விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07

அடிப்படைவாதம் சொல்லின் அரசியலும் அரசியல் சொல்லாடலும்

0 1,448

“மனி­த­குல வர­லாறு நெடு­கிலும் பல அற்­பு­தங்கள் நிகழ்ந்­துள்­ளன. அந்த அற்­பு­தங்­க­ளி­லெல்லாம் மிகப் பெரிய அற்­புதம் ஒன்றே ஒன்­றுதான். ஒரு மதம் இறு­தியில் தோன்றி புவிப்பரப்பின் கால்­வாசி மக்­க­ளையும் கால்­வாசி நிலத்­தையும் ஒரு நூற்­றாண்­டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்­ட­மைதான் இற்­றை­வரை நிகழ்ந்த மாபெரும் அற்­புதம் (Biggest Miracle). இஸ்லாம் அந்த அற்­பு­தத்தை நிகழ்த்திக் காட்­டி­யது.” – உலகப் புகழ்­பெற்ற வர­லாற்­றா­சி­ரி­யர்­ ஏர்னஸ்ட் பார்கர்.

உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து இலங்­கையின் அர­சியல் வட்­டா­ரங்கள், இரா­ணுவ வட்­டா­ரங்கள், ஊட­கங்கள் என சந்து பொந்­து­களில் எல்லாம் உச்­ச­ரிக்­கப்­படும் ஒரு சொல் அடிப்­ப­டை­வாதம் (Fundamentalism) ஆகும். இச்சொல் எதைக் குறிக்­கின்­றது என்ற பின்­னணி அறிவு எத்­தனை பேருக்கு உள்­ளது என்­பது ஒரு பெருத்த கேள்­வி­யாகும். நுகே­கொ­டையில் வஹாப்­வா­தத்­திற்­கெ­தி­ராக கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டதை அடுத்து, பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ராகக் கலந்­து­கொண்ட பீரங்கிப் பேச்­சாளர் வீர­வன்­ஸ­விடம் ஒரு சிங்­கள ஊடகம் ‘வஹா­பிஸம்’ என்றால் உங்­க­ளுக்கு என்­ன­வென்று தெரி­யுமா? எனத் தொடுத்த கேள்­விக்கு அவர் “தெரி­யாது” எனப் பதி­ல­ளித்­தி­ருந்தார். இரண்டாம் முறையும் ஊட­க­வி­ய­லாளர் தொலை­பேசி எண்­களை அழுத்­தி­ய­போது வீர­வன்­ஸவின் தொலை­பேசி ‘ஓப்’ செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இலங்கைச் சூழலில் இன்று அர­சி­யல்­வா­திகளும் ஊட­க­வி­ய­லா­ளர்களும் அர்த்தம், பின்­புலம், வர­லாற்றுப் பிரக்ஞை ஒன்­றுமே இல்­லாமல் அடிக்­கடி பிர­யோ­கிக்கும் ஒரு பதமே இந்த அடிப்­ப­டை­வாதம். முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்­க­ளுடன் பகி­ரங்க தொலைக்­காட்சி விவா­த­மொன்றில் கலந்து கொண்ட பௌத்த மத­குரு கங்­கொ­ட­வில தேரர்தான் சிங்­கள வட்­டா­ரத்தில் இச்­சொல்லை முதலில் பயன்­ப­டுத்­தி­யவர். அவ­ருக்குப் பின்னர் “அல்­லாஹு அக்பர்” எனும் நூலை எழு­தி­ய­வரும் பெருந்­தே­சி­ய­வா­தி­யு­மான பட்­டாலி சம்­பிக்க எனத் துணிந்து கூறலாம். அவ­ரது நூல்­க­ளிலும் பத்­தி­ரிகைக் கட்­டு­ரை­க­ளிலும் அடிப்­ப­டை­வா­தத்தை இஸ்­லா­மிய அடை­மொ­ழி­யுடன் இணைத்து “இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்”, ”முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம்” என்­றெல்லாம் அவர் பேசியும் எழு­தியும் வரு­கிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் குறிப்­பாக 2012 ஆம் ஆண்டில் தம்­புள்ளை பள்­ளி­வாசல் குறித்து கிளர்ந்­தெ­ழுந்த ஞான­சாரர் இச்­சொல்லை அடிக்­கடி கையாண்டார். இன்றும் ஒவ்­வொரு நாளும் ஒரு முறை­யேனும் அவர் இச்­சொல்லை தனது ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலும், பன்­சலை உரை­க­ளிலும் பயன்­ப­டுத்திக் கொண்டே இருக்­கிறார். தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலை அடுத்து ஜனா­தி­பதி, பிர­தமர், இட­து­சா­ரிகள் என கட்சி பேத­மின்றி அனைத்து சிங்­கள அர­சியல், சமூகத் தலை­வர்­களும் அடிப்­ப­டை­வாதம், அடிப்­ப­டை­வா­திகள் எனும் சொற்­களை அதிகம் பிர­யோ­கித்­தனர். இந்த நிமிடம் வரை அடிப்­ப­டை­வாதம் என்ற சொல் Fundamentalism என ஆங்­கில ஊட­கங்­க­ளிலும் “மூல­தர்­ம­வா­தய” என சிங்­கள ஊட­கங்­க­ளிலும் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்­கலாம். இதைப் பாவிக்­கின்­ற­வர்­க­ளிடம் அப்­படி என்றால் என்­ன­வென்று கேட்டால் விமல் வீர­வன்ச போன்று “தெரி­யாது” எனத் திருப்பிக் கூறு­வார்கள் என்­பது மட்டும் உண்மை!

தெரண, சுவர்­ண­வா­ஹினி, ஹிரு போன்ற தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­க­ளிலும் வானொ­லி­க­ளிலும் இந்த 04 மாத கால­மாகப் பயன்­ப­டுத்­தப்­படும் சொற்­களில் ‘அடிப்­ப­டை­வாதம்’ என்­பது மிக அதி­க­மாகும். சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் கூட இந்த ஊட­கங்­க­ளுக்கு வழங்கும் நேர்­கா­ணலின் போதும் அடிப்­ப­டை­வா­தத்தை வஹா­பி­ஸத்­துடன் இணைத்து ‘வஹா­பிஸ அடிப்­ப­டை­வாதம்’ என்று கூறி­வ­ரு­வதை அவ­தா­னிக்­கலாம். இச்­சொல்லின் அர­சியல் என்­ன­வென்று ஆராய்­வ­தற்கு முன்னர் இதன் உள­வி­யலைப் புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது.

அடிப்­ப­டை­வாதம் என்­பது இலங்கை சூழலில் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்­டோரின் கருத்­தி­ய­லாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய வன்­மு­றை­யா­ளர்கள் அடிப்­ப­டை­வா­திகள் என்ற சொல்லால் அழைக்­கப்­ப­டு­கின்­றனர். ‘அடிப்­ப­டை­வாதம்’ என்ற பதம் கேட்­போரின் உள்­ளத்தில் ஒரு பயத்­தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதற்குப் பின்னால் ஒரு பூதம் இருப்­ப­தான ஒரு படிமம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. மனித குலத்தின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் ஒன்­றா­கவும் வெறுத்­தொ­துக்­கப்­பட வேண்­டிய ஒரு பிசா­சா­கவும் அது கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றது. கிட்­டத்­தட்ட பயங்­க­ர­வாதம், தீவி­ர­வாதம், பிரி­வி­னை­வாதம், வன்­முறை என்­ப­வற்­றுக்கு சம­மான பதம் போன்றே ஊட­கங்கள் இச்­சொல்லைக் கையாண்டு வரு­கின்­றன.

சம­கால சர்­வ­தேச ஊடக சொல்­லா­டல்­களில் (Media Discourse) வலம் வரும் சொற்கள் ஒவ்­வொன்­றுக்குப் பின்­னாலும் ஓர் அர­சியல் உள்­நோக்கு ஒட்டி இருக்­கி­றது. அத்­த­கைய சொற்­களில் ஒன்­றுதான் அடிப்­ப­டை­வாதம் ஆகும். 1920 ஆம் ஆண்­டிற்குப் பின்­னரே இச்சொல் புழக்­கத்­திற்கு வந்­தது. அந்த ஆண்­டி­லி­ருந்து இந்த சொல் பல்­வேறு அர­சியல், பொரு­ளா­தாரத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. எவ்­வா­றா­யினும் அடிப்­ப­டை­வா­தத்தின் வேர்கள் 19 ஆம் நூற்­றாண்டு வரை பின்­னோக்கிப் படர்­கி­றது. அதற்கு ஒரு நீண்ட வர­லாறும் அர­சியல், சமய பின்­பு­லமும் உள்­ளது. அதை ஓர­ளவு விளக்கிச் சொல்ல இந்தக் கட்­டுரை விழைகி­றது.

அடிப்­ப­டை­வா­தமும் இஸ்­லாமும்

“வொஷிங்­க­ட­னி­லுள்ள அமெ­ரிக்க காங்­கி­ரஸின் மாபெரும் நூல­கத்­திலோ அல்­லது ஐரோப்­பாவில் காணப்­படும் பெரும் நூல­கங்­க­ளிலோ உள்ள இஸ்­லா­மிய உலகம் தொடர்­பான தகவல் வங்­கியில் காணப்­படும் வெளி­யீ­டுகள் அடங்­கிய பகு­தி­களின் பொத்­தான்­களை அழுத்­தும்­போது அல்­லது கணி­னி­களின் தட்­டுக்­களைப் பிர­யோ­கிக்கும் இடத்து அவற்றில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் பற்­றிய ஆக்­கங்­களும் தக­வல்­களும் ஏனைய எல்­லா­வற்­றையும் விட அதி­க­மாக இருக்கும்”. இது John Esposito வின் வாச­க­மாகும். Islam and Terrorism என்ற நீண்ட கட்­டு­ரையில் அவர் இதனைச் சொல்­கிறார்.

கடந்த இரு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக, மேலைத்­தேய கல்வி வட்­டத்­திலும் வெகு­சன தொடர்பு ஊட­கங்­க­ளிலும், அமெ­ரிக்க, ஐரோப்­பிய செய்தி முகவர் வட்­டத்­திலும் “இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்” என்ற சொல்­லாடல் பெரு­ம­ளவு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக செப்­டெம்பர் 11 இற்குப் பின்னர் அடிப்­ப­டை­வாதம், பயங்­க­ர­வாதம், தீவி­ர­வாதம் என்ற சொல்­லா­டல்கள் ‘இஸ்­லா­மிய’ அடை மொழி­யுடன் இணைக்­கப்­பட்டே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
20 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் லெபனான் மற்றும் பொஸ்­னியா என்­ப­வற்றின் மீதான ஆயுத ஆக்­கி­ர­மிப்பு “இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்” என்ற போர்­வை­யி­லேயே நடந்­தே­றி­யது. 1990 களில் அல்­ஜீ­ரி­யாவில் இடம்­பெற்ற சுதந்­திரத் தேர்­தல்கள் மூலம் ஜன­நா­ய­க­வா­திகள் பெற்ற வெற்றிப் பெறு­பே­று­களை மூடி மறைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களும் எகிப்தில் ஜன­நா­யக மித­வாதக் கட்­சி­களின் தலை­வர்கள் மீது நிறை­வேற்­றப்­பட்ட மரண தண்­ட­னை­களும் ‘இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்’ என்ற பெய­ரில்தான்.

ஈராக்கின் அபூ­கரீப், சர்ச்­சைக்­கு­ரிய குவாண்­ட­னாமா சிறை­களில் குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் அடைக்­கப்­பட்டு அவர்கள் மீது குரூ­ர­மான சித்­தி­ர­வதை கட்­ட­விழ்க்­கப்­பட்­ட­மையும் அடிப்­ப­டை­வாதம் என்ற பெய­ரில்தான். இன்­றைய நாட்­களில் மேற்கு ஐரோப்­பா­விலும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­விலும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் மீதும் அவர்­க­ளது தலை­வர்கள் மீதும் இரா­ணுவ மற்றும் உள­வுத்­துறை கெடு­பி­டிகள் கூர்­மை­ய­டை­வ­தற்கு அடிப்­ப­டை­வா­தத்­தையே வல­து­சாரி அர­சாங்­கங்கள் ஒரு சாக்­காக முன்­னி­றுத்தி வரு­கின்­றன. இஸ்­லா­மிய பீதியின் (islamophobia) மையச் சர­டாக அடிப்­ப­டை­வா­தமே கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றது.

மேற்கு ஊட­கங்­க­ளிலும் மேற்­கத்­திய புல­மைத்­துவ வட்­டா­ரங்­க­ளிலும் இத்­த­கைய சொல்­லாடல் எப்­போது புழக்­கத்­திற்கு வந்­தது? இச்­சொல்­லா­டலை கண்­டு­பி­டித்­தவர் யார்? அது பயங்­க­ர­வா­தத்­திற்கும் தீவி­ர­வா­தத்­திற்கும் இணை­யான ஒன்­றாக காண்­பிக்­கப்­ப­டு­வதேன்? அடிப்­ப­டை­வாதம் குறித்து நமக்குள் எழும் அடிப்­ப­டை­யான வினாக்கள் இவை.

மேற்­கத்­தேய ஊடக வட்­டத்தில் 1970 களுக்குப் பின்­னரே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்ற சொல்­லாடல் (Discourse) முதன் முறை­யாகப் பயன்­பாட்­டுக்கு வந்­தது. குறிப்­பாக ஈரானில் நடந்த ‘ஷா’வுக்கு எதி­ரான கொமெய்­னியின் புரட்­சியின் பின்­னரே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்ற பதம் முஸ்லிம் உலகு பற்றி எழு­தப்­பட்ட மேலைய நாட்­ட­வர்­களின் கட்­டு­ரை­க­ளிலும் ஆய்­வ­றிக்­கை­க­ளிலும் பர­வ­லாக இடம்­பெ­ற­லா­னது. இச்­சொல்லைப் பயன்­ப­டுத்­துவோர் அதன் மூலம் எத்­த­கைய அர­சியல் குறிக்­கோள்­களை அடை­வ­தற்கு முயல்­கின்­றனர் என்­பது அடுத்த பத்­தாண்­டு­களில் பெரு­ம­ளவு விவா­தத்­திற்கும் உட்­பட்டு வந்­துள்­ளது.

வர­லாற்றைப் பின்­னோக்கிப் பார்க்­கையில் கி.பி.7 ஆம் நூற்­றாண்டில் அறபுத் தீப­கற்­பத்தில் எழுச்­சி­யுற்ற இஸ்லாம் அதன் முதல் நூற்­றாண்­டிற்குள் எட்­டிய உய­ரங்­களும் எய்த எழுச்­சியும் மேலை உலகை மெல்ல மெல்ல அச்­சத்தில் ஆழ்த்­தி­யது.

இடைக்­கா­லத்தில் நிகழ்ந்த சிலு­வைப்போர் ஐரோப்­பிய மனப்­பான்­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நிலை­யான பகை­மை­யையும் காழ்ப்­பு­ணர்­வை­யுமே தூண்­டி­யது. 13 ஆம் நூற்­றாண்டு முதல் 18 ஆம் நூற்­றாண்டின் முதல் அரைக் கூறுகள் வரை அர­சியல் இஸ்லாம் அகி­லத்தின் அரைப் பகு­தியை தனக்குள் ஈர்த்துக் கொண்­டது. வட ஆபி­ரிக்­காவில் மொரோக்கோ முதல் தென்­மேற்கு ஆசியா முழு­வதும் ஒரு விரிந்த நிலப் பரப்பை முஸ்­லிம்கள் ஆட்சி செய்­தனர். அது பிற சமூ­கங்­களின் மீது படை­யெ­டுத்தோ வன்­மு­றை­களைப் பிர­யோ­கித்தோ உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல. தன்­னெ­ழுச்­சி­மிக்க முஸ்லிம் உல­கத்தின் அறி­வியல், தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களால் அகி­லமே அனு­கூ­ல­ம­டைந்­தது.
எவ்­வா­றா­யினும் இக்­கா­லப்­ப­கு­தியில் முஸ்லிம் உலகு அடைந்­தி­ருந்த தரச் சிறப்பும் செழு­மை­­மிக்க நாக­ரிக வளர்ச்­சியும் அறி­வி­யல்­துறை முதிர்ச்­சியும் இஸ்­லா­மிய சமூ­கத்தின் மீதான மேற்­கு­லகின் குரோ­தத்­தையும் சமய ரீதி­யான பகை­மை­யையும் பெரு­ம­ளவு வளர்த்துவிட்­டது. 18 ஆம் நூற்­றாண்டில் முஸ்லிம் உலகு உள்­ளகப் பிள­வு­களால் சரிந்து கொண்­டி­ருப்­பதைக் கண்ட ஐரோப்­பாவின் மனப்­பான்­மையில் கால­னித்­துவ சிந்­தனை ஆழ ஊடு­ரு­வு­வ­தற்கு இந்த மதப் பகைமை மிகப் பெரிய தூண்­டு­த­லாக இருந்­தது.

18 ஆம் நூற்­றாண்டு வரை ஒன்­றி­ணைந்­தி­ருந்த அறபு – இஸ்­லா­மிய உலகை உடைத்துத் துண்­டாடி கால­னித்­துவ சக்­திகள் தமக்குள் பங்­கு­போட்டுக் கொண்­டன. அறபு இஸ்­லா­மிய உலகு மீது ஐரோப்­பிய கால­னித்­துவம் படிப்­ப­டி­யாக தனது பிடியை இறுக்கத் தொடங்­கி­யது. பொரு­ளா­தார மூல வளங்கள் கன­கச்­சி­த­மாகச் சூறை­யா­டப்­பட்­டன. நூல­கங்­களில் அறிவுப் பொக்­கி­ஷங்­க­ளாக விளங்­கிய நூல்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டன. முஸ்­லிம்­களின் பண்­பாட்டைச் சிதைக்கும் தந்­தி­ரங்கள் நடை­மு­றைக்கு வந்­தன. கல்வி நிலை­யங்­களில் ஐரோப்­பிய மதச்­சார்­பின்­மையும் நாஸ்­தி­கமும் மத விரோ­தமும் போதிக்­கப்­பட்­டன. இந்தச் காட்சி சுமார் 150 ஆண்­டு­க­ளுக்கு நீடித்­தது.

வட ஆபி­ரிக்­காவின் பெரும்­ப­குதி, அல்­ஜீ­ரியா, தூனி­ஸியா, மொராக்கோ என்­பன பிரான்ஸின் கால­னி­க­ளாக ஆக்­கப்­பட்­டன. லிபி­யாவை இத்­தாலி தன் வசம் வைத்துக் கொண்­டது. எகிப்தில் பிரிட்­டிஷ்­கா­ரர்கள் நிலை­கொண்­டனர். சூடானும் பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­தி­யத்தின் கீழ் திணறிக் கொண்­டி­ருந்­தது. தென்­கி­ழக்­கா­சி­யாவில் உலகின் மிகப்­பெரும் முஸ்லிம் நாடான இந்­தோ­னே­சியா மற்றும் மலே­சியா ஒல்­லாந்­தர்­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தன. அறபு – முஸ்லிம் உலகின் பொரு­ளா­தார வளங்­களை ஒன்­றரை நூற்­றாண்டு காலம் விழுங்கி ஏப்பம் வீட்டுக் கொண்­டி­ருந்த கால­னித்­துவ சக்­தி­க­ளுக்கு இன்­னொரு தேவை எழுந்­தது.

அறபு– முஸ்லிம் மக்­களின் பண்­பாட்­டையும் கலா­சாரப் பெறு­மா­னங்­க­ளையும் இழி­வு­ப­டுத்­து­வ­தற்கும் அவற்றை பிறர் வெறுத்­தொ­துக்­கு­வ­தற்­கு­மான ஒரு மனோ­பா­வத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய அந்த தேவைக்­காக, அவர்கள் கீழைத்­தே­ய­வாதம் (Orientalism) எனும் ஒரு பக்­க­வாத்­தி­யத்தை பண உதவி வழங்­கியே துணைக்கு அழைத்­தனர்.

ஏகா­தி­பத்­தி­யத்தின் கைக்­கூ­லி­க­ளான மேலைய ஆய்­வ­றி­வா­ளர்கள் அறபு – இஸ்­லா­மிய உலகின் மொழி, கலா­சாரம் வர­லாறு, மதம் குறித்து ஆய்வு என்ற பெயரில் கொட்­டிய குப்பை கூழங்­களும், குரோதம் நிறைந்த எழுத்­துக்­களும் கீழை­ய­வாதம் எனப்­ப­டு­கின்­றது. 20 ஆம் நூற்­றாண்டின் முதற் கூறு­களில் முஸ்லிம் உலகு கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்ற பின்­னரும் கீழைத்­தே­ய­வா­தத்தின் அறி­வியல் அயோக்­கி­யத்­த­னத்­தி­லி­ருந்து அது விடு­தலை பெற­வில்லை.

கீழைத்­தே­ய­வாதம் தொடர்ந்து ஏகா­தி­பத்­தி­யத்தின் அடி­வ­ரு­டி­யாக செயற்­பட்டு வந்­தது. இஸ்லாம் பற்­றியும், இஸ்­லா­மியக் கோட்­பா­டுகள் பற்­றியும் உருச்­சி­தைந்த விம்­பங்­களை உரு­வாக்­கு­வ­துதான் அதன் முதல் வேலை. விசு­வாசக் கோட்­பாட்டின் தூய்­மையை மாசு­ப­டுத்­து­வதும் அர­சியல் இஸ்லாம் மற்றும் இஸ்­லாத்தின் ஐக்­கியக் கோட்­பாட்டில் முஸ்லிம் உலகு ஒன்­று­ப­டாமல் பார்த்துக் கொள்­வ­தும்தான் அதன் அடுத்த இலக்கு.

யூத, கிறிஸ்­தவ ஆய்வு முகாம்­களைச் சேர்ந்த இத்­த­கைய புல­மை­யா­ளர்கள் பலர் சியோ­னிஸ வலைப்­பின்­னலில் இணைந்­த­வர்கள். அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இயங்­கி­வரும் மத்­திய கிழக்­கிற்­கான ஆய்வு மையங்­களில் (Middle East Study Centres) இத்­த­கைய ஆய்வுப் பிர­ப­லங்கள் பணிக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். பிராந்­திய புவி அர­சியல் (Regional Geo – Politics) நலன்­களைத் தக்க வைக்க முயலும் சக்­தி­களின் எடு­பி­டி­க­ளா­கவே இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர். அமெ­ரிக்­காவின் பிர­பல வணிக நிறு­வ­னங்­க­ளுக்கும் கிறிஸ்­தவ மதப்­பி­ர­சார அமைப்­பு­க­ளுக்கும் ஸியோ­னிச சூழ்ச்சிக் குழுக்­க­ளுக்கும் இந்த ஆய்­வா­ளர்­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன.

1990 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் ஹார்வாட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் தலைவர் Nadawsafran என்­ப­வரும் அதே பல்­கலைக் கழ­கத்தில் இயங்­கி­வரும் சர்­வ­தேச உற­வு­க­ளுக்­கான மையம் (Centre for International Relations) பணிப்­பா­ள­ரான Samuel P.Huntington என்­ப­வரும் இணைந்து இஸ்­லா­மிய உலகம் குறித்து ஆய்­வொன்றை மேற்­கொண்­டனர்.

அமெ­ரிக்­காவின் மத்­திய உளவு நிறு­வ­ன­மான சி.ஐ.ஏ. வின் வேண்­டு­கோளின் பெய­ரி­லேயே இவ்­வாய்வு நடை­பெற்­றது. நிதி­யா­த­ரவு வழங்­கி­யது சி.ஐ.ஏ. மட்­டும்தான். அதன் தொடரில் பேரா­சி­ரியர் சப்ரன் ‘இஸ்­லா­மிய அடிப்­படை வாதம்’ குறித்து மாநா­டொன்றை ஏற்­பாடு செய்தார். இதற்கு சி.ஐ.ஏ. 45000 அமெ­ரிக்க டொலர்­களை ஒதுக்­கி­யது. இம்­மா­நாட்டின் கலந்­து­ரை­யா­டல்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வரு­டாந்த அறிக்­கை­யாக வெளி­யா­னது.

அறபு – முஸ்லிம் நாடு­களில் காலா­கா­ல­மாக இருந்து வரும் பாரம்­ப­ரிய அதி­கார பீடங்கள் ஆட்­டங்­காணத் தொடங்­கு­வது குறித்தும் புதிய ஜன­நா­யக சக்­திகள் களத்­திற்கு வரு­வ­தையும் அந்த ஆய்வு மாநாட்டு அறிக்கை எச்­ச­ரித்­தி­ருந்­தது. அறபு உலகில் பல தசாப்­தங்­க­ளாக நீடித்து வரும் குடும்ப ஆட்சி மற்றும் ஜன­நா­யக விரோத இரா­ணுவச் சர்­வ­தி­காரம் என்­ப­வற்­றுக்­கெ­தி­ராக கிளர்ந்­தெழும் ஜன­நா­யக ஆத­ரவு சக்­தி­க­ளையே இன்­று­வரை மேலைய ஊட­கங்­களும் ஆட்சி இயந்­தி­ரங்­களும் ‘அடிப்­ப­டை­வா­திகள்’ என பிர­சாரம் செய்து வரு­கின்­றன.

அற­பு­லகில் ஜன­நா­யகம் மலர்­வதை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் சக்திகளை அடிப்படைவாதிகள் என ஊடகங்கள் முத்திரை குத்துவதற்கு ஏதுவான காரணிகள் மேலைய குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய அரசுகளிடம் உள்ளன. ஜனநாயக விழிப்பு அல்லது பொதுவான அரசியல் விழிப்பு என்பதை அமெரிக்காவும், பிற மேலைய சக்திகளும் தமக்கு விடுக்கப்படும் ஓர் அச்சுறுத்தலாகவே கருதுகின்றன. மத்திய கிழக்கின் வளமான எண்ணெய் வளங்கள் மீது அச்சக்திகள் கொண்டுள்ள பிடியும் அறபு அரசுகள் மீது அவை கொண்டுள்ள செல்வாக்கும் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இதற்கான காரணமாகும். அதனால் ஜனநாயக அரசியல் மாற்ற செயன் முறையை (Democratic Transitional Process) இஸ்லாமிய மதச் சாயம் பூசிய ஒரு பூதமாகக் காண்பித்து, சுமாராக அதனை பயங்கரவாதத்திற்கு சமமான ஒன்றாகவே கட்டமைக்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் முயல்கின்றனர்.
‘இஸ்லாமிய சக்தியை’ முறியடிக்கவும் மேலைய உலகின் மறு காலனியத்தை (Re – colonization) நிலை நாட்டவும், சமகாலத்தில் கையாளப்படும் மிகப் பலம் வாய்ந்த கருவியே மேற்கத்தேய ஊடகங்களின் பிரசார ஆயுதமாகும்.

முஸ்லிம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரவாகிக்கும் அரசியல் விழிப்பு குறித்தும், அதன் புவியியல்சார் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் வாடகைக்கு அமர்த்தும் ஆய்வு நிபுணர்களின் துணையுடன் மேற்கொள்ளும் ஆய்வுகளை உருமாற்றி ஓர் அச்சுறுத்தலாகக் கட்டமைப்பதில் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன. அந்தப் பின்னணியில் அடிக்கடி ஊடகங்களால் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லே அடிப்படைவாதம் ஆகும். இந்த சொல்லாடலின் அரசியல் பின்புலம் இதுதான்.

ஆனால், இந்த சொல் அடிப்படையில் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. மாறாக கிறிஸ்தவ மத அடிப்படைகளோடு பின்னிப்பிணைந்தது. அதனை அடுத்துவரும் பத்தியில் நோக்குவோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.