முஸ்லிம்கள் பற்றிய கதைகளை அல்லது முஸ்லிம்களால் படைக்கப்பட்ட கதைகளை உள்ளடக்கிய முதலாவது முஸ்லிம் திரைப்பட விழா அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இவ்வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமான எஸ்.பி.எஸ். தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு சுவாரஷ்யமாக இருக்குமென நாம் நினைத்தோமோ அந்த விடயங்களை உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் திரைப்படங்களின் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தினை வழங்குவதும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை உள்ளடக்கும் வாய்ப்பும் இதில் இருக்கும்’ என திரைப்பட விழாவின் பணிப்பாளர் ஜோன் மெக்கீயௌன் தெரிவித்தார்.
முதலாவது முஸ்லிம் திரைப்பட விழா அங்குரார்ப்பணத்திற்கு 60 திரைப்படங்கள் வந்துள்ளன. அவை இம்மாதம் திரையிடப்படவுள்ளன. சிறப்புத் திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஆறு பேர் ஆஸ்திரேலியர்களாவர் இவர்களுள் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் காணப்படுகின்றனர். இத் திரைப்படங்கள் கலாசாரம், உறவுகள், இஸ்லாமியப் பீதி மற்றும் இனவெறி போன்ற பல்வேறு சிக்கல்களை ஆராய்கின்றன.
முஸ்லிம் திரைப்பட விழா என்று கூறியவுடனேயே தொழுகையில் ஈடுபடுதல், நோன்பிருத்தல் சம்பந்தமாக மக்களுக்கு கற்பிப்பதுபோன்ற சமயம் சார்ந்த விழாவினை நாம் நடத்தப் போகின்றோமென சிலர் நினைப்பர். ஆனால் விடயம் அவ்வாறல்ல என திரைப்பட விழா ஏற்பாட்டாளரான தாரிக் சம்கிஹி குறிப்பிடுகின்றார்.
இவ்விழா உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் கதைகளை சொல்லப்போகிறது, அவுஸ்திரேலிய முஸ்லிம்களின் கதையினையும் அது சொல்லும். உள்ளதை உள்ளவாறே சொல்லும், அதில் சில சாதக பாதகங்கள் இருக்கும். உள்ளதை உள்ளவாறே சொல்லும் எனக் கூறும்போது இனவெறி, பழமைவாதம், தேசியவாதம் என்பவற்றை இது தகர்ப்பதோடு மக்கள் தொடர்பில் மேலும் புரிதலை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் அவுஸ்திரேலிய வரலாற்றிற்கு எந்தளவு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என இத் திரைப்பட விழா வெளிப்படுத்தும். அவஸ்திரேலியத் திரைப்படத் துறைக்கு இது புது வரவாகும் என்பதோடு அனைவராலும் வரவேற்கப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் புதிய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினர் அவுஸ்திரேலியாவுக்குச் செய்துள்ள பங்களிப்பை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதோடு 20 மில்லியன் மக்களில் 1.7 வீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.
கிறிஸ்தவத்திற்கு அடுத்த இரண்டாவது பெரும்பான்மை மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.
vidivelli