தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2015 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தது. ஆனால் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் இந்த அரசாங்கத்திடமிருந்து நன்மையடைந்திருக்கின்றனர்.
அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தாலும் வடக்கு தமிழ் மக்கள் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பப்போவதில்லை. இதுதொடர்பாக தமிழ் மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமைபோன்று வடக்கில் இனவாத பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றது. கோத்தாபய ராஜபக் ஷ தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றது. 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளித்தார்கள். அப்படியானால் இம்முறை கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஏன் ஆதரவளிக்க முடியாது என்று கேட்கின்றேன்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த முறைபோன்று இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களும் கடந்த தேர்தலில் விட்ட தவறை நிவர்த்தி செய்யும் வகையில் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என்றார்.
vidivelli