2020 இல் ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை. ஆனால் இந்த அரசியலமைப்பின் பிரகாரம் 2020 இல் தெரிவாகும் ஜனாதிபதிக்கு எந்த அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சுடன் இணைத்துக் கொண்டமையானது அரசியல் ரீதியில் பவ்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன. எவ்வாறாயினும் இந்த விடயத்தை கொள்கை ரீதியான பிரச்சினையாகவே கருதவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு தற்போது எந்த அதிகாரமும் இல்லை என்றும் பிரதமர் பதவிக்கே அதிக அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறுகிய காலத்திலேயே தனக்கு இன்னும் அதிகாரம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை இணைத்து 19 ஆவது அரசியலமைப்பினூடாக தனது அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்பதையும் ஒப்பித்துக் காட்டியுள்ளார்.
ஆகவே, ஜனாதிபதியின் பேச்சும் செயலும் எண்ணமும் ஒன்றுக்கொன்று மாறுப்பட்டவை என்பதை இந்த செயல் தெளிவாகக் வெளிகாட்டியுள்ளது. இந்நிலையில் அவரது தீர்மானங்கள் குறித்து உறுதியாக நம்பிக்கை வைக்க இயலாது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழக்கையில் இறுதியான தருணங்களாகவே இது அமைகின்றது.
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகபட்ச அதிகாரத்தை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே 19 ஆவது அரசியலமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இருப்பினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முழுமையாக ஒழிக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரத்துக்கான அங்கீகாரம் இன்னும் இருப்பதாலேயே அனைவரும் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணுகிறார்கள். நிறைவேற்று அதிகாரத்துக்கு இன்னும் அங்கீகாரம் இருப்பதாலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தனது அமெரிக்க பிராஜா உரிமையை நீக்கிவிட்டு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். முக்கியமான அரசசார் நியமனங்கள் உள்ளிட்ட ஒருசில அதிகாரங்கள் அரசியலமைப்பு சபையினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அவருக்கு அதிகாரமில்லை என்று குறிப்பிட முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுசூழல் அமைச்சும் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரண்டு மாத்திரமே தற்போது இருக்கும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அடுத்துவரும் ஜனாதிபதிக்கு ஏந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது என்றார்.
vidivelli