ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால் அவருக்காகத் தமது ஆதரவை வழங்கத் தயாரென ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதேவேளை, அன்றைய தினம் இரவு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு இடம்பெற முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் பங்காளிக்கட்சித் தலைவர்கள் கூடி கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுத்த பின்னரே பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டதுடன் பிரதித் தலைவர் சஜித்துடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாலித ரங்கே பண்டார, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது வரையில் உள்ள நிலைப்பாடுகள் குறித்து பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
பங்காளிக்கட்சிகளின் ஆதரவிருந்தால் அடுத்த கட்டமாக தாம் தேர்தல் நகர்வுகளை முன்னெடுக்க முடியும். ஆகவே அதற்காகவே உங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றேன் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான தற்கால அடக்குமுறைகள் குறித்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அத்துடன், மலையக மக்களின் நாளாந்த பிரச்சினைகள், சம்பள விவகாரங்கள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்த பிரதிநிதிகள், தமக்கு மேலும் சலுகைகள் பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணிகளை முன்வைத்துள்ளனர். அதேபோல் பொதுவாக அரசாங்கமாக தாம் எவ்வாறான நோக்கங்களில் செயற்படுவது என்ற காரணிகளும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றிபெறும் வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ள பங்காளிக்கட்சிகள், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச களமிறங்கினால் அவருக்கான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கட்சியாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் வாக்குறுதிகளை வழங்கியதாக சந்திப்பில் சஜித் தரப்பில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமான சஜித் பிரேதமதாஸ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த வாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமெனவும் அதுவரை பேச்சு வார்த்தைகள் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானிக் கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
ஆர்.யசி, ஏ.ஆர்.ஏ. பரீல்
vidivelli