கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும்போது மேற்கொண்ட நெருக்கடிகளை பொதுமக்கள் மிகவும் வேதனையுடனே பொறுத்திருந்தார்கள். அவ்வாறான நிலையில் அவர் ஜனாதிபதியானால் என்ன நிலை ஏற்படும் என்பதை மக்கள் அறிவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் பல்வேறு சட்டவிரோத, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதனால் பொதுமக்கள் பல்வேறுவிதமான நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். அவருக்கு எதிராக முறையிடவும் முடியாத நிலையே அன்று இருந்தது. அதனால் மக்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டு அந்த ஆட்சியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
அவ்வாறான நிலையில் தற்போது கோத்தாபய ராஜபக் ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தயாராகி வருகின்றார்.
ஒரு அமைச்சின் செயலாளராக இருந்துகொண்டு அவர் மக்களின் கருத்துக்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பளிக்காது தான் நினைத்தபிரகாரம் செயற்பட்டார். குறிப்பாக கொழும்பில் கொம்பனித்தெரு பிரதேசத்தில் தங்கள் சொந்த வீடுகளில் இருந்த மக்களை பலாத்காரமாக வெளியேற்றி நகர அபிவிருத்திக்காக என தெரிவித்து அவர்களின் வீடுகளை தரைமட்டமாக்கினார்.
அந்த மக்களை வனாத்தமுல்ல பகுதிக்கு கொண்டுசென்று குடியமர்த்தினார். அவர்களின் வீடுகளுக்கான நஷ்டயீடும் வழங்கப்படவில்லை.
அத்துடன் கோத்தாபய ராஜபக் ஷ செயலாளர் பதவியில் இருக்கும்போது எமது நாட்டு ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் முற்றாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுதவோ செயற்படவோ முடியாத அச்ச நிலையிலே இருந்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, கீத் நொயார் போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
ஆனால் இந்த அரசாங்கத்தில் ஊடக சுதந்திரத்தை போதுமானளவு வழங்கியிருக்கின்றோம். அதனால் இன்று ஊடகங்களினால் அதிகம் விமர்சிக்கப்படுவது எமது அரசாங்கமே. என்றாலும் அதற்கு எதிராக எமது அரசாங்கம் செயற்படவில்லை. ஆனால் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ நாட்டின் ஜனாதிபதியானால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்குச் செல்லும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்தை மக்கள் அறிவார்கள்.
அதனால் மக்கள் மீண்டுமொருமுறை தங்கள் கரங்களாலே அழிவைத்தேடிக்கொள்ள முற்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.
எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli