ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது. இதற்கான பத்திரத்தை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் சமர்ப்பித்திருந்தனர். அப்போது அமைச்சர் ஹலீம், இது முன்னாள் நீதி அமைச்சரான மிலிந்த மொரகொட 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமித்த குழுவின் திருத்தங்களே எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் ஏற்றுக்கொண்டவை எனவும் குறிப்பிட்டார்.
* முஸ்லிம் ஆண், பெண் திருமண வயதெல்லை 18.
* விவாகரத்தால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நஷ்டஈடு.
* காதி நீதிமன்றங்கள் தரமுயர்வு.
* காதிகளின் நிரந்தர முழுநேர நியமனம்.
* ஷரீஆ அறிவுள்ள ஆண் வழக்கறிஞர் நியமனம்.
* திருமணப்பதிவும் நிக்காஹ்வும் கட்டாயம்.
* விவாகரத்தின்போது தலாக்கிலும் குலாவிலும் பஸ்ஹிலும் மனைவிக்கு நஷ்டஈடு.
* நிபந்தனைகளோடு மட்டுமே பலதார மணம் அனுமதிக்கப்படும்.
* காதியின் அனுமதியின்றி நிகழும் திருமணம் சட்டபூர்வமற்றது.
* மணப்பதிவுப் பத்திரத்தில் வலியோடு மணமகளும் ஒப்பமிட வேண்டும்.
* காதியின் அனுமதியின்றி நிகழும் பலதார மணம் தண்டனைக்குரிய குற்றம்.
* கைக்கூலியைப் போல் அசையா சொத்துக்களையும் மீளப்பெறுதல்.
* முஸ்லிம் விவாக, விவாகரத்து ஆலோசனைச் சபையிலும் காதிகள் சபையிலும் பெண் பிரதிநிதித்துவம் ஏற்கப்படும்.
* பெண்கள் விவாகப் பதிவாளர்களாக ஏற்கப்படுவர்.
* காதி நீதிமன்றங்கள் தரமுயர்த்தப்படும்.
* ஒரு தரப்போ இரு தரப்புகளுமோ மத்ஹப் இல்லாதவராயின் அல்லது வெவ்வேறு மத்ஹப்களாயின் அது பற்றிய இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் திருமண விடயங்கள் யாவும் ஷரீஆவுக்கு ஏற்ப நிகழ்த்தப்படுமே தவிர எந்த மத்ஹபின் அடிப்படையிலும் நிகழ்த்தப்படாது.
என்றெல்லாம் அந்தத் திருத்தத்தில் காணப்படுகின்றன. இதற்கு மேல் இவற்றில் சல்லடை போட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இவை சரியானவையா? என அடுத்த தலைமுறை அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ளட்டும். இப்போதைக்கு இதை நிறைவேற்றி முடித்துக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் களத்தில் களப்பாதுகாப்பு முக்கியமானதாகும். இப்போது அவற்றைப் பாதுகாப்போம். காரணம் சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம். விளக்கத்துக்கும் காலமாற்றத்துக்கும் ஏற்ப வருங்காலத்திலும் சித்திரங்களைத் தீட்டிக் கொள்ளலாமே. முஸ்லிம் தனியார் சட்டம் அல்லாஹ் வகுத்து நேரடியாக வழங்கியதோ, நபி (ஸல்) முழுமைப்படுத்தியதோ அல்ல. குர்ஆன், ஹதீஸ், மத்ஹபுகள் மூலம் இஸ்லாமிய அறிஞர்கள் இஜ்திஹாத் என்னும் சுயஆய்வுப்படி வழங்கியதாகும். அதனால் இது காலமாற்றத்துக்கும் தெளிவுக்கும் ஏற்றபடி திருத்தப்பட்டிருக்கிறது. முன்பு திருத்தப்பட்டது இப்போதும் திருத்தப்படுகிறது. இனியும் திருத்த முடியாது என மட்டிடவும் முடியாது. என்றாலும் கூட இப்போதைக்கு எந்தத் திருத்தத்தையும் முன்வைத்து விதர்ப்பத்தோடு சன்மார்க்க விளக்கங்களில் முரண்பட்டு நிற்போமாயின் சமூக ரீதியிலும் சன்மார்க்க ரீதியிலும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரே நிலைப்பாட்டுக்கு வரவே முடியாது போய்விடும்.
பலாக்காய் வெட்ட முடியாத கத்தி எதற்கு என்பார்கள். உடனடி தேவைக்கு விரைவான முடிவை பன்னூறு அறிஞர்கள் பல்லாண்டு முயன்றும் காண முடியாவிடில் இத்தகைய அறிவு இருந்து என்ன பயன்? அல்லாஹ்வே தோட்டத்தின் சொந்தக்காரன் அறிஞன், காவலாளி. அந்த வகையில் ஆலிம்களால் இஸ்லாத்தை வகுக்க முடியாது. இஜ்திஹாத் முறைப்படி அவர்கள் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டும். பேரினவாதத்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்காமல் தளத்தைப் பாதுகாக்க இஸ்லாம் நிலைத்திருக்க சேதாரமற்ற சரியான வழியைக் காட்டவேண்டும். யாப்பு மூலம் நமக்கு இருந்த ஒரே அடிப்படை உரிமையிலும் பொடுபோக்கு. 2009 ஆம் ஆண்டு பொறுப்பு வழங்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துக்கான திருத்தம் 10 வருடகால நீண்ட தாமதத்துக்குப் பின் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அறியாமை காரணமாகக் கவனயீனம். பின்னர் விருப்பக் குறைவு காரணமாக அக்கறையின்மை. முடிவில் கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டிய அவசர கோலம் காரணமாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் மூன்று தன்மைகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் இதை அடிப்படையாக வைத்து விவாக, விவாகரத்துச் சட்டத்துக்குப் பிரதியீடாக பேரினவாதிகள் பொதுச்சட்டத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முயன்றனர். அந்த வகையில் நிரந்தரமான அடிப்படை உரிமையைத் தக்கவைப்பதற்காக எப்படியும் ஒரு முடிவுக்கு வந்துவிடவே வேண்டும் என்னும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டதன் காரணமாகவே இது முடிவுகாணப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். முன்பு காலத்தை அதிகமாகக் கடத்தியிருந்ததாலும் இப்போது விரைவாக ஒரு தீர்வுக்கு வந்தே ஆக வேண்டும் என்னும் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருந்ததாலும் இதைத் தவிர வேறு வழி இல்லை. முடிவில் விதர்ப்ப ஆராய்ச்சிகளாலும் விட்டுக்கொடுப்பின்மையாலும் முடியாமற்போன விடயம் 4/21 வெடிப்புகளுக்குப் பின் நிறைவேறியிருக்கிறது.
1951 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் இயற்றப்பட்ட போது இலங்கை முஸ்லிம்களிடம் காணப்பட்ட சமூக சூழலுக்கும் தற்போதுள்ள சமூக சூழலுக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது. அதில் எந்தக் குறைபாடுகள் இருந்த போதும் அறிவு குறைந்த நிலையிலும் கூட பாரம்பரிய குடும்ப ஒழுங்கின் காரணமாக அப்போது இதற்காக எந்தக் கேள்வியும் எழவில்லை. இப்போது கட்டுப்பாடற்ற குடும்ப ஒழுங்கீனங்களின் காரணமாகவே பாரம்பரிய முறையில் திருத்தங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.
இப்போது கட்டுப்பாடற்ற குடும்ப ஒழுங்கீனங்கள் ஓரளவு காதி நீதிமன்றங்களாலேயே வெளிக்காட்டப்படாமல் இருந்திருக்கிறது. காதி நீதிமன்றங்கள் நீக்கப்பட்டால் பொது நீதிமன்றங்களில் அத்தனையும் அம்பலமாகி பகிரங்கமாகும் நிலை தோன்றும். எனவே காதி நீதிமன்றங்களை ஒழுங்கமைக்கும் செயற்பாடு முஸ்லிம்களின் தனி உரிமையை மட்டுமன்றி மானம் மரியாதையையும் காக்கும் செயற்பாடு என்றேதான் கூறிக் கொள்வேன்.
1978 ஆம் ஆண்டின் திறந்த பொருளாதாரக் கோட்பாடு ஒரு வகையில் காதிகளையும் முஸ்லிம் மணமக்களையும் கூட பாதித்தே இருக்கிறது. வசதியான மாப்பிள்ளை பெண்ணைத் தேடியே தரகர் அண்டுகிறார். அது போன்றே சில காதிகளும் செயற்பட்டதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆக, பெண்ணுக்கு மட்டுமன்றி ஆணின் வாழ்விலும் கூட பணம் விளையாடியிருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறது.
அதனால் வரும்படி குறைந்த சில காதிமார் மாப்பிள்ளைக்குக் குறைந்த தொகை தாபரிப்பை விதித்து மாப்பிள்ளையிடமிருந்து பலன் பெற்றதும் உண்டு. அதற்கெனப் பெண்ணை அடிக்கடி அலைக்கழித்து ஏற்றுக்கொள்ள வைத்ததும் உண்டு. வசதியுள்ள ஆண் வீட்டாரும் பெண் வீட்டாரும் உடனடியாகவே விவாகரத்துப் பெற்றதும் உண்டு. மறுமணமோ பலதார மணமோ வசதியிருந்தால் எல்லாம் எளிது. இதில் பெண்ணுரிமை மட்டுமன்றி ஆணுரிமையும் கூடப் பாதிக்கப்படுகிறது. எனினும் ஆண்களை விடவும் பெண்களே 80 வீதம் பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்ட ஓர் ஆண் சொன்னார். பெண் அழுதால் பாவம் என்கிறார்கள். ஆண் அழுதால் மாயம் என்கிறார்கள் எனப் புலம்பினார். காரணம் காதியார் பெண் வீட்டார் சார்பாக நின்று அவனை நிர்க்கதியாக்கினாராம். அவன் அன்பு மிகுந்து பெண்ணுக்குக் கொடுத்த சொத்துக்களை பெண் வீட்டார் அபகரித்துக் கொண்டு பெண்ணை நிர்ப்பந்தித்து விவாகரத்துப் பெறச் செய்தனராம்.
நிக்காஹ் என்பது பொறுப்பேற்றல் என்றால் ஈஜாபுகபூல் என்பது பொறுப்புக் கூறலாகும். ஒருவன் இப்படிக் கூறுகின்றான். நான் காணாத பெண்ணா மச்சான்? என்ன செய்வது. உம்மாவுக்காகவே அவளை முடித்தேன். வயதான தாய்க்கு உதவி வேண்டுமே. பாவம் அம்மா இவள் தேவைக்கும் உதவுமே என்றான். விவாகரத்து பற்றிய அச்சம் இவனுக்கு இல்லாததே இதற்குக் காரணமாகும்.
உண்மையில் சமூகம் முழுமையான ஒழுக்க விழுமியத்தைப் பெறாத வரையில் தற்போது திருத்தப்படும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமும்கூட புண்ணுக்குப் புணுகு தடவுவது போன்றதாகவே அமையும். அதுபோக, உடனடியாக முழுமையான ஒழுக்க விழுமியத்தைக் கொண்டுவர முடியுமா என்பதும்கூட கேள்விக்குறியே ஆகும். அந்த அளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் இல்லற ஒழுக்க வாழ்வு ஏனைய சமூகத்தினரால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. காரணம் முஸ்லிம் முன்னோரின் இல்லற ஒழுங்குமுறை அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததே ஆகும்.
தற்போது பொது நீதியை அமுல்படுத்தும் ஏனைய சமூகங்களிடம் காணப்படும் திருமணப் பிரச்சினைகளை விடவும் காதி நீதிமன்றங்களை வைத்திருக்கும் முஸ்லிம்களிடம் திருமணப் பிரச்சினைகள் அதிகமாக இருப்பின் காதி நீதிமன்றங்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதில் வியப்பு இல்லையே? அந்த வகையில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் புதிய திருத்தங்கள் மூலமாகவாவது முஸ்லிம்களின் இல்லற ஒழுக்க விழுமியத்தை முன்மாதிரியாக முன்வைக்க முடியுமாயின் இது ஒரு அரும் பெரும் வாய்ப்பாகவே அமையும் என நினைக்கிறேன். இதிலும் தவறினால் காதி நீதிமன்றங்களின் இருப்புக்கு ஆப்பு வைக்கும் செயற்பாட்டை சகலருக்கும் ஒரே நீதி எனக் கோஷமிடுவார் அதை முன்வைக்கும் நிலையே ஏற்படும்.
தற்போது நூற்றுக்கணக்கான மத்ரஸாக்களும் ஆயிரக்கணக்கான ஆலிம்களும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களும் இலட்சக்கணக்கான தொழுகையாளிகளும் பல்வேறு தஃவத் அமைப்புக்களும் தரீக்காக்களும் இருந்தும்கூட இவை அத்தனையும் அன்று வாழ்ந்த முஸ்லிம் மூதாதையரின் இல்லற ஒழுக்க விழுமியங்கள் இல்லை என்பதை காதிக் கோடுகளில் அன்றாடம் வழக்குகள் பெருகி வருவதன் மூலம் கண்டுகொள்ள முடிகிறது.
மறுமணத்துக்கும் பலதார மணத்துக்கும் விவாகரத்துக்குமே காதி நீதிமன்றம் என்னும் நிலைப்பாட்டை மாற்றி சமரசம் செய்து வைக்கப்படும் இடம், நிவாரணம் வழங்கும் இடம், வாழ்விக்கும் இடம் என்னும் நிலைப்பாட்டை ஏற்படுத்தவேண்டும். பெண்களைத் தரம் தாழ்த்தும் இடமாகவன்றி சமநிலைப்படுத்தும் இடமாக்கப்பட வேண்டும்.
இவை உறுதிப்படுத்தப்பட்டாலன்றி காதி நீதிமன்றம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகாது. ஆக, புதிய மாற்றங்களின் நோக்கம் அந்த இலக்குகளை அடைவதாகவே இருக்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் அந்த இலக்கை அடைய வழிகாட்டுமா? இல்லையா? மேலும் மாற்றங்கள் வேண்டுமா என்பதை இனிவரும் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போது பெண் காதி வேண்டும் என்னும் கோரிக்கை மட்டும் தவிர்க்கப்பட்டு ஏனையவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தவிர்க்க முடியாத சூழலில் 18 வயதுக்கும் குறைவான பெண்ணும் மணமுடிக்கலாம் என்னும் இயற்கை அணுகுமுறையும் கூட தவிர்க்கப்பட்டுள்ளது. தலாக்கிலும் குலாவிலும் பஸ்கிலும் விதிக்கப்பட வேண்டிய நஷ்டஈடுகள் பற்றியும் விளக்கங்கள் இல்லை. பலதார மணத்துக்கான நிபந்தனைகள் எவை? காதியின் அனுமதியின்றி நிகழும் பலதார மணத்துக்கு என்ன தண்டனை? கைக்கூலி இஸ்லாத்தில் இல்லை. பெண்ணின் அசையா சொத்துக்களை மாப்பிள்ளை கோரிப் பெறுவதும் கூட இஸ்லாத்தில் இல்லை. அவற்றை வழங்கினால்தானே மீளப் பெறமுடியும். இவற்றை ஷரீஆ சட்டம் அனுமதிக்கிறதா?
பெண் பிரதிநிதித்துவம் முஸ்லிம் விவாக, விவாகரத்து ஆலோசனை சபையிலும் காதிகள் சபையிலும் ஏற்கப்பட்டு விவாகப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்படுவர். எனினும் தலைமைக்காதியாக முடியாது. இதற்குக் காரணம் பெண் தலைமை ஷரீஆவுக்கு முரண் என்றே கூறப்படுகிறது. இவ்விடயத்தில் எதிரும் புதிருமாக இரு கருத்துகள் இருப்பினும் கூட தற்போதைய அவசர, அசாதாரண சூழலில் சிறுசிறு சேதாரங்கள் இருப்பினும் முற்று முழுதாக ஏற்று களத்துக்காக தளத்தைப் பாதுகாத்துக் கொள்வதே ஏற்புடையதாகும்.
ரிஸ்வி முப்தி, பெண் காதி வேண்டாம் என்பதில் மட்டும் உறுதியாக நின்றுகொண்டு ஏனையவற்றில் விட்டுக்கொடுத்துவிட்டார். அவரது அந்த நோக்கம் மட்டும் நிறைவேறியிருக்கிறது. அதில் பேரியல் அஷ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கருத்துகளும் கூட எடுபடவில்லை. இது பற்றி ரவூப் ஹக்கீம் பாத்திமா மகளிர் பாடசாலையில் உரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி க்களான நாம் அண்மையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் பற்றி கூடிய கவனத்தை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கான திருத்தங்கள் மூலம் கிடைக்கும் தீர்வுகள் வெளியே இருந்தல்ல, எமது சமூகத்திலிருந்தே கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதில் பெண் தலைமை பற்றிய சர்ச்சைகளும் எழவே செய்கின்றன. அதன்படி ஆலிம்களோடு கலந்துரையாடி இணக்கம் காண வேண்டியும் இருக்கிறது.
பெண் தலைமை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? நபிகளாரின் வாழ்வு முறை காட்டுவதென்ன? மத்ஹபுகளின் விளக்கங்கள் என்னனென்ன? என்னும் விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில்தான் இப்போது முஸ்லிம் விவாக விவாகரத்து விடயம் முஸ்லிம் எம்.பி க்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பெண்களின் நிர்வாகிகள் என்னும் குர்ஆன் வசனத்தைக் காட்டியே பெண் தலைமை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
எனினும் இமாம் அபூஹனீபா, இமாம் தபரி போன்றோர் இதை மீளாய்வு செய்யவேண்டும் என்னும் நிலைப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் இது குடும்பத் தலைமையை மட்டுமே குறிக்கும் வசனம். இதைப் பொதுவாக்கி எல்லா விடயங்களிலும் பெண் தலைமைக்குத் தகுதியற்றோர் என்னும் வாதம் பிழையானது என்கின்றனர்.
ஆக, அதன் முந்திய பிந்திய வசனங்கள் யாவும் குடும்ப விடயங்களையே குறிப்பிடுகின்றன. அதன்படி குடும்பச் செலவு ஆணுக்குரியது என்பதே பொருளாகிறது என்கிறார்கள். அதற்கு மாறாகத் தலைமைக்கான தகுதி பெண்ணுக்கு இல்லை எனக் கூறப்போவோமாயின் ஆண்கள் கடமைபுரியும் இடங்களில் குறிப்பாக பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் தலைமை வகிக்க முடியாமற்போகும். இதன் மூலம் பெண் நீதிபதியாகவும் செயற்பட முடியாது என்னும் கருத்தியல் உண்டாகும்.
பெண் தலைமைக்கான சீர்திருத்தங்கள் 1961 ஆம் ஆண்டிலேயே இந்தோனேஷியாவில் உள்வாங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் மலேஷியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் பழமைவாதத்திலேயே பிடிவாதமாக இருக்கும் பலர் எமது சமூகத்தில் இருக்கின்றனர். சமூகத்தில் எடுத்த எடுப்பில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால் கிளர்ச்சி உருவாகலாம். இவர்களை இணங்கச் செய்வதே எமது முதல் தேவையாகும். எனவே ஓரளவு விட்டுக்கொடுப்போடு இதைக் கையாளவேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறி முடித்தார்.
உண்மையில் பெண் மனதை பெண்தான் அறிவாள். ஆண்கள் முழுமையாக அதைப் புரிந்துகொள்வது அரிது. சில காதிகள் அந்தரங்க விடங்களையும் அம்பலத்தில் கேட்டுவிடுவார்கள்.
பெண்ணை தாழ்வுற நினைத்து அலட்சியப்படுத்தும் காதிகளும் இருக்கிறார்கள். எனவே நீதி இருபாலாருக்கும் பொது. அதில் ஆண் – பெண் வித்தியாசமில்லை. அதன் படி தனக்கு இன்ன நீதிபதியால் நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கையை குறித்த நீதிபதி உத்தரவாதப்படுத்த வேண்டும்.
நீதி அனைவருக்கும் பொது என்பதால் அதை வழங்குபவருக்கு ஏற்றது தகுதியே தவிர பால் பாகுபாடு தேவை இல்லை. ஓர் ஆனை விடவும் அந்த தகுதி ஒரு பெண்ணுக்கு இருப்பின் என்ன செய்வது? தற்போது ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஆண் காதிகளால் தாம் பாதிக்கபட்டுள்ளதாகவே முறையிடுகிறார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு நீதியை வழங்கியே ஆகவேண்டும் என்றால் என்ன செய்வது? அவர்கள் விரும்பாத நம்பிக்கையற்ற காதியிடம் நீதியைப் பெற்றுக்கொள்ளுமாறு வலிந்து பாரப்படுத்துவதா? சரி இப்போதைக்கு நமது நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தை ஏற்று அந்த உரிமையைத் தக்கவைத்து பேரினப் பிடியிலிருந்து நாம் கழறுவோமாக.
vidivelli