இதுவரை இலங்கையில் அமையப் பெற்றுள்ள ஒவ்வொரு அரசாங்கத்தையும் இதயமோ மூளையோ இன்றி இயங்கும் ‘புல்டோஸர்’ ஒன்றுக்கு ஒப்பிடலாம். புல்டோஸரால் கட்டுமானம் ஒன்றை உடைத்து இடித்துத் தரைமட்டமாக்கத்தான் முடியும். கட்டடத்தை புனரமைக்கவோ நிர்மாணிக்கவோ அதனால் இயலாது.
இலங்கை அரசாங்கம் போன்றே இலங்கை மக்களும். இவர்கள் குப்பை மலையடி வாரத்தில் வாழும் மக்களைப் போன்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குப்பை மலையருகே வாழும் மக்கள் தமது வாழ்வுக்கு சவாலாக அமையும் வகையில் குப்பைகள் குவிக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆரம்பத்தில் தாம் வதியும் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு அது மேடு, மலையாக உயரும் போது தாமும் தமது பிள்ளை குட்டிகளும் சுகாதார சீர்குலைவை எதிர்நோக்குவதாக மக்கள் குப்பை குவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பர். ஆனால் அந்த எதிர்ப்புகள் எதனையும் பொருட்படுத்தாது குப்பைகள் கொட்டுவது தொடரவே செய்கிறது. பலவந்தமாக இது நடந்தேறும் நிலையில் அதனைச் சகித்துக் கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இருக்காது. அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட இம்மக்கள் குப்பை கூளங்கள் அழுகி வீசும் துர்நாற்றம் ஒருபுறம், மறுபுறத்தில் குப்பைகளால் பெருகும் இளையான்கள் உணவுகளில் மொய்க்கும் தொல்லை என்று அசௌகரியங்களுக்குப் பழக்கப்பட்டுப் போகிறார்கள். கொலன்னாவையிலும் நடந்தது இதுவே.
பொதுவான கண்ணோட்டத்துடன் நோக்குகையில் இலங்கைப் பிரசைகள் ஒவ்வொருவரும் குப்பைமேடுகளுக்கருகே வாழும் மக்கள் நிலையைப் போன்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை எப்போதும் இன்னல்களுக்குள் தள்ளும் விதத்திலேயே நாட்டு நடப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு குப்பை கூளங்கள் விடயத்தில் நடந்து கொள்வது போன்றே நாட்டு மக்கள் விடயத்திலும் அரசு செயற்படுகிறது. நாட்டில் நடக்கும் எல்லா நாசகார அநியாயங்களையும் பொறுத்துக்கொண்டு வாழ்வதற்கு நாட்டு மக்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு மக்கள் குப்பைகூள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் உண்மையான குப்பை கூளப் பிரச்சினை குறித்தும் நாம் கவனத்தைச் செலுத்துவோம்.
குப்பைப் பிரச்சினை
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு அப்புறப்படுத்தப்படும் குப்பை கூளங்களின் அளவு 2.3 மில்லியன் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 60 வீதமானவை மேல் மாகாணத்தில் சேரும் குப்பைகளாகும். பொது மக்களின் ஒத்துழைப்புடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஆனால் குப்பை விடயத்தில் பொது மக்கள் தெளிவூட்டப்படும் செயற்திட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. குப்பைகள் வகைப்படுத்தி பிரித்தெடுத்து சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்கும் முறைகூட முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. குப்பையிலிருந்து உரப்பசளை, எரிவாயு, மின்சாரம் போன்றன உற்பத்தி செய்யும் முறைமையும் இலங்கையில் இல்லை. ஆனால் சேரும் குப்பைகளை தேர்ந்தெடுத்துள்ள ஓரிடத்தில் குவியச் செய்யும் காரியம் மாத்திரம் நடந்தேற்றப்படுகிறது.
இலங்கையில் சுமார் 21 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வருடம் ஒன்றுக்கு 2.3 மில்லியன் தொன் குப்பைகள் சேருகின்றன. ஆனால் சுமார் 24 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் குவியும் குப்பையின் அளவோ 45 மில்லியன் தொன் என மதிப்பிடப்படுகிறது. இத்தொகையை இலங்கையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 19 மடங்கு அதிகரிப்பாகும். மீள் சுழற்சிக்குட்படுத்தப்படுவதால் அவ்வளவு பெருந்தொகையாகவிருந்தும், அந்நாட்டால் நிலைமையை சீராக்க முடிந்துள்ளது. ஆனால் இலங்கையில் சிறு தொகையாகவிருந்தும் அதனை வெற்றிகரமாக மீள்சுழற்சி செய்யவோ அல்லது வேறு திருப்திகரமான முறைகளில் ஈடுபடுத்தவோ எங்கள் நாட்டால் இயலாமல் போயுள்ளது. எமது நாட்டு ஆட்சியாளர்களின் இயலாமையும், அறிவின்மையும், கவனயீனமும் இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆரம்பத்தில் இலங்கையில் பெரிய குப்பை மலை உருவாக்கப்பட்டது கொட்டாஞ்சேனையிலாகும். 2009 மார்ச் மாதம் அதில் ஏற்பட்ட வெடிப்பு அனர்த்தத்தைத் தொடர்ந்து இடம்மாற்றப்பட்டது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய அங்கு குப்பை சேகரிப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் விளைவாக கொலன்னாவைப் பகுதியில் ஓரிடம் அதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அங்கும் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அங்கும் குப்பைக் குவியல் பன்மடங்கு பெருக 2 ஏக்கர் நிலம், 21 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் குவியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் குப்பை மலையும் 300 அடி உயரத்திற்கு வளர்ந்தது. அதன் விளைவாக 2017 ஏப்ரல் 14 ஆம் திகதி குப்பை மலை சரிந்து பாரிய அனர்த்தம் ஒன்று விளைந்தது. குப்பை மலை சரிந்து மக்கள் கொல்லப்படும் ஒரு நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டது.
கொலன்னாவ குப்பை மலையால் எதிர்கொண்ட பேரனர்த்தத்தில் கூட இலங்கை பாடம் படிக்கத் தவறிவிட்டது. இதனைத் தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தைத் தான் மாற்றிக் கொண்டதேயன்றி நிரந்தரத் தீர்வுக்கான வழிவகைகளைக் காணவில்லை. குப்பைக்காக அடுத்த இடமாக புத்தளத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.
கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலும் புகையிரதம் மூலமே குப்பைகள் எடுத்துச் செல்லப்படுவதாகவே ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ரிப்பர் வண்டி மூலமே கொண்டு செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குப்பை கொட்டும் போக்குவரத்துக்காக வண்டியொன்றில் 10 தொன் வீதம் எடுத்துச் செல்ல 30 ரிப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாகனப் போக்குவரத்துக்காக 340 கிலோ மீற்றர் பயணத்தூரம் அமைகிறது. இதற்காக ஒரு ரிப்பருக்கு ஒரு இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. எனவே 30 வாகனங்களுக்கும் நகர சபை தினம் ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாவை செலவிடுகிறது. இந்த வகையில் ஒரு கிலோ குப்பைக்கு 10 ரூபா செலவிடப்படுகிறது. அவற்றை சேகரிக்கும் வகையில் கிலோவொன்றுக்கு 10 ரூபா வீதம் செலவாகிறது. எனவே மொத்தத்தில் ஒரு கிலோ குப்பைக்காக 20 ரூபாவை நகரசபை செலவிடுகிறது.
இலங்கை எந்த வகையிலாவது குப்பைகளை மீள் சுழற்சிக்குப் பயன்படுத்தும் விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில்லை. குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மக்களுக்கு தெளிவூட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் சிந்திப்பதில்லை. இதனை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லவும் செயலில் இறங்கவில்லை. இலங்கையின் இந்த மந்தகதி குப்பை பிரச்சினையில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இதர விடயங்களிலும் இலங்கை அசட்டையாகவே நடந்து கொள்கின்றது.
கல்விப் பிரச்சினை
இலங்கையின் பொதுவான கல்வி முறைமையிலும் பாரிய சிக்கலே காணப்படுகிறது. பாடசாலை முறைமையிலும் வசதி படைத்தோருக்கு சிறந்த பாடசாலைகளும் வறிய சாதாரண மக்களுக்கு தரம் குறைந்த பாடசாலைகளுமே கிடைக்கக் கூடியதொரு சூழ்நிலையே இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையில் பிள்ளைகள் பாடங்களை மனப்பாடம் செய்யும் கல்வி போதனா முறையே இங்கு நிலவும் மற்றொரு குறைபாடாகும். எழுத்து முறைமையோ புத்தக முறைமையோ அமுலில் இல்லாத காலத்தைய கல்வி முறைதான் அது. நாம் 21 ஆம் நூற்றாண்டிலே வாழ்கிறோம் என்பதை மறந்தே நடக்கிறோம். இந்த மனப்பாடக் கல்வி முறையால் பிள்ளைகள் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. நாட்டின் எதிர்கால மேம்பாட்டுக்கு கல்வி எந்தளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்ததென்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் நாட்டின் கல்வி பின்தள்ளப்பட்டுக் கொண்டே போகிறது. அது வெளிப் பார்வைக்கு மெருகூட்டப்பட்டுக் கொண்டு போகிறதேயன்றி நவீன முறையில் மாற்றம் செய்யப்படுவதில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட எவருக்கும் அக்கறை இல்லை.
விவசாயப் பிரச்சினை
இதற்கடுத்து இலங்கையில் விவசாயத் துறையை உற்றுநோக்கினால் அதுவும் இன்னும் பழைய யுக முறையிலே நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கென பயன்படுத்தப்படும் பெருவாரியான நிலங்கள் நெற்பயிர்ச்செய்கைக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் மிகவும் குறைந்த வருமானம் தரக்கூடிய பயிராக நெல் வேளாண்மையே விளங்குகிறது. உதாரணத்திற்கு தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்ச்செய்கைக்காக 732442 ஹெக்டேயர் நிலப்பரப்பும் இதர பயிரின வகைகளுக்கென்று 146181 ஹெக்டேயர் பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெற்பயிருக்கென 922025 ஹெக்டேயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கையில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் விவசாயி ஒருவர் போகம் ஒன்றுக்கு சுமார் 40000 ரூபா அளவில் வருமானமாகப் பெறுகிறார். ஈரவலயப் பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்களில் குறிப்பிடத்தக்களவு பகுதிகளில் நெற்செய்கையோ அல்லது வேறு பயிர்வகைகளோ செய்கை பண்ணப்படாது வெறுமையாக விடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. நெற்பயிர்ச்செய்கையாளர் மிகவும் குறைந்த ஆதாயம் பெறக்கூடியவர்களாகவே உள்ளனர்.
உலர்வலய விவசாயிகளுக்கு தம் மேட்டு நிலங்களில் பண்ணப்படும் பயிர்ச்செய்கைகளின் போது கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி வன விலங்குகளால் சூறையாடப்பட்டு விடுவதும் மற்றொரு பாதிப்பாகும். வனவிலங்குகளால் விவசாயியொருவர் 40 வீதம் அளவிலான வருமானத்தை இழக்கிறார். ஆனால் விவசாயத்துறைக்குப் பாரிய பாதிப்பைத் தரும் வனவிலங்குகளை ஒழித்துக்கட்டுவதில்லை. நீண்டகாலமாக இந்நாட்டு அரசாங்கங்கள் மூடத்தனமாக கடைப்பிடித்துவரும் சமய ரீதியிலான ஜீவ காருண்ய முறைமையே அதற்குத் தடையாகவுள்ளது. வேளாண்மைச் செய்கையில் இலங்கை ஆட்சியாளர்கள் மகா பராக்கிரமபாகு மன்னனின் காலச் சிந்தனையிலேயே உள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ அரிசி உற்பத்திக்காக 600 லீட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. உணவுற்பத்தியில் நவீன முறைமையைப் பயன்படுத்தாத ஒரு நாடாக இலங்கை விளங்குகிறது. இலங்கை விவசாயக் குடும்பங்கள் மிகவும் கீழ் மட்டத்திலே தான் உழன்று கொண்டிருக்கின்றன. அவர்கள் கடன் பொறிக்குள்ளும் சிக்குண்டு தவிப்பதையும் காணமுடிகிறது. கிராமிய மட்ட பெண்களும் நுண்கடன் சிக்கலுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் பரிதாபம் வேறு.
தீர்க்கப்படாத இன, மத பிரச்சினை
இலங்கையில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இன, மத, குல பிரச்சினை கூட இதுவரை தீர்த்து வைக்கப்படவில்லை. இது விடயமாக சீரமைப்பு எதுவும் கைக்கொள்ளப்படாது, நிலைமை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுக்கொண்டே போகிறது. அந்தந்த இன, மத, குலப் பிரிவினருக்குரிய உரிமைகளை உரியமுறையில் வழங்குவதிலும் இலங்கை இது வரையில் தோல்வி கண்டே வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்நிலைமை உக்கிரமடைந்து வந்ததேயன்றி சீரடையவில்லை.
1970, 80 களிலே சிங்கள வாலிபர்கள் இரு கிளர்ச்சிகளை மேற்கொண்டனர். அதே போன்று தமிழ் இளைஞர்கள் 30 வருடங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். அண்மையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல தசாப்தங்களாக நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நாடு கட்டியெழுப்பப்படுவதில் தோல்வியையே சந்தித்து வந்தது. மேற்படி குழப்பம், கிளர்ச்சி, போராட்டங்களையெல்லாம் அடக்கியொடுக்குவதிலே அரசு தயவு தாட்சண்யமின்றிச் செயற்பட்டது. அவை அடக்கப்படத்தான் வேண்டும். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அத்தகைய போராட்டங்கள் ஏன் வெடிக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பன போன்ற விடயங்களைத் தேடிப்பார்த்து அவற்றைத் தீர்த்து வைப்பதில் எமது அரசாங்கங்கள் எத்தகைய கரிசனையும் காட்டவில்லை. மேற்கண்ட கிளர்ச்சிகளில் இந்நாட்டின் சிங்கள, தமிழ் வாலிபர்கள் பெருந்தொகையானோர் பலியாகியுள்ளனர். இராணுவமும் போராட்டக்காரர்களும் மோதிக்கொண்டதால் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் அனாசாரமும் அநாகரிகமுமே மேலோங்கியிருந்தன. இக்கால கட்டங்களில் மக்களும் பீதியுடனே காலம் கழித்து வந்தனர். அரசும் அரசியல்வாதிகளும் இதனை மேலும் ஊதிப் பெருப்பித்து குளிர்காய்வதிலேயே தம் கைவரிசையைக் காட்டி வந்தனர்.
உள்நாட்டுப் போராட்டங்களை வெற்றி கொண்ட கையோடு நாட்டையும் சமூகத்தையும் புனர்நிர்மாணம் செய்வதிலேயே அரசு தன் கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். மேற்படி சிக்கலுக்குள்ளான நாடுகள் சிக்கல் முடிந்த மறுகணமே நாட்டின் புனர்நிர்மாணத்தையே தம் பணியாக மேற்கொள்வதுதான் மரபு. ஆனால் இலங்கை அந்த இடத்துக்குக் கூட செல்லவில்லை. இதனால் பிரச்சினைகள் தீர்த்து வைப்பதற்குப்பதிலாக மேலும் மேலும் உக்கிரமடையவே அது வழி செய்தது.
இலஞ்சமும் மோசடியும்
இலஞ்சம், ஊழல், மோசடி அரச நிறுவனங்களில் உச்சகட்டத்திற்கே சென்றுள்ளன. இவையும் நாட்டின் வளர்ச்சியில் பாரிய அடியாகவே உள்ளன. தேசத்தின் பாதுகாப்பில் கடவுச்சீட்டு காரியாலயமும் தேசிய ஆள் அடையாள அட்டை அலுவலகமும் பிரதான பங்கு வகிக்கின்றன. இவற்றின் ஒரு கவுண்டரில் முறையாக கடவுச்சீட்டுக்கள் அடையாள அட்டைகள் விநியோகிக்க மற்றொரு கவுண்டரில் பெருந்தொகை இலஞ்சம் எடுத்துக்கொண்டு போலியான ஆவணங்களை வழங்கி வருகின்றன. இவை மிகவும் நீண்ட காலமாக இலங்கையில் இடம்பெற்று வரக்கூடிய மோசடிகளாகும். அரசும் இவற்றை உணராமலில்லை.
கடவுச்சீட்டுக் காரியாலயம் பெருந்தொகைப் பணம் செலவு செய்து பழைய கணினி முறைமையை மாற்றி நவீன கணினித் தொகுதியொன்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ஆனால் புதிய முறைமையிலும் பழைய விளையாட்டுகள் தொடரவே செய்துள்ளன. டுபாய் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட மதுஷ் பயன்படுத்திய போலி கடவுச்சீட்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டதாகும்.
உள்நாட்டு போரின் போது 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டவர் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியாவார். அப்போது நாட்டை விட்டு வெளியேறி பின்னர் நாட்டுக்குள் பிரவேசித்த போது கைது செய்யப்பட்டார். இவர் இதற்காக பயன்படுத்திய போலிக் கடவுச்சீட்டும் நவீன மயப்படுத்தப்பட்ட கணினி தொகுதியூடாகப் பெறப்பட்ட தென்பதும் தெரியவந்துள்ளது. நீதி மன்றத்தினூடாக கடவுச்சீட்டு பொறுப்பேற்கப்பட்ட பின்னர் வெளிநாடு செல்வதற்கு தடை செய்யப்படுபவர் போலி கடவுச்சீட்டு பெற்று நாட்டை விட்டும் தப்பிச்செல்லும் மர்மம் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
ஆள் அடையாள அட்டைக் காரியாலயமும் இவ்வாறு போலி அட்டைகள் தயாரித்து வழங்குவதிலும் பின் நிற்கவில்லை.
ஒரே குழுவினர் இருபது நிறுவனங்களின் பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வற்வரி மோசடி ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளனர். இம் மோசடியினை கணக்காய்வுத் திணைக்களம் 2004 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறிந்துள்ளது. அது வரையில் 3.57 பில்லியன் ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும் போலியாகத் தயாரிக்கப்பட்ட 13 ஆள் அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போலி அட்டைகள் யாவும் ஆள் அடையாள அட்டை அலுவலகத்தினூடாகவேதான் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே ஆள் அடையாள அட்டைக் காரியாலயத் தலைவரினால் (விஜய கே.வீ. ரணசிங்க) புலிகள் அமைப்புக்குப்போலியான பெருந்தொகை ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றவியல் மோசடித் திணைக்களத்தினால் கண்டு பிடிக்கப்பட்டது.
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தவைக் கொலை செய்வதற்கான முயற்சி இடம் பெற்றது. அதற்காக வந்த தற்கொலைக் குண்டுதாரியிடமிருந்த ஆள் அடையாள அட்டை மூலமாகவே தான் இந்த போலி அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்ட தகவல்கள் அம்பலத்துக்கு வந்தன. உடனே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வாவுடன் இவருக்கிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக கைது செய்யப்படுவதினின்றும் தவணை பெற்றுக்கொண்டார்.
இதே போன்றே அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமையகத்தில் வைத்து கொலை செய்யும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனை முன்னெடுத்த தற்கொலை தாரியான பெண்ணிடம் இருந்த ஆள் அடையாள அட்டையும் மேற்படி புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை ஆள் அடையாள அட்டைகளில் ஒன்று என்பதும் அப்போது கண்டறியப்பட்டது. ஆள் அடையாள அட்டை குற்றவியல் மோசடியில் ஈடுபட்ட மேற்படி உயர் அதிகாரிக்கு அப்போதிருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் கைதாவதில் தாமதம் ஏற்பட்டு காலம் கடந்தே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவருக்கெதிரான வழக்கு விசாரணை இருந்த நிலையில் அவர் மரணமானார். அத்துடன் விடயம் முற்றுப்பெற்றது.
ஆள் அடையாள அட்டை விடயத்தில் இவ்வாறெல்லாம். மோசடி நிகழ்ந்தமை கண்டறியப்பட்ட பின்னரும் அவை தொடராதிருக்க அரசு எத்தகைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை.
தவறு– குற்றம் கண்டறியப் படுமிடத்து அதனைச் சீர் செய்யாது அது தொடர்ந்தும் இடம்பெற வாய்ப்பளிக்கும் இலங்கையின் சட்ட ஒழுங்கின் இலட்சணம் இவ்வாறே இருந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு மிகவும் அவசியப்படுவது தேர்தல் ஒன்றல்ல யாப்புத் திருத்தம் ஒன்றேயாகும். யாப்புத் திருத்தத்தின் பின்பே தேர்தல் ஒன்றுக்குச் செல்லவேண்டும். பெயரளவிலான ஜனாதிபதி முறைமையொன்றுக்கான தேர்தலே நடக்கப்போகிறது. எனவே அதில் கரிசனை காட்டத் தேவையில்லை. அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றுக்கேதான் தாம் வரிந்து கட்டிக்கொண்டு காரியமாற்ற வேண்டும்.
சிங்களத்தில்:
விக்டர் ஐவன்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி– ராவய வார இதழ்.
vidivelli