அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில், பாலமுனைப் பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி இணைப்பாளராக செயற்பட்டு வந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே நேற்றைய தினம் குறித்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மாவட்ட பிரதம செயற்பாட்டாளரான சியாம் என்பவரின் உறவினரின் காணி அமைந்துள்ள பாலமுனை 06, உதுமாபுரம் என்னும் பகுதியில் இருந்தே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இக்காணியில் உள்ள வாழைத்தோட்டம் அமைந்துள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் சியாமினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கருதப்படும் பெருந்தொகையான இறுவட்டுகள் மீட்கப்பட்டிருந்தன. குறித்த இடத்திற்கு அண்மையில் உள்ள பகுதியிலேயே நேற்றைய தினம் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் இத்தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் மெக் ஒன்றும், 30 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டன. அத்தோடு, டெட்டனேற்றர்கள்- 07, வோட்டர் ஜெல், வயர்கோர்ட்- 02, பெற்றரி- 04, டைமர்- 02, யூரியா மற்றும் அமோனியா அடங்கிய தூள் பொதிகள், சலோரேப் -02, மெழுகுதிரி- 02, இரும்புக் குழாய்கள், வெடிபொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் என்பன இதன்போது பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய உளவுத்துறையின் தகவலினை மையப்படுத்தி அம்பாறை வலய சிறப்பு பொலிஸ் குழுவினர், அம்பாறை தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பொலிஸார் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கனரக வாகனத்தின் துணைகொண்டு இக்காணியின் முழுப் பரப்பும் தோண்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக பொருட்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.
பயங்கரவாதி சஹ்ரானின் சகாவான சியாமின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த மே மாதம் 28, 29ஆம் திகதிகளில் 15 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதுடன், மே மாதம் 31 ஆம் திகதி பாமுனைப் பிரதேசத்திலிருந்து மேலும் 35 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியிலிருந்து பயங்கரவாதி சஹ்ரானின் மடிக் கணினியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli