரசாரங்களில் ஈடுபடும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவைவிட கட்சி ஓர் தீர்மானம் எடுக்கும் வரை அமைதிகாக்கும் சபாநபாயகர் கருஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கும் பொருத்தமானவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றாலும் தனக்குக் களமிறங்க வாய்ப்பு இல்லாத சந்தர்ப்பத்திலே அவர் இந்தத் தீர்மானத்தை எட்டுவார் என நம்பலாம்.
ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமையவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி (பங்காளிக் கட்சி) யின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்ணியில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் இருவரில் ஒருவர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டே தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவது மேலும் சவால்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இரகசிய வாக்கெடுப்பினை நடத்தி வேட்பாளரைத்தெரிவு செய்யும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரியுள்ளது.
தொடர்ந்தும் தாமதம் ஏறபட்டால் தனது கட்சி தீர்மானமொன்றினை எடுக்க வேண்டியேற்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்கவின் கருத்து ஐக்கிய தேசிய முன்னணியில் தனது கட்சி தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா? என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது என்ற வகையில் அமைந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை இதுவரை தேர்ந்தெடுக்காமை அக்கட்சிக்குள் இவ்விவகாரம் தொடர்பில் நிலவும் உட்பூசல்களை உறுதிப்படுத்துகிறது.
ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கருஜயசூரிய ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படுவர். என்றாலும் அதன் பின்பும் அக்கட்சி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாஸ களமிறக்கப்படாவிட்டால் அவர் தனித்துக் களமிறங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டதன் பின்பும் பெரும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படலாம் என எதிர்வு கூறலாம்.
அறிக்கை கிடைத்த பின்பே வேட்பாளர் தெரிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின்போது பிரதித்தலைவர் சஜித் தனக்கே ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவேண்டுமென்று அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றினை நியமித்தார்.
இக்குழுவில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசீம், மலிக்சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பு ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, அமைச்சர்களின் கனவுகளை விட கட்சி ஆதரவாளர்களின் கனவுகளுக்கே முதலிடம் வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் நளின் பண்டார தொடர்ந்தும் இவ்விவகாரம் தீர்மானமொன்று எட்டப்படாது இழுபறியில் இருந்தால் இந்தத் தாமதத்திற்குக் காரணம் யாரென மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
செயற்குழுவே தீர்மானிக்கும்
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சந்தித்த சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்துள்ள அனைவரும் வெற்றி பெறக்கூடிய கொள்கைத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்துக் காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்பே ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் என அவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றமையை உறுதி செய்ய முடிகிறது.
ஐ.தே.க. செயலாளர்
‘ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவார காலத்துக்குள் அறிவிக்கப்படுவார்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ள திகதி உத்தியோகபூர்வமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் பிரசாரங்களில் இறங்கியுள்ள கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளார்.
சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளர்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் சவால்கள் ஏற்பட்டால் சபாநாயகர் கருஜயசூரியவே ரணில் விக்கிரமசிங்கவினால் களமிறக்கப்படலாம். ஏனென்றால் கட்சியின் யாப்பினை மீறி ஜனாதிபதி வேட்பாளர் தானே எனக்கூறி பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவரை விட கட்சியின் யாப்பினை மீறாது கட்டுக்கோப்பாக செயற்படும் ஒருவரையே ரணில் விக்கிரமசிங்க விரும்புவார். அதனால் ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கே இருக்கிறது என எதிர்வு கூறலாம்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli